என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு வேலை"

    • குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.
    • இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

    கஷ்டப்பட்டு வளர்த்த மகன் ஒரு நிலைக்கு வரும்போது எந்தத் தாய்க்கும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் சாவந்த் என்ற இளைஞர், அத்தகைய ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

    கோபால் சாவந்த் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.

    தனக்கு வேலை கிடைத்த செய்தியைத் தாயிடம் சொல்ல கோபால் அவர் கடை வைத்திருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்றார்.

    தாய் காய்கறி விற்றுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்ற கோபால், தனக்கு CRPF வேலை கிடைத்த விவரத்தைக் கூறினார். இதைக் கேட்டதும் அந்தத் தாய் தனது மகனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

    வறுமை சாதிப்பதற்கு ஒரு தடையல்ல என்பது கோபால் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.  

    • மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும்.

    அலங்காநல்லூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், களத்தில் நின்று நீண்ட நேரம் விளையாடிய காளையின் உரிமையாளர்களுக்கும் கார், டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளைடக்கி பரிசு பெறும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை கண்டு களிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அவரை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் போட்டியை கண்டுகளித்தார். அப்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். அதே நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த மதுரை மண் என்பது வீரம் விளைந்த மண்ணாகவும், அப்படிப்பட்ட வீரம் விளைந்த இந்த மண்ணில் வீர விளையாட்டான உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கின்றபோது நமக்கு எல்லாம் வீரமே வருகிறது. அதனை அடக்குகிற காளையர்களை பார்க்கும்போது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்த வீரம் விளைந்த மண்ணில் அறிவு வளர்ச்சிக்காக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது உங்களுக்கு எல்லாம் தெரியும்.

    அதேபோல தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டுக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசின் மிகப்பெரிய சாதனை.

    ஆகவே இதை சொல்லுகின்ற நேரத்தில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய நான் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு போனால்தான் உங்களுக்கும் திருப்தி. எனக்கும் திருப்தி. அதனால் 2 அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

    முதல் அறிவிப்பு பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டியில் பங்பெற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணி அமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2-வது அறிவிப்பு உலக புகழ்பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு அறிவிப்பும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அந்த மகிழ்ச்சியோடு "தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக" என்று கூறி விடைபெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கிராஜுவிட்டி தொகையாக ரூ. 10 லட்சம், மனைவி ரூபாலிக்கு கிடைத்துள்ளது.
    • புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் தானேவில் இறந்த மகனின் அரசு வேலை மற்றும் பணத்திற்காக மருமகளைக் மாமியார் கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

    தானே மாவட்டம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 60 வயதான லதாபாய் கங்குர்டே என்பவர், தனது மருமகள் ரூபாலியை (35) இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

    லதாபாயின் மகன் விலாஸ் ரெயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, கிராஜுவிட்டி தொகையாக ரூ. 10 லட்சம், மனைவி ரூபாலிக்கு கிடைத்துள்ளது.

    மேலும் கருணை அடிப்படையில் வழங்கப்படும் ரெயிலவே வேலைக்காகவும் ரூபாலி விண்ணப்பித்திருந்தார்.

    ஆனால், லதாபாய் தனது 15 வயது பேரனுக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

    மேலும், மருமகளுக்குக் கிடைத்த பணத்தை மாமியார் லதாபாய் கேட்டுள்ளார்.

    இதற்கு மருமகள் மறுக்கவே, இதனால் ஆத்திரமடைந்த லதாபாய், தனது நண்பர் ஜெகதீஷ் (67) என்பவருடன் சேர்ந்து மருமகளைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

    இருவரும் சேர்ந்து புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டனர்.

    அதன் பிறகு, எதுவும் தெரியாதது போல மருமகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் லதாபாய் புகார் அளித்துள்ளார்.

    காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் லதாபாய் உண்மையை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து மாமியார் லதாபாய் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  

    • தென்காசி பேருந்து விபத்தில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா உயிரிழந்தார்.
    • உயிரிழந்த மல்லிகா பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.
    • தாய், மகள் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா. இன்று காலை அசோதை மற்றும் ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இன்று காலை திடீரென்று அசோதை வீட்டின் மேற்கூரை இடிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார் .

    இவர்களது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் நிறைவேற்றுவோம்.
    • பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    முதல்வர் நிதிஷ் குமார் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்.

    இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் முகமான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைவரையும் வியக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதி ஒன்றரை இன்று அறிவித்துள்ளார்.

    அதாவது, அரசு வேலையில் உள்ளவர்கள் குடும்பங்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்பங்களிலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    ராஷ்டிரிய ஜனதா தள அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தேஜஸ்வி யாதவ் உறுதியளித்தார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் என்டிஏ அரசாங்கத்தால் நிச்சயமின்மை நிலவுகிறது. எந்த ஒரு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

    ஆர்ஜேடி ஆட்சி அமைத்து 20 மாதங்களுக்கு பின் பீகாரில் ஒரு குடும்பம் கூட அரசு வேலை இன்றி இருக்காது. இது பீகாரில் நிலவும் வேலையின்மை பிரச்சனையை வேரோடு தகர்த்தெறியும். பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.  

    • இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததது.
    • புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மூன்று நாட்களே ஆன சிசுவை பெற்றோரே காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு தண்டோலியா. அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கும் மனைவி ராஜ்குமாரி தண்டோலியாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த அண்மையில் ராஜ்குமாரிக்கு 4ஆவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

    மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 26, 2001 அன்று மத்தியப் பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 'இரண்டு குழந்தைகள்' மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

    இதை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர் அரசுப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இந்தக் கொள்கைப்படி வேலை இழந்துவிடுவோம் என்ற பயத்தாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, கல்லிடுக்கில் கிடந்த குழந்தையைக் கண்டுபிடித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து குழந்தை பத்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

     தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

    • மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டுள்ளார்.
    • மனைவி வான்மதி தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தேடி வகின்றனர்.

    மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ. 45.4 லட்சம் மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி வான்மதி தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தேடி வகின்றனர்.

    சென்னை, கே.கே நகர், 45வது தெருவில் வசித்து வருபவர் மதியழகன். இவர், கடந்த 16 வருடங்களாக தனியார் நிறுவனத்தில் மருந்தாளுநர் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு தொழில் ரீதியாக கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமான மருத்துவர் வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட் ஆகிய இருவரும் சேர்ந்து, தமிழ்நாடு மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்களை நன்கு தெரியும் என்றும், மருத்துவதுறையில் அரசு வேலைக்கு ரூ.7 லட்சமும், மின்சாரதுறையில் அரசு வேலைக்கு ரூ.3 லட்சமும் கொடுத்தால், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

    அதன்பேரில், மதியழகன் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என்று சுமார் 15 நபர்கள் சேர்ந்து பணம் ரூ.45,41,000/-ஐ வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட்யிடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் இதுவரை அரசு வேலை வாங்கித்தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வருவதாக மதியழகன், கடந்த 02.03.2025 அன்று போலீசில் புகார் தெரிவித்தார்.

    புகாரின்பேரில், R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து, மோசடியில் ஈடுபட்ட பினகாஷ் எர்னஸ்ட் என்பவை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள மனைவியை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட பினகாஷ் எர்னஸ்ட் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.

    • இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.
    • பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது.

    அரசு வேலை என்பது பலருக்கும் லட்சியமாக உள்ளது. அந்த லட்சியத்திற்காக பாடுபடுபவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள், தோல்வியும் அடைகிறார்கள். தோல்வி அடைந்தாலும் விடாது அரசு வேலைக்காக அரும்பாடுபடுகிறார்கள்.

    இந்த நிலையில், அரசு வங்கி வேலைக்காக அயராது படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வங்கியில் வேலைபார்த்த 29-வயது இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.

    டெல்லியை சேர்ந்த 29 வயதான வாணி என்பவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மீரட் கிளையில் கடன்களை நிர்வகிக்கும் ஸ்கேல்-I அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது. இதனால் அவர் தனது வேலையை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளில் நான் மிகவும் எரிச்சலூட்டுபவளாகவும், எளிதில் கோபப்படுபவளாகவும் மாறிவிட்டேன். பணத்தை விட மன அமைதியைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன். அதேநேரம் நான் இப்படிச் சொல்வதால் யாரும் வங்கிப் பணியில் சேர வேண்டாம் என நான் சொல்லவில்லை. எனது கதையை மட்டுமே நான் இங்கு பகிர்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் கலவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதற்கு தைரியம் தேவை! எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள், மகிழ்ச்சியாக இருங்கள் என்றும், மற்றொருவர், இப்போதெல்லாம், எல்லோரும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்டாக மாறுகிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

    கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு, என்னிடம் சில சேமிப்புகள் உள்ளன. மேலும் வேலையில் இருந்தபோது அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே நான் செலவிட்டேன். நான் எந்தக் கடனும் எடுக்கவில்லை, அதனால் எனக்கு EMI இல்லை. எனது மாதாந்திர செலவுகள் 5 ஆயிரத்திற்கும் குறைவு என வாணி பதில் அளித்துள்ளார். 



