search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyappan Temple"

    • 27-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது.
    • ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (26-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.இருப்பினும் நாளை வேறு பூஜைகள் எதுவும் நடை பெறாது.

    மறுநாள் (27-ந்தேதி) காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.

    • 19-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.
    • பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை 26-ந்தேதி திறக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

    இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நேற்று கிடையாது. அதே சமயத்தில் கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இன்று முதல் 19-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.

    மேலும் தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19-ந் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பின்னர் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9.45 மணிக்கு திருக்கொடியை ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.
    • அரசுப் பொதுத்தேர்வை நல்ல முறையில் எழுதி சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமநாதபுரம்

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் அரசுப் பொதுத் தேர்வை நல்ல முறையில் எழுதி சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தலைமை குருக்கள் மோகன் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். இந்த பூஜையில் ராமநாதபுரம், ரகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகள் ஆலயத்தின் தலைமை குருக்கள் மோகன் ஆலோசனையில் வல்லபை அய்யப்பன் கோவில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.

    • இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
    • இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் பெற்றனர். இந்த காலங்களில் கோவிலுக்கு ரூ.360 கோடி அளவில் வருமானம் கிடைத்தது.

    மகரவிளக்கு பூஜைக்கு பின்னர் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாளை (13-ந்தேதி) மாசி மாதம் பிறக்க உள்ளதால், மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் நடையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.

    நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    17-ந்தேதி வரை கோவில் திறந்திருக்கும். இந்த நாட்களில் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • 13-ந்தேதி நெய் அபிஷேகம், பூஜைகள் நடைபெற உள்ளன.
    • 17-ந்தேதி படிபூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும்.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார்.

    தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் இல்லை. மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

    வருகிற 17-ந் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
    • விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது.

    சென்னிமலை, 

    சென்னிமலை டவுன், காங்கேயம் ரோடு, ஐயப்பா நகரில் அய்யப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நடந்தது.

    பக்தர்கள் கொடிவேரி சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அரச்சலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து ஐயப்பா நகரில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, நடந்தது. தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை ஐயப்ப சாமி கோவில் அர்ச்சகர் ஜி.மணிவாசக குருக்கள் தலைமையில் தபராஜ் சிவாச்சாரியார், ராஜேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • நேற்றிரவுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெற்றது.
    • பிப்ரவரி 12-ந்தேதி மீண்டும் நடைதிறப்பு.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்தது. இதுபோல மகர விளக்கு தரிசனம் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இந்த இரண்டு விழாக்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாக்களுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்பு டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை முடிந்த பின்னர் 2 நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து மகர விளக்கு பூஜைகளுக்காக மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

    மகர விளக்கு பூஜை கடந்த 14-ந் தேதி நடந்தது. அதன்பின்பு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றிரவுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெற்றது.

    அதன்பின்பு சபரிமலை காடுகளில் ஐயப்ப பக்தர்களை காத்த வன தேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாளிகை புரத்து அம்மன் சன்னதியில் குருதி பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. அதன்பின்பு காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில் சாவியும் ஒப்படைக்கப்பட்டது. இனி பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும்.

    இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தில் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. இதில் பக்தர்கள் வெற்றிலையுடன் கட்டி போட்ட உண்டியல் காணிக்கை பணம் உடனடியாக எண்ணப்படவில்லை. இதனால் அந்த பணம் நாசமாகிவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தேவசம்போர்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உள்ளது.

    • சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு விழா இன்று இரவோடு முடிவடைகிறது.
    • நாளை காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
    • காணிக்கை நாணயங்கள் ரூ.7 கோடி வரை இருக்கும் என கணிப்பு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் விமரிசையாக நடந்தன. கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நிறைவுபெற்றது. அதன்பிறகு மகர விளககு பூஜை காலம் தொடங்கியது.

    இந்த காலங்களில் தமிழகம், கேரளம் மட்டு மின்றி நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். சுமார் 50 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் ஐயப்பனை தரிசனம் பெற்றுச் சென்றனர்.

    சபரிமலை வந்த பக்தர்கள் அங்கு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களில் பணம் மற்றும் காசுகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து உண்டியல்களும் நிரம்பி விட்டன.

    சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு விழா இன்று இரவோடு முடிவடைகிறது. இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும்.

    இந்த சூழ்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணி தற்போது சபரிமலையில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயங்களை எண்ணும் பணி தான் ஊழியர்களுக்கு சவாலாக உள்ளது. காணிக்கையில் ரூ.7 கோடி மதிப்பில் நாணயங்கள் மட்டும் இருக்கும் என தேவசம்போர்டு ஊழியர் தெரிவித்துள்ளார்.

    வழக்கமாக காணிக்கை எண்ணும் பணி, பாதுகாப்பு நிறைந்த பண்டாரப்புரா மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு அதிக அளவு காணிக்கை கிடைத்துள்ளதால், பண்டாரபுரா மண்டபத்தில் பணியாளர்கள் உட்கார இடம் இல்லை.

