search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public demands"

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

    பாளை தியாகராஜநகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    12-வது வார்டு கவுன்சிலரும், பணி நியமன குழு உறுப்பின ருமான கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில் திலக் நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 12- வது வார்டுக்கு உட்பட்ட சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • தண்டுபத்து மெயின் ரோட்டில் இருந்து சீர்காட்சி செல்லும் பிரிவு சாலைகுண்டும், குழியுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடவேண்டும்

    உடன்குடி:

    உடன்குடி தண்டுபத்து மெயின் ரோட்டில் இருந்து சீர்காட்சி செல்லும் பிரிவு சாலைகுண்டும், குழியுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பழுதாகி உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையோரம் இரு பக்கமும் மழைநீர்அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரியபள்ளம் ஏற்பட்டு உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் வரும்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடவேண்டும்என்றும், சாலையோர பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என்றும், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • தென்காசி மாவட்டம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குழாய் மூலமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையில் வீணாக வெளியேறி வருகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, பாவூர்சத்திரம், வழி சுரண்டை நெடுஞ்சாலை வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு குழாய் மூலமாக தாமிரபரணிகூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

    செங்கோட்டை சன்னதி தெரு நடுமுடுக்கு வழியாக புதூர் பேரூராட்சி பகுதி களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் செல்லும் பைப் லயன் செல்லுகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையில் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அங்கு சகதிகாடாக காட்சி யளிக்கிறது. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கனிமொழி எம்.பியிடம் கூட்டாம்புளி பொது மக்கள் சார்பாக தி.மு.க. கிளைச் செயலாளரும் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளருமான பால்ராஜ் மனு கொடுத்தார்.
    • கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் -கூட்டாம்புளி - தூத்துக்குடி-மதுரை இடையே தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 என்கிற அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி யிடம் கூட்டாம்புளி பொது மக்கள் சார்பாக தி.மு.க. கிளைச் செயலாளரும் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளருமான பால்ராஜ் மனு கொடுத்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் -கூட்டாம்புளி - தூத்துக்குடி-மதுரை இடையே தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 என்கிற அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

    அந்த பேருந்து எங்கள் பகுதிக்கு நள்ளிரவில் வரும்படியாக இருந்தது.அதனால் வியாபாரிகள் மற்றும் வெளியூர் சென்று திரும்புவோருக்கு மிகவும் வசதியாக இருந்தது.

    அந்த பேரூந்தை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்திவிட்டனர். மிகவும் அவசியமான அந்த பேருந்தை இப்போது ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் - கூட்டாம் புளி -தூத்துக்குடி - ராமேஸ்வரம் இடையி லான பேருந்தாக வழித்தட மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

    ஸ்ரீவைகுண்டம் அல்லது சாத்தான்குளம் பணி மனையில் இருந்து காலையில் கிளம்பி சாயர்புரம் - தூத்துக்குடி -ராமநாடு வழியாக ராமேஸ்வரம் சென்று இரவில் திரும்ப வேண்டும்.காலையில் பேருந்தில் பயணிக்கும் எங்கள் பகுதி பக்தர்கள் ராமேஸ்வரம் கோவிலில் பூஜை முடிந்த பிறகு அங்கிருந்து இரவில் கிளம்பி வீடு திரும்பும்படி செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது பழைய மதுரை பேருந்து இல்லாத குறையை இந்த பேருந்து போக்கும் என்று நம்புகிறோம்.

    அதேபோல், திசையன் விளை பணிமனையில் இருந்து உவரி - திசையன்விளை - சாத்தான்குளம் - நாசரேத் - குரும்பூர்-ஏரல் -சாயர்புரம் - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள 145 எஸ்.எஸ்.எஸ் என்கிற பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி,பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    • நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.
    • இந்த பகுதியில் வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பாலத்தின் அருகே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.

    இந்த பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து பஸ்களும் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமான கட்டிடங்கள் இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த பகுதியில் வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பாலத்தின் அருகே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் இந்த கழிப்பறையை தினமும் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அந்த தற்காலிக கழிப்பறையின் நிலை குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்வதற்காக தச்சை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ அங்கு பதிவேடு ஒன்றை வைத்துள்ளார்.

    அதில் கழிப்பறையை பயன்படுத்துபவர்கள் தங்களது கருத்துக்களை எழுதி வைத்துச் செல்கின்றனர். கடந்த 2 நாட்களாக கழிவறைக்கு வந்த பொதுமக்கள் அதனை சுத்தப்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன் அடிப்படையில் இன்று சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கழிப்பறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் தூவினர்.

    • ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் பயன்பாட்டிற்கு கட்டண கழிப்பறை ஒன்றும், கட்டணமில்லா கழிப்பறை ஒன்றும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கட்டண கழிப்பறை மூடப்பட்டு விட்டது.

