search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • இந்த திருவிழா ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது
    • மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார்.

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் டிரஸ்டி முருகபெருமாள் முன்னிலையில் கொடிப்பட்டம் மரபுபடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி ரட்சகர்தெரு கைலியார் குடும்பத்தை சேர்ந்த கெனி என்பவர் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் மேவாளர் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

    அதன்பிறகு இன்று காலை 9 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இந்த கொடிமர பூஜைகளை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் கோவில் வேல்சாந்திகள் விட்டால் போற்றி, பத்மநாபன் போற்றி, சீனிவாசன் போற்றி, கண்ணன் போற்றி, நிதின் சங்கர் போற்றி,கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி ஆகியோர் நடத்தினார்கள்.

    மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், கணக்கர் கண்ணதாசன், பொருளாளர் முருகையா உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த திருவிழா அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமயஉரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    Next Story
    ×