search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர் வளர்மதி தகவல்
    • தானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதானிய ஆண்டு-2023 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நாளை முதல் சிறுதானிய உணவுத்திரு விழாவானது பஸ் நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் கூடும் சந்தைகளில் நடைபெறவுள்ளது.

    மேற்படி உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி பல்வேறு அரசுத்துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி களில் இடம்பெற்றுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறுதானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை சந்தை, 2 -ந்தேதி ஓச்சேரி சந்தை, 4-ந்தேதி நெமிலி சந்தை, 5-ந்தேதி மின்னல் கிராமம்,6-ந்தேதி சோளிங்கர் பஸ் நிலையம், 7-ந்தேதி பாணாவரம் சந்தை, 8-ந்தேதி அரக்கோணம் பஸ் நிலையம், 11-ந்தேதி ஆற்காடு பஸ் நிலையம், 19-ந்தேதிராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் நுகர்வோர் மன்றங்கள் செயல்படும் கல்லூரி களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சிறுதானிய உணவுத்திரு விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    • தொலை தொடர்பு சாதனங்கள் மருத்துவ முதலுதவி கருவிகள் கொண்டு சென்றனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோ ணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படை மையம் இயங்கி வருகிறது.

    தற்போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வீரர்களை அனுப்ப தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கேட்டுக்கொண்டது.

    அதன் பேரில் 25 பேர் கொண்ட 4 குழுக்களை அனுப்ப கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்த ரவிட்டார். இதையடுத்து துணை கமாண்டன்ட் சங்கரபாண்டியன், சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் 2 குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 2 குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஏற்கனவே ஒரு குழு சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், கயிறு, நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மருத்துவ முதலுதவி கருவிகள், ஆகியவற்றை கொண்டு சென்றனர்.

    • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை: 

    ராணிப்பேட்டையில் நாளை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாளை மாலை 4 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்தும், வாக்குச்சாவடி,பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் சேகரித்தல் குறித்தும், கட்சிவளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • 130 கிராம் தங்கமும் கிடைத்தது
    • கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்யதேசங் களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு யோக நரசிம்மர் திருக்கோவில், யோக ஆஞ்சநேயர் திருக்கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், ஊர் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உள்ளன.

    கோவில்களில் வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட உண் டியல்களை திருக்கோவில் ஆணையர் ஜெயா முன்னிலையில் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. இதில் உண்டியல் காணிக்கையாக 42 லட்சத்து 49 ஆயிரத்து 536 ரூபாய் பணமும், 130 கிராம் தங்கமும், 372 கிராம் வெள்ளியும் எண்ணப்பட்டு கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் சூப்பிரண்டு சுரேஷ், கிஷோர் மற்றும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 62). இவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இந்த நிலையில் கலைச்செல்வன் நேற்று இரவு வீட்டிற்கு செல்வதற்காக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்றார்.

    வாலாஜா நோக்கி வந்த ஆட்டோ கலைச்செல்வன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கிருந்தவர்கள் கலைச்செல்வனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, காரை வீராசாமி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 66). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மன உளைச்சளுக்கு ஆளான சக்கரவர்த்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்கரவர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்
    • இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பரபரப்பு

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண். இவர் ஸ்ரீபெரும்பதுாரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த உறவினர் மகனான 30 வயது வாலிபருக்கும் பெரியோர்களால் பேசி திருமணம் செய்ய கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.

    இருவருக்கும் இன்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று மருதாணி வாங்கி வருவதாக கூறி விட்டு வெளியே சென்ற இளம்பெண் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அங்குள்ள கடைக்கு சென்று தேடினர். கடைக்காரரோ இங்கு யாரும் வரவில்லை என்ற கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். மணப்பெண் கிடைக்காததால் நெமிலி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மணப் பெண்னை தேடி வந்தனர். இதற்கிடையே, நேற்று, மாலை அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மணப்பெண் தஞ்சமடைந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை, அதனால் தான் நான் வீட்டை விட்டு சென்றுவிட்டேன் என கூறினார்.

    மேலும் இந்த மாப்பிள்ளையை எனது தோழிகளுக்கு பிடிக்கவில்லை, அதனால் எனக்கும் பிடிக்கவில்லை என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வேறு யாரையாவது காதலிக்கிறாயா? என கேட்டனர்.

    அதற்கு, நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போதே வேறு ஒரு மாப்பிள்ளையை எனது பெற்றோர் காண்பித்தால் இங்கேயே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.

    இதையடுத்து பெற்றோரிடம் செல்ல இளம்பெண்ணை போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர், செல்ல மறுத்துவிட்டார். இதனால் அந்த பெண் வாலாஜாவில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தால் அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் வழங்கினர்
    • இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது

    அரக்கோணம்:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரக்கோணம் நகர செயலாளர் வி.எல்.ஜோதி அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

    மேலும் சுவால்பே ட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.

    இந்நி கழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு.கண்ணை யன், , நகர மன்ற தலைவர் லட்சுமிபாரி, நகரத் துணைச் செயலாளர் தமிழ்வாணன், இளைஞர் அணி நகர அமைப்பா ளரும், நகர மன்ற உறுப்பினர் கே.எம்.பி பாபு, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், நகர மன்ற உறுப்பி னர்கள் நந்தாதேவி, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 வகைகளாக பிரித்து நடத்தப்படும்
    • கலெக்டர் பேச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனா ளிகளுக்கான உரிமைகள் திட்டம், மாற்றுத்திற னாளிகள் கணக்கெடுப்பு 2023 குறித்து அரசுத்து றைகள், மாற்றுத்தி றனாளிகளின் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளி களுக்கான உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்தின் கடைகோடியில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கும் சேவை களை வழங்கிட மாற்றுத்தி றனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 21 வகையான மாற்றுத்தி றனாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இதில் 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ளவர்கள் மட்டுமே மாற்றுத்தி றனாளியாக கருதப்படு வார்கள். கணக்கெடுப்பின் போது மாற்றுத்தி றனாளி களை 3 வகைகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    அனைத்து மாற்றுத்திறனா ளிகளுக்கும் நலத்திட்டங்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இக்கணக்கெ டுப்பு பணிக்கு தங்கள் இல்லம் தேடிவரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி விவரங்களை பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    முன்னதாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு 2023 குறித்த விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு கலை நிகழ்ச்சியையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மின்சார சுவிட்சை கழற்றியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த உப்பரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சம்பத் (வயது 45), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரது விவசாய நிலத்தில் நேற்று ஆழ்துளை கிணறுக்கான மின்சார சுவிட்சை கழற்றியுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுக்குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செந்தில் நகர், நாகலம்மன் நகர், கைனூர், வாணியம்பேட்டை உள்ளிட்ட அரக்கோணம் நகர எல்லை பகுதிகளுக்கு மின்சாரம் வழங் கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சில நிமிடமே பெய்த லேசான மழை காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிறு தூறல் அல்லது காற்று வீசினாலே மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக் கள், குழந்தைகள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மேலும், அடிக்கடி இது போன்று பல மணி நேரம் ஏற்படும் மின் வெட்டால் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர்.

    எனவே இது போன்று அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    • கிருத்திகையொட்டி நடந்தது
    • வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியசாமி, வள்ளி ,தேவசேனா கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    கோவிலில் மூலவர், உற்சவர் சுப்ரமணியசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று முழக்கமிட்டவாறு கிரிவலம் சென்றனர்.

    இதில் பாணாவரம், சுற்றுவாட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×