    • 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வயது தளர்வை ரத்து செய்கிறது.
    • 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன.

    2002 குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னர் வழங்கப்பட்ட வயது தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த முடிவு குஜராத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 28 தேதியிட்ட மத்திய அரசின் துணைச் செயலாளரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வயது தளர்வை ரத்து செய்கிறது.

    2007 முதல் இந்த விதியின்மூலம் துணை ராணுவப் படைகள், இந்திய ரிசர்வ் பட்டாலியன்கள், மாநில காவல்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் கீழ் உள்ள பல்வேறு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயதுச் தளர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டங்கள் குவிந்து வருகின்றன.

     குஜராத் கலவரம்

    2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர்.

    இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவா அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடும் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

    அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

     மோடி அரசும், காவல்துறையுமே இதற்கு முக்கிய பொறுப்பு என அவ்வமைப்புகள் குற்றம்சாட்டின. இதற்க்கிடேயே 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரெயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், கோத்ராவில் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் உறுதி செய்தது.

    இந்த கலவரத்தை குஜராத் முதல்வராக இருந்த மோடி கையாண்ட விதம், பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த 2023 ஆம் ஆண்டு பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    • நவீன் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
    • நவீன்- பத்மா இருவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளர்களாக வேலையில் சேர்ந்தனர்.

    இன்றைய தலைமுறையினர் காதல் என்ற பெயரில் புத்தகங்களை கைவிட்டு வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    தெலுங்கானாவில் கல்லூரி காதல் ஜோடி ஒன்று அரசு வேலையில் சேர்ந்த பிறகுதான் திருமணம் என்ற லட்சியத்தில் வெற்றி பெற்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், பாப்பண்ண பேட்டையை சேர்ந்தவர் நவீன். இவர் கல்லூரியில் படிக்கும் போது பத்மா என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது இருவரும் அரசு வேலை கிடைத்தால் தான் இரு வீட்டாரின் சம்மதம் கிடைக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தி திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அரசு வேலை என்பது லட்சியம்.

    அது கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர். இதனால் பத்மா வேலைவாய்ப்பு படிப்புக்கு தேவையான பாடங்களை தேர்வு செய்து படித்து வந்தார்.

    அதேப்போல் நவீன் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். நவீன் குருப் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர், கல்லூரி உதவியாளர், கல்லூரி ஆசிரியர் உட்பட 4 அரசு பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றார்.

    பத்மா குரூப் தேர்வில் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி பேராசிரியை பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து நவீன்- பத்மா இருவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளர்களாக வேலையில் சேர்ந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் ஒரே பல்கலைக்கழகத்தில் நிரந்தர அரசு வேலை கிடைத்ததால் அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து நவீன்- பத்மா கூறியதாவது:-

    நாங்கள் அரசு வேலை என்ற லட்சியத்துடன் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று இருக்கிறோம். காதலர்கள் பலர் குறிக்கோள் இல்லாமல் திசை மாறி சென்று திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் காதல் திருமணம் வெற்றி பெறுவது இல்லை.

    திருமணம் நடந்த சில மாதங்களில் பிரிந்து விடுகின்றனர். ஆனால் நாங்கள் எங்களுடைய இலக்கை நோக்கி சென்று வெற்றி அடைந்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள்.
    • அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள்.

    சென்னை :

    தமிழகத்தில் இதுவரை அரசு வேலைவாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலை வாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அரசு வேலைவாய்ப்புக்காக 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள், 268 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.48 லட்சம்; 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 28.09 லட்சம்; 31 முதல் 45 வயதுடையவர்கள் 18.30 லட்சம்; 46 வயது முதல் 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 5,602 பேர் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் மாற்றுத்திறனாளிகள் என்று அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.

    ×