search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Covid19"

    • பாத யாத்திதையை தடம் புரளச் செய்வதற்கு அரசாங்கம் கொரோனா நாடகத்தை நடத்துவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
    • கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், யாத்திரையை தற்காலிகமாக நிறுத்த மத்திய மந்திரி வேண்டுகோள்

    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கொரோனா மீண்டும் பரவுவதால் எனது பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என கூறியிருக்கிறார். மற்ற இடங்களில் பாஜகவினர் அவர்கள் விரும்பியபடி பொதுக்கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவுமாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக அரசை கடுமையாக சாடினார். இந்திய ஒற்றுமை பயணம் குறித்து அவதூறு பரப்பவும், யாத்திரையை தடம் புரளச் செய்வதற்கும் அரசாங்கம் கொரோனா நாடகத்தை திட்டமிட்டு நடத்துவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், அறிவியல்பூர்வ ஆலோசனையின் அடிப்படையிலான நெறிமுறைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

    கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், யாத்திரையை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

    • நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பதிவு
    • உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    பீஜிங்:

    சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பெரும்பாலான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சீன அரசின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் (3.7 கோடி) மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 248 மில்லியன் மக்கள் அல்லது கிட்டத்தட்ட 18 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் மனித குலத்திற்கு கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

    டிசம்பர் 20 அன்று மதிப்பிடப்பட்ட தினசரி 37 மில்லியன் பாதிப்பு என்பதற்கும், அந்த நாளில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 3,049 நோயாளிகள் என்ற எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. தினசரி பாதிப்புக்கான முந்தைய உலக சாதனையை விட இது பல மடங்கு அதிகமாகும்.

    ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தோன்றி பல்வேறு நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 19ம் தேதி தினசரி பாதிப்பு 4 மில்லியனை எட்டியது. இதுவே உலக அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

    • டிசம்பர் 31-ந்தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • பாடகியின் பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    பீஜிங்:

    சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பி.எப்.7 ஒமைக்ரான் என்ற வகை வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீனாவின் பிரபல பாடகி ஒருவர் தனக்குத் தானே கொரோனாவை வரவழைத்து உள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவின் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான ஜேன் ஜாங் (38) ஆங்கில வருடப் பிறப்பையொட்டி டிசம்பர் 31-ந்தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று கருதி உள்ளார். இதனால் கொரோனா பாதித்த தனது நண்பர்களை வேண்டுமென்றே அவர்கள் சிகிச்சைபெறும் மையங்களுக்கு சென்று சந்தித்து உள்ளார்.

    இதனால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

    சீன சமூக வலை தளங்களில் 4.3 கோடி பின்தொடர்பவர்களை கொண்டிருக்கும் ஜேன்னின் இந்த பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக உள்ள நிலையில் பிரபலமான பாடகியே இப்படி செய்ததற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சீனாவில் நேற்று முன் தினம் 3101 பேர் புதிய ஒமைக்ரான் வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த 90 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் பாடகி ஜேன் ஜாங் தனது பதிவுகளை அழித்துவிட்டு, தான் செய்ததற்கு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

    • பிற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் சுட்டிக்காட்டினார்.
    • கூட்டு முயற்சியால், கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை இந்தியா சமாளித்தது என்றும் குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன.

    இந்தியாவிலும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரும்படி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மாநிலங்களவை இன்று கூடியதும், பிற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், உறுப்பினர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டியது நமது கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

    நிர்வாகம், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் கூட்டு முயற்சியால், கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை இந்தியா சமாளித்தது என்றும் அவைத்தலைவர் குறிப்பிட்டார்.

    இதேபோல் மக்களவையிலும் உறுப்பினர்கள் மாஸ்க் அணியவேண்டும் என அவைத்தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். பாராளுமன்ற இரு அவைகளிலும் இன்று பெரும்பாலான உறுப்பினர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். 

    • புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
    • தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம், 2ம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    சீனா, ஹாங்காங், ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப்-7 ஒமைக்ரான் வைரசை சுட்டிக்காட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

    இதற்கிடையே பிஎப்-7 ஒமைக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இந்நிலையில், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

    அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது, தொற்று எண்ணிக்கை 49 என்ற நிலையிலும் உயிரிழப்பு இல்லாத நிலை உள்ளது என கூறி உள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம், 2ம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், சீனா, ஹாங்காங்  ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • சீன விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
    • சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகிறார்

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    தற்போது சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப்-7 ஒமைக்ரான் இந்தியாவிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனா-இந்தியா இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும், இந்தியாவில் இருந்து சீனா செல்லும் விமானங்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பரவும் தொற்று மற்றும் இந்தியாவில் ஒரு புதிய ஆபத்தான கொரோனா திரிபு பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் மணீஷ் திவாரி யோசனை கூறி உள்ளார்.

    அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகையில், 'சீனாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானப் பயணம் தொடர்பான நமது கொள்கையின் மீது அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்' என்றார். 'பயனுள்ள தடுப்பூசிகளுடன் இந்தியாவில் விரிவான தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்படுவதால், சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. இருப்பினும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது' என்றும் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறியுள்ளார்.

    சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தபோதும், சீன விமானங்கள் இந்தியாவுக்கு வருவது தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பான்மையான இந்தியர்கள் கூறி உள்ளனர். சமூக நலன் சார்ந்த லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற வலைத்தளம் நடத்திய சர்வேயில், சீன விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று 10-ல் 7 இந்தியர்கள் (71 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர். 

    • இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் மூன்று பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை உயரவில்லை

    புதுடெல்லி:

    சீனாவில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் மனித பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்தியாவில் பெருமளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்தநிலையில், சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதம் குஜராத்தில் 2 பேரும் ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மூன்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட போதிலும், நாட்டில் கோரோனா பாதிப்பு எண்ணிக்கை பெரிய அளவில் உயரவில்லை.

    சீனாவில் இந்த ஒமைக்ரான் திரிவு கவலை அளிக்கும் வகையில் வேகமாக பரவி வந்தாலும், மற்ற இடங்களில் பெரிதாக பரவவில்லை. இந்தியாவில் அக்டோபர் மாதம் பிஎப்.7 திரிபின் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. இருப்பினும், நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்குப் பிறகு நாட்டில் பாதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க போராடி வருகிறது.
    • பாதிப்பு அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் மற்ற நாடுகளுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது.

    வாஷிங்டன்:

    சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.

    சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் மற்ற நாடுகளுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது.

    சீனாவின் இந்த பாதிப்பு வைரசின் புதிய பிறழ்வுகளை உருவாக்கலாம் என்றும், இது உலகையே கவலை அடைய செய்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏனெனில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க போராடி வருகிறது.

    எந்த நேரத்திலும் வைரஸ் வேகமாக பரவலாம். வைரசின் பிறழ்வு எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதை நாங்கள் அறிவோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

    பிரைஸின் கருத்து பற்றி வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டதற்கு, அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
    • கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

    ஜெனீவா:

    சீனாவின் உகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், 2023-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார்.

    கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், கொரோனா வைரசின் தோற்றத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக, நாங்கள் கேட்டுள்ள தரவுகளை பகிர்ந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் சீனாவிடம் தொடர்ந்து கூறிவருவதாக டெட்ரோஸ் கூறினார்.

    • கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
    • அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.

    பீஜிங்:

    சீனாவின் ரயிலில் பயணித்த ஒரு பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், ரயிலில் பயணித்த ஒரு பெண், வாழைப்பழத்தை சாப்பிடுவதால், தொற்று பரவாமல் இருக்கும் உத்தரவை மீறாமல் இருக்கவும், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டுள்ளார். சக பயணிகள் இதை வினோதமாக பார்த்தனர். இவர் முகத்தை மூடிக்கொண்டு பழத்தை சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. சுரங்கப்பாதை ரயிலில் அவர் பயணித்தபோது வாழைப்பழம் சாப்பிடும்போது சக பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்துள்ளன.
    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகையான ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. மேலும் வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.

    இந்த புதிய வகை வைரஸ் 10 மடங்கு விரீயம் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போத்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. 

    பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்திருப்பதால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். உறவினர்களை பார்ப்பதற்காகவும், தொழில்ரீதியாகவும் தென் ஆப்பிரிக்கா வந்தவர்கள் கடைசியாக கிடைத்த விமானங்களில் நாடு திரும்ப முயன்றனர். 

    ‘ஒமிக்ரான்’ வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×