search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு தேவையில்லை- சீமான் பேட்டி
    X

    பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு தேவையில்லை- சீமான் பேட்டி

    மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அரசு தேவையில்லை என்று கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் கூறினார். #seeman #ongc

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த ஒராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நேற்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராமமக்கள் போராடினர்.

    இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் ரெங்கசாமி, இயக்குனர் கவுதமன் மற்றும் பலர் கலந்து கொண்டு கிராம மக்களின் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆய்வால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. மக்கள் சொந்த மண்ணில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.

    மணல் என்பது உலகின் தலை சிறந்த நீர்வடிகட்டி. ஆற்றின் தோலான மணலை எடுக்கும் போது ஆறு மரணம் அடைகிறது. நீரை தேக்கி வைக்கும் திறனை இழந்து விடுகிறது. ஆற்றங்கரையில் உள்ள பனை, தென்னை மரங்கள் பாதிக்கப்படுகிறது என்றால் அந்த ஆறு மரணமடைந்து விட்டது என்பது தெளிவாகும். தற்போது நமது நிலம் பாலைவனமாக மாற்றப்படுகிறது. இயற்கை வாயு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை பூமிக்கு அடியில் இருந்து எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

    கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மறுத்ததால் கதிராமங்கலம் மக்கள் கடந்த ஓராண்டு காலமாக போராடி வருகிறார்கள். இது மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அரசு தேவையில்லை.

    இந்த பிரச்சினைக்காக கதிராமங்கலம் மக்கள் மட்டும் போராடக்கூடாது. சுற்றி உள்ள கிராம மக்களும் கதிராமங்கலம் மக்களுக்கு துணை நிற்க வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதுவரை மக்களின் அறவழிப்போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

    கதிராமங்கலத்தில் மண்ணை காக்கும் மக்களின் போராட்டம் அரசியல் தலைவர்களால் நடத்தப்படுவதில்லை. மக்களின் ஒற்றுமையால் நடத்தப்படுவதால் தான் இத்தனை உணர்வோடு ஓராண்டாக அறவழி போராட்டம் நடக்கிறது. ஓ.என்.ஜி.சி. ஆய்வால் காவிரி படுகையே பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து போராடி மண்ணை காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #seeman #ongc

    Next Story
    ×