search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்து"

    • தீயை அணைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • தீ மேலும் பரவாமல் இருக்க குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    சென்னை:

    சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தீ மேலும் பரவாமல் இருக்க குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை போராடி அணைத்துள்ளனர்.
    • தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள உயர் பாதுகாப்பு செயலக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் என் பிரேன் சிங்கின் அதிகாரபூர்வ பங்களாவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு

    நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை போராடி அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளிவரவில்லை.

    தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அசாமின் எல்லையில் உள்ள மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில், பள்ளத்தாக்கு ஆதிக்கத்தில் உள்ள மெய்டேய் சமூகத்திற்கும், மலையில் ஆதிக்கம் செலுத்தும் ஹ்மர் பழங்குடியினருக்கும் இடையே புதிய வன்முறை வெடித்த ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    • ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தென்னவனூரை சேர்ந்தவர் கருப்பணன் மகன் ராமு (வயது 60). இவர் தற்போது அடுத்த பட்டணம்காத்தான் செக்போஸ்ட் அருகில் குடியிருந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி குருவம்மாள் என்ற மனைவியும், சரவணக்குமார் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். மகள் சத்யாவுக்கு திருமணமாகி கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார்.

    ராமு முதலில் உள்ளூரில் வேலை பார்த்தார். ஆனால் குழந்தைகளை படிக்க வைக்கவும், மகளை திருமணம் செய்து கொடுக்கவும், குடும்பம் நடத்தவும் பணம் பற்றாக்குறையாக இருந்ததால் ராமு வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.

    அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்தான் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் மூச்சுத்திணறலில் ராமு உள்பட 7 தமிழர்கள் என மொத்தம் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

    இவர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை கேரளா முதல்வர் பினராயி விஜயன் முறைப்படி பெற்றுக்கொண்டார்.

    அங்கு தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதன்படி ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.

    அங்கு கூடியிருந்த மனைவி மற்றும் உறவினர்கள் ராமு உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ராமு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக அரசு சார்பில் அறிவித்த ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ராமுவின் குடும்பத்தாரிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு வழங்கினார்.

    • நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலம் குமண்டி ரெயில் நிலையம் அருகே ராஞ்சி - சசரம் விரைவு ரெயிலில் தீ பிடித்ததாக பரவிய வதந்தியால் ரெயிலில் இருந்து பலர் தண்டவாளத்தில் குதித்துள்ளனர்.

    அவர்கள் தண்டவாளத்தில் குதித்த சமயம் அவ்வழியே வந்த சரக்கு ரெயிலில் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், தீ விபத்து பற்றி பரவிய வதந்தி குறித்தும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    செஞ்சி:

    குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் (வயது 35) மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

    நேற்று காலை குவைத் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உள்ளிட்ட 7 தமிழர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் தனி ஆம்புலன்ஸ் மூலம் முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் செஞ்சி மற்றும் காட்டுமன்னார்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது.

    அப்பொழுது முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.

    முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடலை பார்த்ததும் அவர்களது மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதனைத் தொடர்ந்து செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை தலைமையிலான வருவாய்த்துறையினர் முகமது ஷெரிப் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை அவருடைய மத வழக்கப்படி முகமது முகமது ஷெரீப் உடல் உறவினர்கள் முன்னிலையில் செஞ்சியில் உள்ள பத்ஹா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்தனர்.

    அதுபோல் சின்னதுரை உடலுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வட்டாட்சியர் சிவக்குமார், எம்.ஆர்.கே. கல்வி குழுமத்தின் தலைவர் கதிரவன் மற்றும் காட்டுமன்னார்கோவில், எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், கேபிள் எழில் சிவா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சின்னத்துரை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • கேரளாவை சேர்ந்த 24 பேர் மற்றும் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.
    • தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானதால் ஒட்டு மொத்த கேரளமும் சோகத்தில் ஆழந்து உள்ளது.

    திருவனந்தபுரம்:

    குவைத் நாட்டின் மங்காப் நகரில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் 45 பேர் இந்தியர்கள். இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் மற்றும் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.

