search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damaged road"

    • தண்டுபத்து மெயின் ரோட்டில் இருந்து சீர்காட்சி செல்லும் பிரிவு சாலைகுண்டும், குழியுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடவேண்டும்

    உடன்குடி:

    உடன்குடி தண்டுபத்து மெயின் ரோட்டில் இருந்து சீர்காட்சி செல்லும் பிரிவு சாலைகுண்டும், குழியுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பழுதாகி உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையோரம் இரு பக்கமும் மழைநீர்அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரியபள்ளம் ஏற்பட்டு உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் வரும்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடவேண்டும்என்றும், சாலையோர பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என்றும், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
    • செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிக அளவில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலமாக இருப்பதால் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கிறது. வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்கள் பழுதடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை யில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மழை காலமாக இருப்பதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கரூர் பூ மார்க்கெட் சாலை பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன
    • பூ மார்க்கெட் பகுதியில் உள்ள, சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.

    கரூர்

    கரூர் பூ மார்க்கெட் சாலை பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாள் தோறும் ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்நிலையில், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள, சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.

    மேலும், மழை பெய்யும் போது குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

    எனவே, பூ மார்க்கெட் சாலை பகுதியில் உள்ள, பழுதடைந்துள்ள சாலையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
    • நிதி ஒதுக்கப்படுவதாக தகவல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகராட்சி பகுதியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் நேற்று பெய்த மழையின் காரணமாக பழுதடைந்த சாலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளை எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

    அதில் முதல்கட்டமாக வார்டு எண் 34, 35, 36 பகுதிகளில் நேரில் சென்று வீதி, வீதியாக பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு பழுதடைந்து சாலைகள் மற்றும் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இதற்கான நிதிகள் ஒதுக்கப்படும் எனவும் பொதுமக்களிடம் கூறினார்.

    மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இந்த ஆய்வின்போது நகர செயலாளர் சதாசிவம், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜாகிர் அகமது, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், நகர அதிமுக நிர்வாகிகள் தன்ராஜ், நியூடவுன் சங்கர், தேன்மொழி சுரேஷ், மணி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார், பாரதிதாசன், உதயேந்திரம் பேரூர் செயலாளர் சரவணன், பிரவீன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தென்னரசு, சதீஸ்வரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • மழையின் காரணமாக மலைச் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ஆபத்தாக உள்ள இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த வாரம் முழுவதும் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மலைச் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கொடைக்கானல் அருகே பெரியகுளம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் அடுக்கம், குருடிக்காடு பகுதியில் சாலை சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் வழியே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது அந்தப்பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியானது நெடுஞ்சாலைத் துறை மூலமாக நடைபெற்று வருகிறது. ஆபத்தாக உள்ள இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வருகின்றனர்.

    தொடர்ந்து கொடைக்கானலில் மழை காலம் தொடங்க உள்ளதால் ஆபத்தான இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • லட்சுமி நகர் பிரதான சாலையில் பல நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • கண் பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் லட்சுமி நகர் பிரதான சாலையில் பல நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனம் செல்லும் போது புழுதிகள் பறந்து கண் பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஊட்டி,

    கூடலூர் நாடுகாணி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பாலத்தின் அருகிலேயே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க பல முறை அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று கூட இருசக்கர வாகனத்தில் வந்த தாயும், மகனும் பள்ளத்தில் விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

    எனவே விரைவில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    நாகையை அடுத்த நாகூர் வண்ணான்குளம் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூரில் வண்ணான்குளம் மேல்கரை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகை நகராட்சி சார்பில் சாலை அமைப்பதற்காக பழைய சாலையை எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் பக்கத்து தெரு பகுதியில் உள்ள தெரு சாலையை அமைப்பதற்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றுக்கூறி இந்த சாலையில் தோண்டியதை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் தற்போது இந்த பகுதியில் உள்ள சாலை மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு உதவாத நிலையில் உள்ளது. இதனால் வண்ணான்குளம் மேல்கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையில் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும், இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், பெண்கள் அருகில் உள்ள பகுதிக்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஆனால் தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளதால் நடந்து செல்லும்போது கால் கற்களில் தட்டி கீழே விழுகின்றனர். சில நேரங்களில் கற்களில் சறுக்கி கீழேவிழுந்து காயமும் ஏற்படுகிறது. மேலும், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்லவும் முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். 

    பள்ளி செல்லும் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் வீட்டு வாசல்களில் கருப்பு கொடி ஏற்றி, பொதுமக்களை ஒன்றுத்திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். 
    ×