search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery theft"

    காங்கயத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தி.மு.க. பெண் பிரமுகர் வீட்டில் வைர நகை மற்றும் பணம் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம்- ஈரோடு சாலை வரதப்பம் பாளையத்தை சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி பவித்ரவள்ளி. இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ஹரி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் ஹரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 2 வைர வளையல், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    வெளியூர் சென்று வீடு திரும்பிய ஹரி தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.

    இந்த திருட்டு தொடர்பாக பவித்ரவள்ளி வீட்டில் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தான் வைர நகை -பணத்தை திருடி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இரணியல் அருகே டெம்போ டிரைவர் வீட்டில் பீரோவில் இருந்த 1¾ பவுன் நகையை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த களியங்காடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 34). இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது.

    அங்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு பவுன் செயின் ஒன்று, ¾ பவுனில் ஒரு ஜோடி கம்மல் ஆகியவற்றை வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் பீரோக்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது.

    வீட்டில் ஆட்கள் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளதா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 16 பவுன் நகையை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை காந்தி ரோட்டில் வசிப்பவர் அசன்மைதீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரசிதாபானு. இவர் தந்தை இறந்து விட்டதால், வீட்டை பூட்டி விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு வீட்டிற்கு வந்த ரசிதாபானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.

    மேலும் அதில் இருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
    குன்னம் அருகே ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி(வயது 40). இவர் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். முத்துசாமி வீட்டுடன் இணைந்த கடை வைத்து நடத்தி வருகிறார். செந்தமிழ்ச்செல்வி மேலமாத்தூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் தனது மொபட்டில் வந்து செல்வது வழக்கம். இவர் நகை அணிந்து தனியாக மொபட்டில் வந்து செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை செந்தமிழ்ச்செல்வி தனியாக தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அப்போது ஒதியம் சமத்துவபுரத்தில் இருந்து 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேரும், பனிக் குல்லா அணிந்த 2 பேரும் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    சமத்துவபுரம் தாண்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செந்தமிழ்செல்வியை ஓரம்கட்டி மொபட்டில் இருந்து கீழே ஓடையில் தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி தாலி சங்கிலி, 2 தங்க சங்கிலிகள் என மொத்தம் 9 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.

    மேலும் காதில் அணிந் திருந்த தோட்டை அறுத்து எடுக்க முற்பட்டபோது வேன் ஒன்று அந்த வழியாக வந்ததால் அப்படியே ஆசிரியை விட்டு விட்டு 9 பவுன் நகைகளுடன் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    காணை அருகே தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து 8½ பவுன் நகையை திருடி சென்றனர்.
    விழுப்புரம்:

    காணை அருகே உள்ள ஆரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 39), செங்கல் சூளை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அதே கிராமத்தில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் மணிகண்டன் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில், அதில் வைத்திருந்த 8½ பவுன் நகையை காணவில்லை. மணிகண்டன் குடும்பத்தினர் வேலைக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1¾ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் புதிய வீட்டு வசதி வாரியம் அருகில் சத்யசாய் நகரில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா பாப்பாரப்பட்டி நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெருமாள் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 1½ லட்சம் ரூபாய், 25 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் எனக்கூறப்படுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதே போல கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    வீட்டின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே இறங்கி கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    திருவண்ணாமலை அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.21 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர் அருகே பீரோவை உடைத்து 30 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கவிதா (வயது 35). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. சுப்பிரமணியன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் விவசாய கூலி வேலைக்கு சென்று கவிதா குடும்பம் நடத்தி வருகிறார்.

    2 குழந்தைகளும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டை பூட்டி விட்டு கவிதா வேலைக்கு சென்றார். வீட்டை பூட்டிய கவிதா சாவியை பள்ளி சென்று மாலையில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு தெரியும்படி வீட்டின் முன்புற சுவற்றில் வைத்து இருந்தார். வேலை முடிந்து வீடு திரும்பிய கவிதா கதவுகள் திறந்து கிடந்ததால் குழந்தைகள் பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்திருப்பார்கள் என்று எண்ணத்தில் வீட்டின் உள்ளே நுழைந்தார். ஆனால் குழந்தைகள் இல்லை.

    அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு கவிதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராசிபுரம் அருகே, விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 26¾ பவுன் நகை திருட்டு போனது. இது தொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50), விவசாயி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ராஜா (25) என்ற மகன், ஜெயம்மாள் என்ற மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. என்ஜினீயரான ராஜா கோவையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் தங்கவேல், அவருடைய மனைவி, மருமகள் ரம்யா ஆகியோர் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கவேல் மனைவியுடன் அதே பகுதியில் உள்ள அவர்களது தோட்டத்துக்கு சென்று விட்டார். மருமகள் ரம்யாவும் 8.30 மணியளவில் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    மாலையில் ரம்யா வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தது.

    பீரோவில் இருந்த 26¾ பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரம்யா தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். அதேபோல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது அங்கும், இங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள அம்புஜவல்லிபேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி கலா (வயது 37). இவர் சம்பவத்தன்று இரவு மாமியார், குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் தூங்கிக்கொண்டிருந்த கலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன், திருடன் என சத்தம்போட்டார். இதனால் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் எழுந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்து விட்டதால் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் செல்லாயிபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பச்ச மலையான் கோட்டை பிரிவு அருகே செல்போன் அழைப்பு வந்ததால் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பழனியம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தங்க சங்கிலியுடன் தப்பி சென்றனர்.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தாவூத்உசேன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இப்பகுதியில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி நகை பறிக்கும் கொள்ளை கும்பலை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஓசூரில் வீடு புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே பேடரப்பள்ளி நந்தவன லே-அவுட் பகுதியை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி, இரவு மர்ம ஆசாமிகள் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்பேரில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேல்(வயது 35) என்பவரை போலீசார் நேற்று, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் சக்திவேலிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளியை பிடித்து, நகைகளை மீட்ட சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பாராட்டி, பரிசு வழங்கினார். 
    ×