    இதனால் பயணிகள் இலவச கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது. மேலும் சிறுநீர் கழிக்குமிடத்தில் உள்ள கோப்பைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். பேரூராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    திருவாடானை பஸ் நிலையத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    திருவாடானை புதிய பஸ் நிலையத்தில் தினமும் 70-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. திருவாடானை சுற்றுவட்டார பொதுமக்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்துதான் மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

    திருவெற்றியூர் பாகம் பிரியாள் கோவில்,ஓரியூர் அருளானந்தர் ஆலயம் ஆகிய புனித தலங்களுக்குச் செல்பவர்களும் திருவாடானை வந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

    தொண்டி வரும் மதுரை பஸ் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் திருச்சி பஸ்களும் திருவாடானை வந்துதான் செல்லவேண்டியுள்ளது. தற்போது இந்த பஸ் நிலையத்தில் அடிக்கடி திருட்டு நடைபெறுகிறது.

    இங்கு கல்லூரி மாணவிகள் வந்து செல்கின்றனர். இவர்களை ஈவ் டீசிங் செய்யும் அட்டகாசங்களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இளைஞர்கள் சிலர் பஸ் நிறுத்தும் இடத்தில் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு ஈவ் டீசிங்கில் ஈடுபடுவதாக புகார் வருகின்றனர்.

    எனவே இங்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், நிற்க கூட வசதி இல்லாமல் இட நெருக்கடி உள்ள பஸ் நிலையத்தை விரிவுபடுத்தவும் இந்தப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவதால் காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மேட்டுப்பாளையம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை. நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைபெய்தது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்த்தேக்கப்பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்த தொடர்மழை காரணமாக. பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் தொடர்ந்து நாளுக்குநாள் உயர்ந்து வந்தது. அணையின் நீர்த் தேக்கப்பகுதியில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது.

    அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியதால் கோவைமாவட்டம் சிறு முகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்டப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 4 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களும் விவசாய கூலி தொழிலாளிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசல் மற்றும் படகு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக மாற்றுப்பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் லிங்காபுரம் வந்த சப்-கலெக்டர் கார்மேகம் தண்ணீரில் மூழ்கிய உயர் மட்டப்பாலத்தை பார்வையிட்டார். தண்ணீரில் மூழ்கிய பாலத்தின் மீது பரிசலில் பயணம் செய்தார். அதன்பின்னர் லிங்காபுரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இருந்து காந்தவயலுக்கு செல்ல 6 கிலோ மீட்டர் தொலைவில் தற்காலிமாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையை பார்வையிட்டார்.

    அப்போது அங்கிருந்த கிராமமக்கள். தண்ணீரில் மூழ்கும் உயர் மட்டப்பாலத்தை உயர்த்திக் கட்டித்தர வேண்டும். மாற்றுப்பாதைக்கு செல்லும் வழியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான உப்புப்பள்ளம் பகுதியில் மழைநீர் செல்ல குழாய் அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்ட சப்-கலெக்டர் கார்மேகம் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார். அவருடன் தாசில்தார் புனிதா சென்றிருந்தார். #tamilnews
    மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அரசு தேவையில்லை என்று கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் கூறினார். #seeman #ongc

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த ஒராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நேற்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராமமக்கள் போராடினர்.

    இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் ரெங்கசாமி, இயக்குனர் கவுதமன் மற்றும் பலர் கலந்து கொண்டு கிராம மக்களின் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆய்வால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. மக்கள் சொந்த மண்ணில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.

    மணல் என்பது உலகின் தலை சிறந்த நீர்வடிகட்டி. ஆற்றின் தோலான மணலை எடுக்கும் போது ஆறு மரணம் அடைகிறது. நீரை தேக்கி வைக்கும் திறனை இழந்து விடுகிறது. ஆற்றங்கரையில் உள்ள பனை, தென்னை மரங்கள் பாதிக்கப்படுகிறது என்றால் அந்த ஆறு மரணமடைந்து விட்டது என்பது தெளிவாகும். தற்போது நமது நிலம் பாலைவனமாக மாற்றப்படுகிறது. இயற்கை வாயு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை பூமிக்கு அடியில் இருந்து எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

    கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மறுத்ததால் கதிராமங்கலம் மக்கள் கடந்த ஓராண்டு காலமாக போராடி வருகிறார்கள். இது மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அரசு தேவையில்லை.

    இந்த பிரச்சினைக்காக கதிராமங்கலம் மக்கள் மட்டும் போராடக்கூடாது. சுற்றி உள்ள கிராம மக்களும் கதிராமங்கலம் மக்களுக்கு துணை நிற்க வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதுவரை மக்களின் அறவழிப்போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

    கதிராமங்கலத்தில் மண்ணை காக்கும் மக்களின் போராட்டம் அரசியல் தலைவர்களால் நடத்தப்படுவதில்லை. மக்களின் ஒற்றுமையால் நடத்தப்படுவதால் தான் இத்தனை உணர்வோடு ஓராண்டாக அறவழி போராட்டம் நடக்கிறது. ஓ.என்.ஜி.சி. ஆய்வால் காவிரி படுகையே பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து போராடி மண்ணை காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #seeman #ongc

    ×