search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepavali"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும்.
    • இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது.

    சிவகாசி:

    பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

    நாடு முழுவதும் 90 சதவீத பட்டாசு தேவைகளை சிவகாசி நகரம் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரவு பகலாக ஊழியர்கள் பட்டாசுகளை உற்பத்தி செய்தனர்.

    பண்டிகை நாட்கள் நெருங்க நெருங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்தன.

    சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு வகைகள் உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிக்கு தடை, பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு விதிமுறைகளை கோர்ட்டும், அரசும் விதித்துள்ளது.

    இவ்வளவு இடர்பாடுகளையும் மீறி இந்த முறை சிவகாசியில் கடந்த சில வாரங்களாகவே பட்டாசு வியாபாரம் தீவிரமாக நடைபெற்றன. வெளி மார்க்கெட்டுகளில் விற்பதை விட சிவகாசியில் விலை குறைவாக இருக்கும். எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிவகாசிக்கு வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆலைகள் மற்றும் கடைகளுக்கு நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளிக்கு முதல் நாள் வரை சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம்.

    சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும். நாட்கள் செல்ல செல்ல பட்டாசுகள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் கிடைக்கும் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர்.

    சிவகாசியில் பட்டாசு விலை விபரம்:-

    புஷ்வாணம் 1 பாக்ஸ்-ரூ.90, தரைசக்கரம்-ரூ.80, சீனிவெடி பாக்கெட்-ரூ.30, சாட்டை-ரூ.15, கம்பி மத்தாப்பு-ரூ.40, ராக்கெட் சிறியது-ரூ.40, 30 ஷாட் பெட்டி-ரூ.350.

    மேற்கண்ட பட்டாசுகள் வெளி மார்க்கெட்டுகளில் பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிவகாசியில் பட்டாசு வாங்க குவிகின்றனர்.

    நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இந்த முறை சிவகாசியில் பட்டாசு வியாபாரம் நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 95 சதவீத பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளது.

    இன்னும் பண்டிகைக்கு 2 நாட்கள் இருப்பதால் முழுமையாக பட்டாசுகள் விற்பனையாகிவிடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்க முக்கிய சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து வழிபாட்டு தலங்கள் அருகிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்கள், ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்கவும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை சாவடிகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 24 இடங்களில் வாகன சோதனை பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மார்கெட் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்கள் அருகிலும் குற்றம் எதுவும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 33 இடங்களில் குற்ற ரோந்து பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ட்ரோன் சர்வலைன்ஸ் பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 போலீஸ் சூப்பிரண்டுகள், 90 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 500 போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
    • சென்னை எழும்பூரில் இருந்து இன்று கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர்-நெல்லை இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 13, 14-ந் தேதியும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (வண்டி எண். 06055) மதியம் 2 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரெயில் (06056) அதே நாள் இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு சென்னை நகருக்குள் அனுமதி மறுக்கப்படும்.
    • ஆந்திரா போன்ற மாநிலம் செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும்.

    சென்னை:

    தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    போலீஸ் கமிஷனர் உத்தரவுக்கிணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

    சென்னை நகரில் புரசைவாக்கம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் தியாகராயநகர் ஆகிய பகுதிகளில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 இடங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லவேண்டும்.

    என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு செல்பவர்கள் பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லலாம். தியாகராயநகருக்கு செல்பவர்கள், ஜி.என். செட்டி ரோடு, வெங்கட்நாராயணா ரோடு போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவிட்டு செல்லவேண்டும்.

    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு சென்னை நகருக்குள் அனுமதி மறுக்கப்படும். வணிக உபயோகத்துக்காக சரக்குகளை ஏற்றிச்செல்லும் மினி கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைவது பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால், மினி கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படும். கனரக வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும்.

    தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 10 ஆயிரம் அரசு பஸ்கள் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினம் (சனிக்கிழமை) வரை இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கள் எத்தனை இயக்கப்படும் என்பது குறித்து அதன் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    சென்னையில் கே.கே.நகர், தாம்பரம், கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 5 இடங்களில் இருந்து இந்த 10 ஆயிரம் அரசு பஸ்களும் புறப்பட்டுச் செல்லும். ஈ.சி.ஆர்.சாலை வழியாக செல்லும் பஸ்கள் கே.கே.நகரில் இருந்தும், திண்டிவனம் வழியாக செல்லும் பஸ்கள் தாம்பரத்தில் இருந்தும், நெல்லை, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தும், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லியில் இருந்தும், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும்.

    இதுதொடர்பாக ஏற்கனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர்செய்ய பணியில் இருப்பார்கள். குறிப்பாக வெளி இடங்களுக்கு பஸ்கள் புறப்பட்டுச் செல்லும் இந்த 5 இடங்கள் உள்ள பகுதிகளில் 150 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஆலந்தூர் பகுதிகளில் சாலையோரமாக நின்று பயணிகளை ஏற்றிச்செல்லக் கூடாது என்று ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு பஸ்களை நிறுத்தி ஏற்றிச்செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம். ஏதாவது பிரச்சினை என்றால், போலீசார் உடனடியாக விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • அதிவிரைவு சிறப்பு ரெயில் 10, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001) 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதேபோல மறுமார்க்கமாக, அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002) 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளிக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள்.
    • நமது பாரம்பரியம் செழிப்படைய டிஜிட்டல் ஊடகத்தை பயன்படுத்துவோம்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த மாதம் 29-ந்தேதி, வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    அப்போது, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில், உள்ளூர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சுற்றுலா தலத்துக்கோ, ஆன்மிக தலத்துக்கோ எங்கு சென்றாலும் உள்ளூர் பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மீண்டும் இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த தீபாவளிக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள். அந்த பொருட்களுடனோ அல்லது உற்பத்தி செய்தவருடனோ 'செல்பி' எடுத்து, அதை 'நமோ' செயலியில் பதிவிடுங்கள்.

