search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant attack"

    போடி அருகே யானை தூக்கி வீசியதில் தோட்ட காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி புதூர் 1-வது வார்டைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 65). இவர் போடி மெட்டு அருகே உள்ள தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள புதுப்பாறை எஸ்டேட்டில் தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை தோட்டத்தில் இருந்த போது வனப்பகுதியில் இருந்து அதிக சத்தமிட்டபடி யானை அங்கு புகுந்தது. இதை பார்த்ததும் பரமசிவம் அதனை விரட்ட முயன்றார். ஆனால் யானை தனது தும்பிக்கையால் பரமசிவத்தை தூக்கி வீசியது. பின்னர் அவரை மிதித்து பயங்கர சத்தம் போட்டது.

    இதனால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து யானையை விரட்டும் பணியில் இறங்கினர். சிறிது நேரம் அதே இடத்தில் சுற்றித் திரிந்த யானை பின்னர் அங்கிருந்து சென்றது.

    இதில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இறந்தவர் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே போல் யானை தாக்கி தோட்ட காவலாளி உயிரிழந்தார். தற்போது மீண்டும் அதே போல் மற்றொரு பலி நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    எனவே தோட்டத்துக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் யானை நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

    கடந்த 11-ந் தேதி காலை கோவிந்தசாமி மற்றும் அவரது தம்பி குப்புசாமி (50) மற்றும் சிலர் மீன் பிடிப்பதற்காக மோர்தானா அணை பகுதியில் ஓரமாக சென்றனர். அப்போது, காட்டிற்குள் இருந்து வந்த ஒற்றை யானை பிளியறியபடி அவர்களை விரட்டியது. இதில் யானை தாக்கியதில் கோவிந்தசாமி படுகாயமடைந்தார்.

    அவருக்கு மார்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை உடன்வந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    கூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மனித-விலங்குகள் மோதல் நடந்து வருகிறது.

    இதில் யானை தாக்கி பலர் இறந்து விட்டனர். இந்நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக வனப்பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளது. மேலும் வனத்தையொட்டி உள்ள கிராமங்களிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதியில் யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கூடலூர் சீபோர்த் என்ற பகுதியை சேர்ந்த சரோஜினி(60) என்ற மூதாட்டி அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது புதர்மறைவில் இருந்த ஒரு யானை திடீரென துதிக்கையை வெளியே நீட்டி மூதாட்டியை கீழே தள்ளி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார்.

    சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் யானையை விரட்டினர். தொடர்ந்து படுகாயம் அடைந்த சரோஜினியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜினி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூடலூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே தோட்டத்தில் காவலுக்காக சென்ற மூதாட்டி மீது காட்டுமாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    போடி:

    போடி அருகே முத்துக்கோம்பை பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மாங்காய், தென்னை, இலவங்காய் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுயானை, மாடுகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கடந்த வாரம் யானை தாக்கியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் முத்துக்கோம்பையை சேர்ந்த மாயக்காள் (வயது75) என்பவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலுக்காக சென்றார். அப்போது அங்கு புகுந்த காட்டுமாடுகள் அவரை முட்டி தூக்கி எரிந்தது. இதில் படுகாயமடைந்த மாயாக்காள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகளால் தொடர்ந்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    போடி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உடல் நசுங்கி பலியானார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். வடிவேல் இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகில் உள்ள மூலத்துறை எஸ்டேட்டில் தோட்ட காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது வனப்பகுதியில் இருந்து ஒரு யானை உள்ளே புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் யானையை விரட்ட முயன்றார்.

    ஆனால் அந்த யானை ஆக்ரோசத்துடன் வடிவேலை தூக்கி வீசியது. மேலும் அருகில் இருந்த பள்ளத்தில் போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே வடிவேல் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வடிவேலின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் குவிந்தனர். யானையின் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி பூப்பாறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான வடிவேல் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    வடிவேலின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தேவாரம் அருகே யானை தூக்கி வீசியதில் தோட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம், போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை அடிக்கடி நடமாடி வருகிறது. மேலும் இந்த யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் தோட்டத்துக்கு காவல் செய்யும் நபர்களை தாக்கியும் வருகிறது.

    தேவாரம் மலையடிவாரப் பகுதியில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கரில் கடலை விவசாயம் நடந்து வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள கடலைச்செடிகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வந்தன.

    தேவாரத்தை சேர்ந்த சேகர் (வயது62) என்பவர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு 10 மணி வரை காட்டு பன்றிகளை விரட்டிவிட்டு சேகர் தூங்க சென்று விட்டார். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த மக்னா யானை அங்கிருந்த சேகரை கட்டிலோடு தூக்கி வீசியது.

    இதில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று அதிகாலை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு உத்தமபாளையம் வன அதிகாரி, போடி டி.எஸ்.பி. பிரபாகரன், மனோகரன், ஆர்.டி.ஓ. ஆகியோர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்குள்ள காட்டுப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை நாசம் செய்து வருகின்றன.

    இதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்கள் ஏந்தியும் விரட்டி வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக போளூவாம்பட்டி வனசரக பகுதியில் 5 வயது குட்டி யானையுடன் பெண் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் இந்த யானைகள் நேற்று நள்ளிரவு தொண்டாமுத்தூர் அருகே உள்ள சின்ன ஆறு பகுதியில் நஞ்சம்மாள் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தின்றது. பின்னர் தோட்டத்து வீட்டிற்கு வந்தது. வீட்டில் நஞ்சம்மாளும், அவரது பேரனும் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். வீட்டின் கதவை யானைகள் உடைத்தது.

    யானைகள் சத்தம் கேட்டதும் நஞ்சம்மாளும் அவரது பேரனும் பீரோவின் பின்னால் ஒளிந்து கொண்டனர். பின்னர் யானைகள் நஞ்சம்மாள் வீட்டின் வெளியே வைத்திருந்த புண்ணாக்கு மூட்டையை உடைத்து புண்ணாக்கை தின்று விட்டு அங்கிருந்து சென்றது.

    இன்று காலை சின்ன ஆறு பகுதியில் பெண் யானை தனது குட்டியுடன் சுற்றி வந்தது. அப்போது 25 வயது மதிக்க தக்க வாலிபர் அந்த வழியாக நடந்து சென்றார்.

    அவரை பெண் யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போளூவாம் பட்டி வன சரக அலுவலர் பழனிராஜா மற்றும் வன ஊழியர்கள் சின்ன ஆறு பகுதிக்கு சென்றனர். யானை தாக்கி இறந்த வாலிபர் உடலை பார்வையிட்டனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.யானை தாக்கி இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடுமலை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை காட்டு யானை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி வனச்சரகத்தில் உள்ள தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பரமன் (69) . கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை பரமனை தூக்கி வீசியது. அவர் உயிர் தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை துரத்தி தாக்கியது. இதில் பரமன் படுகாயம் அடைந்தார் அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    பொதுமக்கள் கூட்டமாக வருவதை பார்த்த யானை காட்டுக்குள் சென்று விட்டது. படுகாயம் அடைந்த பரமனை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×