search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே யானை தூக்கி வீசியதில் தொழிலாளி பலி
    X

    போடி அருகே யானை தூக்கி வீசியதில் தொழிலாளி பலி

    போடி அருகே யானை தூக்கி வீசியதில் தோட்ட காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி புதூர் 1-வது வார்டைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 65). இவர் போடி மெட்டு அருகே உள்ள தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள புதுப்பாறை எஸ்டேட்டில் தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை தோட்டத்தில் இருந்த போது வனப்பகுதியில் இருந்து அதிக சத்தமிட்டபடி யானை அங்கு புகுந்தது. இதை பார்த்ததும் பரமசிவம் அதனை விரட்ட முயன்றார். ஆனால் யானை தனது தும்பிக்கையால் பரமசிவத்தை தூக்கி வீசியது. பின்னர் அவரை மிதித்து பயங்கர சத்தம் போட்டது.

    இதனால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து யானையை விரட்டும் பணியில் இறங்கினர். சிறிது நேரம் அதே இடத்தில் சுற்றித் திரிந்த யானை பின்னர் அங்கிருந்து சென்றது.

    இதில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இறந்தவர் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே போல் யானை தாக்கி தோட்ட காவலாளி உயிரிழந்தார். தற்போது மீண்டும் அதே போல் மற்றொரு பலி நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    எனவே தோட்டத்துக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் யானை நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×