search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Position"

    • குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் இடதுசாரிகள் பக்கம் நின்றது.
    • 18 காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல் படுத்தமாட்டோம் என்று கேரளா, தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் இடதுசாரிகள் பக்கம் நின்றது. ஆனால் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றி பா.ஜனதாவுக்கு ஆதரவளித்தது.

    கேரளாவை சேர்ந்த 18 காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. பாராளுமன்றத்தில் கேரளாவின் குரல் மவுனமாகிறது.

    பாராளுமன்றத்தில் காங்கிரசின் முக்கிய குரலாக இருக்க வேண்டியவர் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி. ஆனால் அவர் மக்களுக்காக பேசினாரா? மதச்சார்பற்ற இந்தியாவை அழிக்கும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை.

    வயநாட்டில், வன விலங்குகள் தாக்குதலால் மக்கள் தொடர்ந்து உயிர் இழக்கிறார்கள். வனச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. இந்த விவகாரத்திலும் ராகுல்காந்தியால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி.
    • பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடத்திய மாநாடு என்பதால் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    சுமார் 5 லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு அமைச்சர் உதயநிதியின் திறமையை வெளிப்படுத்தும் மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்று மாநாட்டுக்கு முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    ஆனாலும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் கூர்ந்து கவனித்தனர். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அடுத்த தலைவராக உதயநிதியை புகழ்ந்தனர். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். இப்படிப்பட்ட தலைவர்தான் தேவை என்று புகழ்ந்தனர். சேலம் மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    இதேபோல் பெரும்பாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.முருகேசன் என்பவரும் உதயநிதியின் அரசியல் திறமையை வெளிப்படுத்தி புகழ்ந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், அரசியலில் மறைந்த தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தோம். அதனை தொடர்ந்து தளபதி மு.க. ஸ்டாலினை ஏற்றுக் கொண் டோம். இப்போது உதய நிதியை துணை முதல்வராக்க விரும்புகிறோம்.

    உதயநிதியின் வருகையால் தி.மு.க. இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உதயநிதி பிரசாரம் செய்ததை விட இப்போது அவரது பிரசாரம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவரது உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு தி.மு.க.வுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று பெருமையுடன் கூறினார்.

    மாநாட்டில் அமைச்சர் உதயநிதியை போல் அவரது மகனான இன்பநிதியும் வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தார். அவரது வருகையும் மாநாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

    • முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா பேச்சு
    • வாழ்க்கையில் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் பெண்களுக்கு என தனி சுய சக்தியுடன் செயல்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு கலை கல்லூரியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசியதாவது:-

    பெண்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் பெண்களுக்கு என தனி சுய சக்தியுடன் செயல்பட வேண்டும்.

    பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தங்கள் தனி திறமைகளை வளர்க்க வேண்டும்.

    சமூகத்தில் ஒரு பெண் உயர்ந்த இடத்துக்கு வருவது மிக கடினம். ஆனால் வந்த பிறகு எத்தகைய பிரச்சி னைகள் வந்தாலும், தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும். நான் இப்படித்தான் இருப்பேன் என தைரியத்து டன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கல்லூரி முதல்வர் ஆசாத்ராசா, பேராசிரியர் அருளழகன் மற்றும் பேராசி ரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • எனவே தங்களுக்கு பணியில் சேர்ந்து 20 ஆண்டுக்குள் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
    • செவிலிய பதவி பெயர் மாற்றம் செவிலிய அதிகாரி என மாற்றம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கைவிளக்கு ஏந்திய காரிகை பிலாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி அவரது பிறந்த நாளான இன்று தஞ்சை அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 1- புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் சித்ரா வரவேற்றார். இதில் அனைத்து செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி , எனது வாழ்வில் மிகவும் தூய்மையாகவும் எனது பணியை உண்மையாக செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு கேக் வெட்டி செவிலியர்களுக்கு கொடுத்து செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    பின்னர் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் வளர்மதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு பெறாமல் செவிலியர்களாகவே பணி ஓய்வு பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    எனவே தங்களுக்கு பணியில் சேர்ந்து 20 ஆண்டுக்குள் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    99 சதவீத பெண்களை கொண்ட செவிலியர் துறையில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் இயற்கையாகவே பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை கருத்தில் கொண்டு 55 வயதுக்கு மேல் இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான செவிலியர் துறைக்கான தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.

    செவிலிய பதவி பெயர் மாற்றம் செவிலிய அதிகாரி என மாற்றம் செய்ய வேண்டும்.

    பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி நடத்தி வரும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் , எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சாந்தகுமாரி உள்ளிட்ட ஏராளமான செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்டத் தலைவர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

    • சனாதனம் தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது.
    • பதவியே திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்திருக்கிற பதவி மறந்து விடாதீர்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் சார்பில் சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க மாநாடு நடைபெற்றது.

    மாநாட்டிற்கு திராவிட கழக தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.

    தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியை கேட்டால் காங்கிரஸ் மாடல் என்று சொல்வார்கள். இடது சாரி கட்சி என்று கேட்டால் இடதுசாரி மாடல் என்று சொல்வார்கள்.

    ஆர்எஸ்எஸ், பா.ஜனதா கட்சியினர் திராவிட இயக்க அரசியலை தூக்கி எறிவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

    இந்த வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என நகர்மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் பேசியதாவது, தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு2 தலைவ ர்கள். ஒன்று மோடியால் நியமிக்க ப்பட்ட அண்ணாமலை, இன்னொருவர் ரவி.

    அவரை ஆளுநர் என்று சொல்ல மாட்டேன்.

    ஆளுநர் பதவியோடு இருந்தால் ஆளுநர் என்று சொல்லலாம்.

    சனாதனம் தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று சொல்கிறார்.

    பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை விளக்க செயலாளராக ஆளுனர் இருக்கக்கூடாது.

    இவ்வாறு பேசினார்.

    திருமாவளவன் பேசியதாவது, திமுக, திராவிடர் கழகம் திராவிட தேசியம் பேசவில்லை.

    திராவிட அரசியலை பேசுகிறது. திராவிட அரசியல் என்பது ஆரிய எதிர்ப்பு அரசியல். பிஜேபியையும், ஆர்எஸ்எஸ் யையும் எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என பேசினார்.

    திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில் கூறியதாவது, நாங்கள் கொள்கையில் எரிமலை.

    உங்களுக்கு கிடைத்திருக்கிற அந்த பதவியே திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்திருக்கிற பதவி மறந்து விடாதீர்கள். ஏன் அந்த இடத்தில் எச்.ராஜா, சேகர், கணேஷய்யர் இல்லை.

    அண்ணாமலை எப்படி தேர்வானார்.

    தகுதிக்காகவா, இல்லை. பெரியாருக்கு, திராவிடர் கழகத்திற்கு, விடுதலை சிறுத்தைகளுக்கு பயந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு பேசினார்.

    ×