search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
    X

    போடி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

    போடி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உடல் நசுங்கி பலியானார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். வடிவேல் இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகில் உள்ள மூலத்துறை எஸ்டேட்டில் தோட்ட காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது வனப்பகுதியில் இருந்து ஒரு யானை உள்ளே புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் யானையை விரட்ட முயன்றார்.

    ஆனால் அந்த யானை ஆக்ரோசத்துடன் வடிவேலை தூக்கி வீசியது. மேலும் அருகில் இருந்த பள்ளத்தில் போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே வடிவேல் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வடிவேலின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் குவிந்தனர். யானையின் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி பூப்பாறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான வடிவேல் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    வடிவேலின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×