    அதன்பிறகு தனித்தனி வாகனங்கள் மூலம் அனைத்து உடல்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ்கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பணிகள் நடந்தன. தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானதால் ஒட்டு மொத்த கேரளமும் சோகத்தில் ஆழந்து உள்ளது.

    பலியானவர்களின் உடல்கள் வீடுகளுக்கு வந்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பலியானவர்கள் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்றவர்கள் தன்னுயிர் நீத்திருப்பதை கூறி அவர்கள் கதறி அழுதது பரிதாபமான சூழலை ஏற்படுத்தியது. நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் 12 பேரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், இன்று 11 பேரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமானவை உள்ளன.
    • 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீ விபத்த நிகழ்ந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமானவை உள்ளன.

    தீ விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வணிக வளாகத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை பத்திரமாக மீட்டனர். கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கி இருப்பவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

    20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    • பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.
    • குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருச்சி:

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் உடல் கருகி பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்கள் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதில் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜு எபினேசர் (வயது 54) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இவர் அங்குள்ள பெட்ரோலியம் மற்றும் ஆயில் நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் ட்ரெய்லர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

    இவர் அந்த நிறுவனம் வழங்கிய தங்குமிட தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது தீ விபத்தில் சிக்கியுள்ளார். அவர் இறந்ததாகவும், அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் வந்த முரண்பட்ட தகவல்களால் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.

    தனது தந்தையின் நிலை அறிய வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை அவரது மகன் குணசீலன் ஒரு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் கூறும் போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலமாக தந்தையிடம் பேசினேன். பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்து. அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.

    ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அரசு கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை ஆனால் இதுவரை அவருடைய நிலையை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. இதற்கிடையே அப்பா பணியாற்றி வந்த தனியார் நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது என்னுடைய தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் தூதரக அதிகாரி இதை உறுதி செய்யவில்லை என தெரிவித்தார்.

    இதற்கிடையே கலெக்டரிடம் மனு அளித்து சென்ற பின்னர் நேற்று இரவு சென்னையில் இருந்து தமிழக அரசின் அயலக தமிழர்கள் நல வாழ்வு துறை அதிகாரி ஒருவர் குணசீலனை தொடர்பு கொண்டு அவரது தந்தை எபினேசர் உயிரிழந்ததை உறுதி செய்தார்.

    அப்போது தந்தையின் உடலை விமான மூலம் கொச்சிக்கு கொண்டு வந்து பின்னர் திருச்சிக்கு கொண்டு வருவதாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தரும் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு ராஜூ எபினேசரின் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

    எபினேசரின் மனைவி ராஜேஸ்வரி கூறும்போது, கடந்த 11-ந் தேதி மாலை கணவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். விசா முடிவதால் அடுத்த மாதம் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார். அவர் பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.

    குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.
    • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார்.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேர் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.

    கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் உடல்களும் கொச்சி விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிறகு, தமிழர்களின் உடல்கள் தனி வாகனம் மூலம் கொண்டுவரப்படுகிறது.

    • விமானப்படை விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
    • அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

    7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களை பலி கொண்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன. இந்தியர்களின் சடலங்களை கொண்டு வந்த விமானப்படை விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் எடுத்து செல்லப்பட இருக்கிறது. இந்த நிலையில், உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்தியர்களின் உடல்களை எடுத்துவரும் விமானம் கேரளா வந்தடையும் முன்பே கொச்சி விரைந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். மேலும், கொச்சி விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழர்களின் சடலங்கள் தனி வாகனங்கள் மூலம் தமிழகம் கொண்டுவரப்படுகின்றன.

    • குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.
    • உடல்கள் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    குவைத் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 10 பேர் வேலைக்காக வெளியில் சென்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 15 பேர் தீ விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்த தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் மங்காப் பகுதியின் அருகே உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடலை அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலும் இன்றே அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

    • இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
    • தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததாக யாராலும் தப்பிக்க முடியவில்லை.

    அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு அடங்கிய அஹமதி மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மங்காஃப், ஃபாஹில், அபுகலிஃபா, மெஹபுல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    கரும்புகைகளுக்கு நடுவே டார்ச் லைட் அடித்து காப்பாற்றுமாறு தொழிலாளர்கள் கதறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

    ×