search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyclone"

    கஜா புயல் கரையை கடந்த போது புதுவையில் பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. #gajacyclone #heavyrain #rain

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கஜா புயலாக உருவெடுத்தது. இந்த புயல் நாகை அருகே கரையை கடக்கும் என்றும், அந்நேரத்தில் பலத்த காற்றோடு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து புதுவை அரசு சார்பில் கஜா புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தாழ்வான பகுதி மக்களை தங்க வைக்க சமுதாயக்கூடம், அரசு பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டது. பாதிப்புகளை தெரிவிக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர் ஷாஜகானும் நகர பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். அரசுத் துறை அலுவலகங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

    அரசு பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இரவு 8 மணிக்கு மேல் கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் 4.30 மணிக்கே பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது.

    புயல் எதிரொலியாக நேற்று மதியம் கடற்கரை சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காலை முதல் கடல் அலைகளில் சீற்றம் இருந்தது. வழக்கத்தை விட இருமடங்கு அலைகளின் உயரம் இருந்தது. துறைமுகத்தில் 9-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடலில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

    நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. 10 நிமிடம் பெய்த மழை தொடர்ந்து நீடிக்கவில்லை. மேகக்கூட்டங்களின் சுழற்சியால் அவ்வப்போது வெளிச்சமும், மீண்டும் மழையும் பெய்தது.

    கடற்கரை சாலையில் புயல் சீற்றத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.

    புயலையொட்டி மாலையில் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் இரவு 8 மணிக்கு மேல் பூட்டப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.

    சில தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் கிராமங்களில் இருந்து புதுவைக்கு வந்து பணிபுரிபவர்களும், பயணிகளும் அவதிப்பட்டனர். பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

    குளிர்ந்த காற்று வீசினாலும் பெருமழை பெய்யவில்லை. ஆனால் இன்று அதிகாலை 1.30 மணிக்கு பலத்த வேகத்துடன் சூறாவளி காற்று வீசியது. அவ்வப்போது மழையும் பெய்தது. நகர பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும் பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. நகர பகுதியில் பேனர்கள் அகற்றப்பட்டிருந்ததால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால் வியாபார நிறுவனங்களின் பெயர் பலகைகள் பெயர்ந்து விழுந்தது.

    லப்போர்த் வீதியில் ஒரு மரம் பெயர்ந்து விழுந்தது. அது உடனடியாக அகற்றப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்யாததால் மழைநீர் எங்கும் தேங்கவில்லை. வழக்கமாக மழைநீர் தேங்கும் பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர் பகுதிகளில் கூட தண்ணீர் தேங்கவில்லை. இன்று அதிகாலை 6மணியளவில் ஒவ்வொரு பகுதியாக மின் இணைப்பு தரப்பட்டது.

    புயல் காரணமாக இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக நடத்தப்பட வேண்டிய பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் வானம் இருண்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் 5 செமீ மழை புதுவையில் பதிவாகியுள்ளது. அதிகாலை வீசிய சூறாவளி காற்றால் நகரபகுதிகள் முழுவதும் கிளைகள் முறிந்தும், கிளைகள், பூக்கள், குப்பை, கூளமாக கிடக்கிறது.

    இந்த குப்பைகளை அகற்றும் பணிகளில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவார காலமாக மிரட்டி வந்த ‘கஜா’ புயல் புதுவையில் பெரும் சேதத்தை விளைவிக்காமல் கடந்து சென்றுள்ளது அரசையும், மக்களையும் நிம்மதி பெருமூச்சடைய வைத்துள்ளது. #gajacyclone #heavyrain #rain

    மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், இரு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #HeavyRain
    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். அதன்பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.



    தொடர்மழை காரணமாக சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #SouthEastMonsoon

    ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ என்கிற புயல் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள். #Japan #TramiCyclone
    டோக்கியோ:

    ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ என்கிற புயல் கடுமையாக தாக்கியது.

    அங்கு மணிக்கு 216 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் ஒசாகா மாகாணத்தின் பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.



    புயல் மற்றும் மழையை தொடர்ந்து அங்கு விமான சேவை தடைபட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புல்லட் ரெயில் உள்பட அனைத்து ரெயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.

    ‘டிராமி’ புயலுக்கு இதுவரை 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடந்து வருகின்றன.

    கடந்த மாதம் ஜப்பானை ஜெபி என்கிற பயங்கர புயல் தாக்கியதும், அது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதோடு, 7 பேரை பலிகொண்டதும் நினைவுகூரத்தக்கது.  #Japan #TramiCyclone
    ஒடிசாவை தாக்கிய புயலால் 8 மாவட்டங்களில் இடைவிடாது கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடானது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Daye #Rain
    புவனேஷ்வர்:

    வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா - ஒடிசா இடையே உருவான புயல் சின்னம் நேற்று நள்ளிரவு புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘தயே’ என பெயரிடப்பட்டது.

    இன்று அதிகாலை ‘தயே’ புயல் ஒடிசாவின் கோபால்பூரில் கரையை கடந்து தாக்கியது. அப்போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பேய் மழை கொட்டியது.

    புயல் கரையை நெருங்கும் போதே மழை தொடங்கியது. புயல் தாக்கியபோது கன மழை கொட்டியது. கஜபதி, கஞ்சம், பூரி, ராயகடா, காலஹண்டி, கோரபுட், மால்கங்கிரி, நபரங்க்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் இடைவிடாது கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடானது.

     ஒடிசாவை தாக்கிய புயலால் வெள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    அங்கு தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி ராயகடா, காலஹண்டி, கோராபுட், நபரங்க்பூர், மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து காற்றின் வேகம் 80 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

    இந்த புயலால் தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. #Daye #Rain


    தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 70 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தனுஷ் கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பனைமர உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. இதன் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் தனுஷ் கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 5-வது நாளாக இன்றும் அதே நிலைமை தொடர்கிறது.

    தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 70 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசுகிறது. இதனால் ராமேசுவரம் முதல் பாம்பன் சாலையில் இருந்த பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன.

    காற்றின் வேகம் காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் ஊர்ந்து செல்கின்றன.

    அரிச்சல்முனை, முகுந்த ராயர் சத்திரம், தனுஷ்கோடி சாலை காற்றின் காரணமாக மணலால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கடந்தாண்டு இறுதியில் வீசிய ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 188 பேருக்கு அரசுப்பணி அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கடந்தாண்டு இறுதியில் தமிழக கடலோர பகுதிகளில் ஒக்கி புயல் தாக்கியது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல மீனவர்கள் இந்த புயலில் சிக்கி பலியாகினர். பலர் மாயமான நிலையில், அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

    இதனால், புயலில் பலியான மீனவர்களின் எண்ணிக்கையும் துல்லியமாக இல்லை. பலியான மற்றும் காணமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு அப்போது நிவாரணம் அளிக்கப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.

    இதற்கேற்ப அவர்களின் குடும்ப சூழல்களை கருத்தில் கொண்டு 188 பேருக்கு அரசு வேலை வழங்க கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையில் அவர்களுக்கு பணி ஒதுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    ×