search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பள்ளி மாணவி மர்மமரணம்- மேலும் 2 ஆசிரியைகள் இன்று அதிரடியாக கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சின்னசேலம் பள்ளி மாணவி மர்மமரணம்- மேலும் 2 ஆசிரியைகள் இன்று அதிரடியாக கைது

    • கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சின்னசேலம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இவர் கடந்த 13-ந்தேதி பள்ளி விடுதியில் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது.

    பதறிபோன ஸ்ரீமதியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர். தங்களது மகள் சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சின்னசேலம் போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து 5 நாட்களாக போராட்டம் செய்தனர்.

    இதற்கிடையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாணவி ஸ்ரீமதி உயிரிழக்கும் முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது கை-கால்கள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டம் செய்தனர்.

    தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதிஅளித்ததின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையில் மாணவியின் மர்மமரணம் விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. நேற்று காலை மாணவியின் உறவினர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கனியாமூரில் உள்ள பள்ளி முன்பு திரண்டனர். திடீரென்று அவர்கள் பள்ளிக்குள் புகுந்தனர். அப்போது போலீசார் தடுப்புக் கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்தனர். அதனையும் மீறி போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் செல்ல முயற்சித்ததால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

    ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சேலம் போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உள்பட 67 போலீசார் காயம் அடைந்தனர்.

    என்றாலும் போராட்டம் தணியவில்லை. நேரம் செல்ல செல்ல கலவரமாக மாறியது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை. பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு நின்றிருந்த பள்ளி பஸ்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதில் 15 பஸ்கள், 4 டிராக்டர்கள், 3 போலீஸ் ஜீப்புகள் எரிக்கப்பட்டன.

    இதையடுத்து பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வஜ்ரா வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். அதன் பின்னரும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசாரின் வஜ்ரா வாகனத்தையும் கலவரக்கும்பல் சேதப்படுத்தியது.

    எனினும் நிலைமை மோசமானதால் போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலவரக் கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 3 மணிக்கு பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.

    தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சின்னசேலம் விரைந்தார்.

    அப்போது அவர் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    எனினும் சட்டம்-ஒழுங்கை கருதி சின்னசேலம், கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பள்ளி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சந்தேகப்படும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.ஜி.பி.யின் அதிரடி நடவடிக்கையால் பள்ளி தாளாளர் ரவிக்குமார் (48), பள்ளி செயலாளர் சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன் (57) ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி வேதியியல் ஆசிரியர் ஹரிபிரியா (40), கணித ஆசிரியை கீர்த்திகா (28) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது சந்தேக மரணம் 177 (ஐ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×