search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dengue fever"

    • டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பெருங்குடி பகுதியில் மட்டும் சுமார் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மழைக்காலங்களில் ஏரியை ஒட்டியுள்ள சாலையில் தேங்கும் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏரியும் அசுத்தமாக மாறி வருகிறது.

    சென்னையில் ஏரிகளையொட்டியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு என்பது அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏரியும் சுகாதார கேட்டின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது.

    பெருங்குடி ஏரி 57 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஒரு காலத்தில் அந்த பகுதியில் இருந்த விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரி தற்போது அந்த பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் சமீப காலமாக பெருங்குடி ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் குப்பைமேடாக காட்சி அளித்து வருகின்றன. கிழக்கு மற்றும் வடக்கு பெருங்குடி பகுதிகளை இணைக்கும் ஏரியை ஒட்டியுள்ள சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறி இருக்கிறது.

    அந்த பகுதியில் கட்டுமான பொருட்கள், குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு இந்த சாலையின் ஒரு பகுதி சேதமானதையடுத்து அங்குள்ள மக்கள் ஏரியையொட்டிய சாலையை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். இதன் பிறகே பெருங்குடி ஏரியை ஒட்டி உள்ள சாலை குப்பைமேடாக மாறி இருக்கிறது.

    அந்த பகுதியில் உள்ள கடைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கடைகளில் சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மழைக்காலங்களில் குப்பைகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி செய்யும் இடமாகவும் அந்த பகுதி திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பெருங்குடி பகுதியில் மட்டும் சுமார் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மழைக்காலங்களில் ஏரியை ஒட்டியுள்ள சாலையில் தேங்கும் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏரியும் அசுத்தமாக மாறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய பசுமை ஆணையம் கடந்த 2021-ம் ஆண்டு இந்த ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் இந்த பகுதியில் சேரும் குப்பைகளால் பெருங்குடி ஏரி மாசுபடுவது தொடர்கதையாகி இருப்பதாகவே அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    ஏரியை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும் என்பதே பெருங்குடி மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    • டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது.
    • நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

    ஹனோய்:

    வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மாதம் இறுதி வரை ஒரு வாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த மாதம் தொடங்கியது முதல் இருமடங்காக உயர ஆரம்பித்துள்ளது. இதுவரை டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தலைநகரான ஹனோயில் மட்டும் 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட மூன்று மடங்கு அதிகம் என சுகாதார துறையினர் கூறுகிறார்கள். மேலும் தாச் தட், ஹோங் மாய், தான் ட்ரை, ஹா டோங் போன்ற நகரங்களில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தலைநகரில் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு காரணமாக வியட்நாமில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்த வருடத்தில் மட்டும் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 3பேரும், கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 5 பேரும் உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹரிராஜ் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஹரிராஜ் (வயது 19). இவர் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அறந்தாங்கி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் டெங்கு பாதிப்பு உள்ளதாக கூறினார்.

    அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஹரிராஜ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

    இதை தொடர்ந்து ஹரிராஜின் உடல் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்பு மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. ஹரிராஜின் உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.

    டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைக் குணப்படுத்த மருத்துவமனையில் போதுமான வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு சார்பில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக பதிவாகி வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏற்கனவே உள்ள வார்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர், பூவரசக்குடியை சேர்ந்த 26 வயது பெண், கருவிடைசேரியை சேர்ந்த 24 வயது பெண் ஆகிய 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக 137 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைக் குணப்படுத்த மருத்துவமனையில் போதுமான வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் காய்ச்சலுக்காக வருவோரை உடனடியாகப் பரிசோதனை செய்யவும், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர்.

    • டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
    • கிராம பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு கட்டமாக குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அகிலா உத்தரவின் படி தினந்தோறும் குறிஞ்சிப்பா டி வட்டாரத்தி ற்குட்பட்ட கிராம பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது. நேற்று கருங்குழி கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் (பொறுப்பு) பாண்டியராஜூ தலை மையில் சுகாதார ஆய்வா ளர் . கனகரத்தினம் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மேற்கொள்ள பட்டது.காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டா ல் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள டாக்டர்களை அணுகி சிகிச்சை மற்றுமி ஆலோசனை பெற வேண்டும் என வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். கனிமொழி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதேபோல குறிஞ்சி ப்பாடி வட்டாரம் பொன்ன ங்குப்பம் கிராமத்திலும் கொசு ஒழிப்பு பணிகள்

    நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் (பொறுப்பு) பாண்டியராஜூ தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் . ஜெயச்சந்திரன் மற்றும் கலாநிதி ஆகியோர் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொ ள்ள பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு அளிக்க பட்டது. முதிர் கொசுக்களை அழிப்பதற்கு புகைமருந்து தெளிக்கும் பணிகளை வடக்குத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி துவக்கி வைத்தார். 