    எனவே பண்டாரப்புரா மண்டபத்திற்கு வெளியே வாவர் ஓடையின் முன்பு தார்ப்பாய் விரிக்கப்பட்டு நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.அன்னதான மண்டபம் முன்பும் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன.பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் உள்ள கருவூலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அவற்றையும் திறந்து காணிக்கை பணம் முழுவதையும் எண்ணி முடித்தால், ரூ.330 கோடி வரை வசூலாக வாய்ப்பு இருப்பதாக தேவசம்போர்டு கருதுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ரூ.316 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்கனவே தேவசம்போர்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சபரிமலையில் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
    • வெள்ளிக்கிழமை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையில் பங்கே ற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதற்காக கோவில் நடை நவம்பர் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது.

    அதன்பின்பு கோவில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜை கடந்த 14-ந் தேதி நடந்தது. இந்த இரண்டு சீசன்களிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் முடிந்ததை தொடர்ந்து இன்று கோவிலில் நெய் அபிஷேகம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நாளை இரவு 10 மணிக்கு மாளிகைபுரத்தம்மன் குருதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதன்பிறகு மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12-ந் தேதி நடை திறக்கப்படும்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தே வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் கூறியி ருந்தது.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கையை கோவில் நிர்வாகம் அவ்வப்போது அறிவித்து வந்தது.அதன்படி மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் மட்டும் நேற்று முன்தினம் வரை கோவிலுக்கு 48 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். இன்றும், நாளையும் ஐயப்பனை தரிசிக்க சுமார் 2 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு மட்டும் சபரிமலை வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    • 19-ந்தேதி வரை படிபூஜை நடைபெறும்.
    • 20-ந்தேதி சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து ஐயப்பனை வழிபட்டனர். 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதியுடன் முடிவடைந்ததால் நடை சாத்தப்பட்டது.

    அதன்பிறகு மகர விளக்கு பூஜை தொடங்கியது. இதற்காக கோவில் நடை 30-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. நடை திறந்தது முதல் பக்தர்கள் அதிக அளவு வந்து ஐயப்பனை தரிசித்து சென்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 14-ந் தேதி மாலை நடைபெற்றது.

    இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு பக்தர்கள் 18-ம் படி வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரவு அரிவராசனம் பாடப்பட்டதும் கோவில் நடை சாத்தப்பட்டது.

    சபரிமலையில் இன்று அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை தொடங்குகிறது. 19-ந் தேதி வரை படிபூஜை நடைபெறும். இதையொட்டி சபரிமலையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    நாளை மறுநாள் (18-ந் தேதி) சபரிமலையில் சிறப்பு களபாபிஷேகம் நடக்கிறது.மறுநாள் (19-ந் தேதி) மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருதி பூஜை நடக்கிறது.அன்றைய தினம் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள். 20-ந்தேதி பூஜை நிறைவடைந்ததும் சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.

    • 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
    • சபரிமலையில் 12-ந்தேதி வரை ரூ.310.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
    • அரவணை விற்பனை மூலமாக மட்டும் ரூ.140.75 கோடி வசூலாகி உள்ளது.

    திருவனந்தபுரம் :

    மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

    ஐயப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு ஐயப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா... என்ற கோஷம் எழுப்புவர்.

    இந்த ஆண்டு மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஏற்கனவே தங்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர்.

    எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலங்களில் சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.

    "நடப்பு சீசனையொட்டி சபரிமலையில் 12-ந்தேதி (நேற்று) வரை ரூ.310.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலமாக மட்டும் ரூ.140.75 கோடி வசூலாகி உள்ளது." என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் கூறினார்.

    கடந்த வருடம் 61 நாட்களில் சபரிமலையில் 19.39 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.151 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் பக்தர்கள் வருகையும், வருமானமும் இருமடங்காக அதிகமாகி உள்ளது.

    • மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நாளை நடக்கிறது.
    • பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார்.

    மண்டல பூஜை முடிவடைந்ததும் சபரிமலை கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. பக்தர்களும் ஐயப்பனை தரிசனம் செய்தும் வருகிறார்கள்.

    சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள சந்தனத்திலான பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த திருவாபரணங்கள் நேற்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைக்கு பிறகு பகல் 11 மணி வரை திருவாபரண தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க, வானத்தில் கருடன் வட்டமடிக்க திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.

    இந்த ஊர்வலம் ஐயப்பனின் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைபயணமாக நாளை மதியம் பம்பை வந்தடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு வரப்படும்.

    திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர கோஷம் எழுப்புவார்கள்.

    முன்னதாக ஆபரண பெட்டிகள் எடுத்து வர வசதியாக அன்றைய தினம் பகல் 12 மணி முதல் பம்பையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பிறகு இரவு 8 மணிக்கு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.

    இதற்கிடையே பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து மகரவிளக்கு பூஜை அன்று மட்டும் உடனடி தரிசன முன்பதிவு கிடையாது என சபரிமலை சிறப்பு அதிகாரி விஷ்ணுராஜ் தெரிவித்தார்.

    ×