search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி வாலிபர் பலி
    X

    தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி வாலிபர் பலி

    தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்குள்ள காட்டுப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை நாசம் செய்து வருகின்றன.

    இதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்கள் ஏந்தியும் விரட்டி வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக போளூவாம்பட்டி வனசரக பகுதியில் 5 வயது குட்டி யானையுடன் பெண் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் இந்த யானைகள் நேற்று நள்ளிரவு தொண்டாமுத்தூர் அருகே உள்ள சின்ன ஆறு பகுதியில் நஞ்சம்மாள் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தின்றது. பின்னர் தோட்டத்து வீட்டிற்கு வந்தது. வீட்டில் நஞ்சம்மாளும், அவரது பேரனும் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். வீட்டின் கதவை யானைகள் உடைத்தது.

    யானைகள் சத்தம் கேட்டதும் நஞ்சம்மாளும் அவரது பேரனும் பீரோவின் பின்னால் ஒளிந்து கொண்டனர். பின்னர் யானைகள் நஞ்சம்மாள் வீட்டின் வெளியே வைத்திருந்த புண்ணாக்கு மூட்டையை உடைத்து புண்ணாக்கை தின்று விட்டு அங்கிருந்து சென்றது.

    இன்று காலை சின்ன ஆறு பகுதியில் பெண் யானை தனது குட்டியுடன் சுற்றி வந்தது. அப்போது 25 வயது மதிக்க தக்க வாலிபர் அந்த வழியாக நடந்து சென்றார்.

    அவரை பெண் யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போளூவாம் பட்டி வன சரக அலுவலர் பழனிராஜா மற்றும் வன ஊழியர்கள் சின்ன ஆறு பகுதிக்கு சென்றனர். யானை தாக்கி இறந்த வாலிபர் உடலை பார்வையிட்டனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.யானை தாக்கி இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×