    • நாள்தோறும் சராசரியாக 500 போ் டெங்கு, இன்புளூயன்சா அறிகுறியுடன் வருகின்றனா்.
    • எந்த இடத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகக் கண்ட றியப்படுகிறதோ, அங்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாநிலம் முழுவதும் தற்போது பரவலாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. இதனால், கொசுக்கள், வைரஸ்கள், கிருமிகள் மூலம் பரவும் பல்வேறு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளும், முதியவா்களும் அத்தகைய நோய்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆளாகின்றனா்.

    காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக பலா் அனுமதிக்கப்படுகின்றனா்.

    இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், சிகிச்சை கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, டெங்கு காய்ச்சலை உறுதி செய்வதற்கான ரத்தப் பரிசோதனைகளின் முடிவுகளுக்காக நாள்கணக்கில் நோயாளிகள் காத்திருக்கக் கூடிய நிலை தற்போது உள்ளது.

    இதைத் தவிா்க்க ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டதில் இருந்து 6 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவை அளிக்க வேண்டும். டெங்கு, இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நாள்தோறும் சராசரியாக 500 போ் டெங்கு, இன்புளூயன்சா அறிகுறியுடன் வருகின்றனா். அவா்களது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    எந்த இடத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகக் கண்ட றியப்படுகிறதோ, அங்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை 24 மணி நேரமும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைகளை விரைந்து மேற்கொண்டு 6 மணி நேரத்துக்குள் முடிவை அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை தாமதம் தவிா்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையை அணுக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    • கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு காரப்பட்டு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை யிடமாகக் கொண்டு புதுப்பாளையம் மருத்துவ வட்டம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் இரவு மட்டும் அல்லாமல் பகல் நேரங்களிலேயே கொசு தொல்லை அதிகரித்துள்ள தாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    கொசு தொல்லையால் பள்ளி மாணவர்கள் முதியவர்கள் பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் காய்ச்சல் உள்ளிட்டவை களால் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

    டெங்கு, மலேரியா உள்பட காய்ச்சல்கள் பரவி வருவதை தவிர்க்க புதுப்பா ளையம், காஞ்சி, காரப்பட்டு, வீரானந்தல், முன்னூர்ம ங்கலம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும்

    கொசு மருந்து அடிக்க வேண்டும் எனவும் காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் வருவதை தடுக்க வேண்டும்.

    மேலும் பள்ளி மாண வர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவம னையை அணுக விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதிமக்கள், சமூக ஆர்வலர்கள் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது ஒரே நாளில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காய்ச்சலால் மட்டும் 139 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது 530-க்கும் மேற்பட்ட டெங்கு தடுப்பு பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை மேற்கொண்டு அதன்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் தனியார் மருந்து கடைகளில் காய்ச்சல் மருந்து வாங்கி உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கொசு கடிப்பதால் இந்த நோய் உண்டாகிறது.
    • டெங்கு தாக்குதலில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி

    டெங்கு காய்ச்சல், நான்கு வகையான டெங்கு வைரஸ்களில் ஒன்றை கொண்டு செல்லும் கொசு கடிப்பதால் இந்த நோய் உண்டாகிறது. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் இது ஜிகா மற்றும் சிக்குன்குனியாவையும் உண்டு செய்கிறது. இவை தீவிரமான நிலையில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். இந்த டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வந்தால் குணப்படுத்த உதவும் ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    டெங்குவின் தாக்கம் ஒரு வாரகாலத்துக்குள் குறையவும், அதேநேரம் ரத்த தட்டுக்களின் உற்பத்தி விகிதத்தை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும் உடலை புத்துயிர் பெறவும் கவனமாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க 30-க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன.

    * டெங்கு தாக்குதலில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தான். மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை பராமரிப்பதும் முக்கியம் ஆகும். இந்த அமிழ்தவள்ளி மற்றும் துளசி இலைகளின் தண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் மூலிகை பானம் டெங்குபாதிக்கப்பட்ட உடலில் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடும்.

    * துளசி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. துளசி இலையை கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை இரண்டு மணி நேரம் இடைவெளியில் குடித்து வர வேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவும். துளசி மருத்துவ குணங்களை கொண்டது என்பதோடு பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்க அளவோடு எடுப்பது நல்லது.

    * பப்பாளி இலைகளை நசுக்கி அல்லது அதன் சாறு எடுத்து நேரடியாக குடித்து வரலாம். இது டெங்குவால் உடலில் ரத்த அணுக்கள் குறைந்திருப்பதை அதிகரிக்க செய்வதோடு சோர்வு மற்றும் குமட்டல் அறிகுறிகளையும் நீக்க செய்கிறது. உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும் வரை தினமும் பப்பாளி இலை சாறு குடித்து வரலாம்.

