search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குப்பைமேடாக காட்சி அளிக்கும் பெருங்குடி ஏரி: டெங்கு காய்ச்சல் பரவுவதாக மக்கள் குற்றச்சாட்டு
    X

    குப்பைமேடாக காட்சி அளிக்கும் பெருங்குடி ஏரி: டெங்கு காய்ச்சல் பரவுவதாக மக்கள் குற்றச்சாட்டு

    • டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பெருங்குடி பகுதியில் மட்டும் சுமார் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மழைக்காலங்களில் ஏரியை ஒட்டியுள்ள சாலையில் தேங்கும் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏரியும் அசுத்தமாக மாறி வருகிறது.

    சென்னையில் ஏரிகளையொட்டியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு என்பது அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏரியும் சுகாதார கேட்டின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது.

    பெருங்குடி ஏரி 57 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஒரு காலத்தில் அந்த பகுதியில் இருந்த விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரி தற்போது அந்த பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் சமீப காலமாக பெருங்குடி ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் குப்பைமேடாக காட்சி அளித்து வருகின்றன. கிழக்கு மற்றும் வடக்கு பெருங்குடி பகுதிகளை இணைக்கும் ஏரியை ஒட்டியுள்ள சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறி இருக்கிறது.

    அந்த பகுதியில் கட்டுமான பொருட்கள், குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு இந்த சாலையின் ஒரு பகுதி சேதமானதையடுத்து அங்குள்ள மக்கள் ஏரியையொட்டிய சாலையை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். இதன் பிறகே பெருங்குடி ஏரியை ஒட்டி உள்ள சாலை குப்பைமேடாக மாறி இருக்கிறது.

    அந்த பகுதியில் உள்ள கடைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கடைகளில் சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மழைக்காலங்களில் குப்பைகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி செய்யும் இடமாகவும் அந்த பகுதி திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பெருங்குடி பகுதியில் மட்டும் சுமார் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மழைக்காலங்களில் ஏரியை ஒட்டியுள்ள சாலையில் தேங்கும் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏரியும் அசுத்தமாக மாறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய பசுமை ஆணையம் கடந்த 2021-ம் ஆண்டு இந்த ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் இந்த பகுதியில் சேரும் குப்பைகளால் பெருங்குடி ஏரி மாசுபடுவது தொடர்கதையாகி இருப்பதாகவே அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    ஏரியை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும் என்பதே பெருங்குடி மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×