search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhagavathi Amman"

    • வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

    4-ம் திருவிழாவான நேற்று முன்தினம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பாக மண்டகப்படி நடைபெற்றது. இதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள காமதேனு வாகனம் கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள திருவாவடுதுறை கிளை மடத்தில் பலவகையான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து தேங்காய் மற்றும் பழவகைகள், இனிப்புகள் படைக்கப்பட்டது.

    பின்னர் பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுசீந்திரம் திருவாவடுதுறை கிளை மட ஆய்வாளர் வீர நாதன் மற்றும் மட அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது
    • மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார்.

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் டிரஸ்டி முருகபெருமாள் முன்னிலையில் கொடிப்பட்டம் மரபுபடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி ரட்சகர்தெரு கைலியார் குடும்பத்தை சேர்ந்த கெனி என்பவர் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் மேவாளர் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

    அதன்பிறகு இன்று காலை 9 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இந்த கொடிமர பூஜைகளை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் கோவில் வேல்சாந்திகள் விட்டால் போற்றி, பத்மநாபன் போற்றி, சீனிவாசன் போற்றி, கண்ணன் போற்றி, நிதின் சங்கர் போற்றி,கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி ஆகியோர் நடத்தினார்கள்.

    மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், கணக்கர் கண்ணதாசன், பொருளாளர் முருகையா உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த திருவிழா அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமயஉரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • இன்று கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
    • 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நாகர்கோவில், கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக விவேகானந்தபுரத்துக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள். நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான ஜூன் மாதம் 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • இன்று சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை நடக்கிறது.

    கீழ்குளம் பறம்பு அம்மனாடும்தேரியில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா முதல் நாள் தொடங்கி தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதிஹோமம், மாலை 5.30 மணிக்கு சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை, பூஜை பலி, உத்வஸிதத்து ஜீவ கலசத்திற்கு சுற்று எழுந்தருளல், பள்ளி உறக்கம் ஆகியவை நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கணபதிஹோமம், பிரதிஷ்டை ஹோமம், பள்ளி எழுப்பல், பிரதிஷ்டை பலி, மூர்த்திகள் கோவிலுக்குள் எழுந்தருளுதல், காலை 6 மணிக்கு பிரதிஷ்டை, தொடர்ந்து பகவதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீவ கலச அபிஷேகம், அஷ்ட பந்தன கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு வாழ்த்தரங்கம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு சிறப்பு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • ஜூன் 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • ஜூன் 2-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.

    அதைத்தொடர்ந்து முதல் நாள் விழாவான 24-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம்(ஜூன்)1-ந்தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம், கஞ்சிதர்மம், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதல் நடக்கிறது.

    10-ம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
    • 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    இதையொட்டி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் இருந்து குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில்நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    அங்கு 5 மணிக்கு பஜனை, அதைத்தொடர்ந்து பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையை நடத்தினர்.

    • வைகாசி விசாக திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • இந்த திருவிழா ஜூன் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்குகிறது. 10-ம் திருவிழாவான 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கோவில் மேல்சாந்திகள் பத்மநாபன், விட்டல், சீனிவாசன், நிதின் சங்கர், கண்ணன் மற்றும் கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் கால்நாட்டு வைபவத்தை நடத்தினர்.

    இதேபோல் கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும், கன்னியம்பலம் மண்டபத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
    • அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    ஸ்ரீபலி பூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.
    • அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை, நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.

    மாலையில் தங்கரதம் உலா, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது.

    மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நேற்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.

    வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    வலிய படுக்கை பூஜை நடந்த போது கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தால் சரண கோஷம் எழுப்பினர். இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
    • வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    இதை தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. இந்தநிலையில் நாளை (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நடக்கிறது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சிகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

    இந்த பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவன்று மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
    • ‘பெண்களின் சபரிமலை’ என்றும் அழைக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.

    இங்கு கடந்த 5-ந் தேதி மாசிகொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    அதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் தோப்புகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் கடற்கரைபகுதி, லட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை செல்லும் சாலை, சாஸ்தான் கோவில் சாலை போன்ற இடங்களில் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது.

    எட்டாம் கொடை விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    • ஏராளமான கேரள பக்தர்கள் வேன், பஸ்களில் மண்டைக்காடுக்கு வந்தனர்.
    • நாளை எட்டாம் கொடை விழா நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிகட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. மாசிக்கொடை விழா நாட்களில் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிப்பட்டனர்.

    இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான கேரள பக்தர்கள் வேன், பஸ்களில் மண்டைக்காடுக்கு வந்தனர். அவர்கள் கடலில் கால் நனைத்து விட்டு பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். கேரள பக்தர்களின் வருகையால் மண்டைக்காடு கோவில் சன்னதி, கோவில் வளாகம், கடற்கரை மற்றும் பொங்கலிடும் பகுதியில் என அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதை தவிர குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களும் கோவிலை சுற்றியுள்ள தோப்புக்களில் குடும்பமாக பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். நாளை(செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை விழா நடக்கிறது. இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×