    * கரு ஊமத்தை சக்தி வாய்ந்த மூலிகை. இது டெங்குவினால் உண்டாகும் அறிகுறிகளை குறைக்க செய்கிறது. பெரும் மருத்துவ குணங்களை கொண்டுள்ள இது நன்மை செய்யகூடியது என்றாலும் சுயமாக எடுக்கமால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் கலந்தாலோசிட்து எடுப்பது நல்லது.

    * நெல்லிக்கனி வைட்டமின் சி நிறைந்தது. உடலில் நோயெதிர்ப்புசக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மிகவும் உதவும். ஆயுர்வேதத்தில் நெல்லி அற்புதமான மருத்துவகுணங்களை கொண்டதாக விவரிக்கிறது. இவை உடல் முழுவதும் நன்மை செய்யகூடியது. நெல்லியை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் எடுத்து வரலாம்.

    * டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருக்கும். அதிமதுர வேர்கள் மோசமான தோஷங்களை சமப்படுத்தவும் வீக்கத்தை குறைக்கவும் உதவும். இதை தேநீராக்கி குடிப்பது காய்ச்சல், வீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

    * வேப்பிலை கசப்பு நிறைந்தது. இது பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. இதன் மருத்துவ குணங்களுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. டெங்குவில் உள்ள வேப்ப இலை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. உடலில் இருக்கும் நச்சை வெளியேற்றுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் 3-4 வேப்ப இலைகளை போட்டு ஊறவைத்து நாள் முழுவதும் கஷாயத்தை குடிப்பதன் மூலம் பலனை பெறலாம்.

    டெங்குவுக்கு இந்த ஆயுர்வேத மருத்துவத்தை எல்லோரும் பின்பற்றலாம் என்றாலும் உங்கள் உடல் வாகு மற்றும் உங்கள் உடலில் உள்ள நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவரின் பரிந்துரை படி இதனை எடுத்துக்கொள்ளலாம்.

    • மதுரை அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஹோமியோபதி மாத்திரைகள் வார்டு கவுன்சிலர் மூலமாக வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியும், நகராட்சியும் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. திருமங்கலம் நகராட்சியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் டெங்கு காய்ச்சல் வருவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோமியோபதி மாத்திரைகள் வார்டு கவுன்சிலர் மூலமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஹோமியோபதி மருத்துவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பேசினார். தொடர்ந்து அரசு ஹோமியோபதி மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் திருக்குமரன், வீரக்குமார், சின்னச்சாமி சுகாதார ஆய்வாளர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட்பட பலர் கலந்து கொண்டனர். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவுன்சிலர் உடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று மாத்திரை வழங்கினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது
    • குணமடைந்தவர்களுக்கு மீண்டும் இந்நோய் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும்

    பருவநிலை மாற்றங்களினால் பல நாடுகளில் அதிக வெப்பம் மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இது கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழ்நிலை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அதிக வெப்பம் மற்றும் அதிக மழைப்பொழிவு தோன்றும் நாடுகளில், கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.

    டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது.

    1960களிலிருந்தே இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம், ஒவ்வொரு வருடமும் டெங்கு காய்ச்சலில் மக்களை இழந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை இந்த காய்ச்சலில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அந்நாட்டில் அதிகமாக இருக்கும். 2000 தொடக்கத்திலிருந்து டெங்கு பரவலும் உயிரிழப்புக்களும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. சமீப சில வருடங்களாக குளிர் காலங்களிலும் அந்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    அந்நாட்டு பொது சுகாதார இயக்குனரகம், இவ்வருடம் ஒரு லட்சம் பேருக்கும் மேல் அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 1006 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 112 பேர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்பதும் பிறந்த குழந்தைகளும்  அதில் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று குணமானவர்களுக்கு மீண்டும் இக்காய்ச்சல் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என வங்காள தேச இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    வங்காள தேசத்தில், சென்ற வருடம், ஆண்டு முழுவதிற்குமான எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 281 பேர் பலியாகியிருந்தனர். இவ்வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே உயிர் பலி ஆயிரத்தை தாண்டி விட்டது.

    அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகிறது. வார்டுகளில் கொசு வலைகளுக்கு அடியில் காய்ச்சலுடன் இருக்கும் நோயாளிகளும், அவர்களுக்கு அருகே கவலையுடன் நிற்கும் உறவினர்களையும் காண்பது நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வங்காள தேச அரசாங்கம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக போராடி வருகிறது.

    ×