search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee death"

    ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியா புரத்தைச் சேர்ந்தவர் பரமன் (வயது38), கட்டிட தொழிலாளி. இவர் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் புறப்பட்டார்.

    சங்கரன்கோவில் சாலையில் முதுகுடி விலக்கு பகுதியில் பரமன் வந்தபோது எதிரே மினிலாரி வந்தது. மதுரையில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவில் சென்ற அந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அதே வேகத்தில் முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மினிலாரி மோதியது. இந்த விபத்தில் பரமன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆம்புலன்சு வருவதற்குள் பரமன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் காயம் அடைந்தவர்கள் சாலை போடும் பணி சூப்பர்வைசர் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (44), விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி மணி (24) என தெரியவந்தது.

    விபத்துக்கு காரணமான மினி லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையில் ஆம்புலன்சு தாமதமாக வந்ததால் தான் பரமன் இறந்து விட்டார் என கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார்.

    போடி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உடல் நசுங்கி பலியானார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். வடிவேல் இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகில் உள்ள மூலத்துறை எஸ்டேட்டில் தோட்ட காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது வனப்பகுதியில் இருந்து ஒரு யானை உள்ளே புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் யானையை விரட்ட முயன்றார்.

    ஆனால் அந்த யானை ஆக்ரோசத்துடன் வடிவேலை தூக்கி வீசியது. மேலும் அருகில் இருந்த பள்ளத்தில் போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே வடிவேல் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வடிவேலின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் குவிந்தனர். யானையின் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி பூப்பாறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான வடிவேல் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    வடிவேலின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் கார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம், வேப்பனம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்குமார் (வயது 34). இவர் சேலம்- நாமக்கல் ரோட்டில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு சுபாஷ்குமார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.  அவர் திருச்சி சாலையில் ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே ஒருவர்  மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தார்.

    அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் திடீரென நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் சுபாஷ்குமார் தலை, முகத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபதாக உயிரிழந்தார். 

    விபத்து நடந்த தகவல் அறிந்ததும் நாமக்கல் டவுன் போலீசார் விரைந்து வந்து சுபாஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு திருமணம் ஆகி அருள்மொழி என்ற மனைவியும், 5 வயதில் ரமணஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 3 வயதில் விக்னேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். 
    விபத்தில் கணவர் இறந்த தகவலை அறிந்ததும் அருள்மொழி மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதார். இந்த சம்பவத்தினால் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    செங்கல் சூளையில் தலை துண்டித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிசங்குளம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் அதே பகுதியில் நாராயணன் என்பவர் நடத்தி வரும் சிமெண்டு செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். பாலமுருகனுக்கு வள்ளி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    வழக்கம் போல் பாலமுருகன் வேலைக்கு சென்றார். அவர் தொழிற்சாலையில் உள்ள செங்கல் தயாரிக்கும் அச்சு எடுக்கும் எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக “ஏர் கம்ப்ரசர்” லீக் ஆகி எந்திரம் செயல் பட தொடங்கியது. பால முருகனின் தலை எந்திரத்தில் சிக்கியது. இதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் வெற்றிவேல் (வயது 26). இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கோலாபட்டியில் தங்கி இருந்து அங்குள்ள கோழி பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கோழிபண்ணையை மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது.

    இதனையடுத்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் எடுத்து சுத்தம் செய்வதற்காக வெற்றிவேல் ஜெனரேட்டர் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் (43). சம்பவத்தன்று இவர் வாட்டர் ஹீட்டர் மூலம் சுடுதண்ணீர் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் உடல் கருகி படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நடராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×