    உங்கள் நண்பர்களையும், குடும்பத்தையும் இதில் சேர சொல்லுங்கள். நேர்மறை உணர்வை பரப்புங்கள்.

    உள்ளூர் திறமைசாலிகளுக்கு ஆதரவு அளிக்கவும், சக இந்தியர்களின் படைப்புத்திறனை ஊக்கப்படுத்தவும், நமது பாரம்பரியம் செழிப்படையவும் டிஜிட்டல் ஊடகத்தை பயன்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மாநகரில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
    • அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து) ஆகியோர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    பின்னர் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மாநகரில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

    அதே போன்று பலத்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே பொதுமக்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை வெடித்து பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

    அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறும்போது, "தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது" என்றார்.

    • முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
    • முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருவோர்கள் நேராக பஸ்களில் பயணிக்கலாம்.

    சென்னை:

    சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து தொழில் செய்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட விரும்புகிறார்கள்.

    கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட செல்வதால் தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது.

    கூட்ட நெரிசல் இல்லாமல் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்து உள்ளது. சென்னை கோயம்பேட்டில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக மேலும் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நாளை (9-ந்தேதி) முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1365 பஸ்கள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4675 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.

    சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இதுவரையில் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் செல்ல 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 13-ந்தேதியும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க பஸ், ரெயில்கள், கார்களில் ஏராளமானோர் நாளை முதல் பயணத்தை தொடர்கின்றனர். சிறப்பு பஸ்களிலும் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் நாளை பயணம் ஆகிறார்கள்.

    சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் நாளை இயக்கப்படுகின்றன.

    முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து கோயம்பேட்டிற்கு இணைப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு பஸ்களின் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிக்க பலரும் முன் வருகிறார்கள். இதுவரையில் 1500க்கும் மேற்பட்ட அரசு பஸ்களுக்கான முன்பதிவு நடந்து உள்ளது.

    முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருவோர்கள் நேராக பஸ்களில் பயணிக்கலாம். இந்த ஆண்டு வெளியூர் சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    அரசு பஸ்கள் தவிர ஆம்னி பஸ்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடருகிறார்கள். 10-ந்தேதி பயணம் செய்யவே மக்கள் ஆர்வமாக உள்ளனர். அன்றைய தினம் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் அனைவரும் ஒன்றிணைந்து, சுயசார்பு பாரதம் என்ற நமது கனவை நிறைவேற்றுவோம்.
    • வாங்கும் பொருட்களுக்கான தொகையை செலுத்த யு.பி.ஐ. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அதில், 'இந்த பண்டிகையின்போது மக்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, சுயசார்பு பாரதம் என்ற நமது கனவை நிறைவேற்றுவோம்.

    வாங்கும் பொருட்களுக்கான தொகையை செலுத்த யு.பி.ஐ. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையையும் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும், உள்ளூர் தயாரிப்புகள் அல்லது கைவினைஞர்களுடன், இந்தியாவில் தயாரித்த ஸ்மார்ட்போனில் எடுத்த 'செல்பி'யை 'நமோ ஆப்'பில் மக்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

    அந்த படங்களில் சிலவற்றை நான் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வேன். அது, 'வோக்கல் பார் லோக்கல்' என்ற உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்துக்கு ஊக்கம் கொடுக்கும். இந்த இயக்கம் தற்போது நாடு முழுவதும் நல்ல வேகம் பெற்றுவருகிறது.'

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேஜஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இயங்காது.
    • வழக்கமான கட்டணமே சிறப்பு ரெயிலுக்கு நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்க வேண்டுமென பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வந்தது. அந்தவகையில், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை (9-ந்தேதி) காலை 6 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) புறப்பட்டு அதே நாள் மதியம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு மதியம் 3 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) இரவு 11.15 மணிக்கு எழும்பூர் ரெயில்நிலையம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேஜஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இயங்காது. எனவே, அந்த வழித்தடத்தில் கூடுதலாக எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும், வழக்கமான கட்டணமே சிறப்பு ரெயிலுக்கும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் (வண்டி எண். 06070) நாளை (9-ந்தேதி), 16 மற்றும் 23-ந்தேதிகளில் மாலை 6.45 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.35 மணிக்கு எழும்பூர் சென்றடையும்.

    இதேபோல மறுமார்க்கமாக, சிறப்பு ரெயில் (06069) 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து அம்மாநில முதல் மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    சுமார் 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க 16.53 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    • குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.
    • மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    1. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.

    2. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

    3. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.

    4. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

    5. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.

    6. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

    7. பட்டாசுகளை வெடிக்கும்போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது.

    8. குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.

    9. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.

    10. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.

    11. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள்.

    12. எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வானவெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    13. பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்தபின் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.

    14. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

    15. பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது.

    16. பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது.

    17. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.

    18. கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துகள் நேரிடலாம், அதை தவிர்க்க வேண்டும்.

    19. தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ள மேற்கூறிய பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

    மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி பொதுமக்களை சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொள்கிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், கோர்ட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 271 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

    பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையுடனும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாடும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×