என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • தெலுங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார்.
    • நரேந்திர மோடி ஜிக்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என்று எழுதப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு பா.ஜ.க. 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. மேலும் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என கூறி திருமண பத்திரிகை வினியோகம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    தெலுங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார்.

    அந்த அழைப்புதழில் புதுமண தம்பதிகளுக்கு பரிசு பொருட்கள் எடுத்து வர வேண்டாம். மொய் எழுத வேண்டாம். அதற்கு பதிலாக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள். நீங்கள் நரேந்திர மோடி ஜிக்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என்று எழுதப்பட்டுள்ளது. பத்திரிகையின் அட்டைப் பகுதியில் மணமகன் மணமகள் பெயருக்கு கீழ் பிரதமர் மோடி படத்துடன் இந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது.
    • தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது.

    1962-ல்தான் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகு 1963-ம் ஆண்டு முதல் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

    சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. ரெட்டியார்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்பிறகு 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. 2014-ல் புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர். அதில் பா.ஜனதா மாநில தலைவராக இருந்த விஸ்வேஸ்வரன் புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.வாக நுழைந்தார்.


    அதன்பிறகு 2016 தேர்தலில் பா.ஜனதா எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் மத்தியிலிருந்த பா.ஜனதா புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. அப்போது இருந்த கவர்னர் கிரண்பேடி உறுதுணையோடு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், தற்போதைய பா.ஜனதா தலைவரான செல்வகணபதி மற்றும் கட்சியின் பொருளாராக இருந்த சங்கர் ஆகியோர் புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைந்தனர். இதன்பின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. என்ற கூட்டணி உருவானது. இதில் 9 தொகுதியில் போட்டியிட்டு 6 தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சியில் பா.ஜனதாவில் இருந்து சபாநாயகர், 2 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இதுதவிர மத்திய அரசு நேரடியாக 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களையும் புதுச்சேரிக்கு நியமித்தது. இதனால் புதுச்சேரி சட்டசபையில் தற்போது 9 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இருப்பினும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை பா.ஜனதாவின் தாமரை மலர்ந்ததே இல்லை.

    ஆரம்பகால கட்டத்தில் எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல், பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. அப்போதெல்லாம் சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டும்தான் பெற்றது. 1999-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றது. அப்போது கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் புதுச்சேரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2004-ல் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவானது. இந்த கூட்டணி சார்பில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டார். அவர்தான் கணிசமான வாக்குகளை பெற்று டெபாசிட் பெற்றார்.



    இதன்பிறகு 2009ல் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டது. பா.ஜனதா வேட்பாளர் விஸ்வேஸ்வரன் 13 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். 2014ல் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் பாஜனதா கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் புதுவை தொகுதியில் பா.ம.க. போட்டியிட்டு, தோல்வியடைந்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 4,44,981 வாக்குகள் வாங்கினார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி கேசவன் 2,47,956 ஓட்டுகள் பெற்றார். 1,97,025 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது. இதனால்தான் தற்போது புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இதற்கு சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தலைமை உறுதியாக இருந்தது.

    உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் போட்டியிட மறுப்பு தெரிவித்தாலும், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு, பா.ஜனதா மேலிடம் நேரடியாக தலையிட்டு அவரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது.

    தற்போது பா.ஜனதாவுக்கு கூட்டணி ஆட்சியும், பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 22 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

    அதோடு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயம் போட்டியிடுகிறார். ஆட்சியின் செல்வாக்கை நிரூபிக்க முதலமைச்சர் ரங்கசாமியும், தீவிரமாக களப்பணியாற்றுவார். இதனால் பா.ஜனதாவின் நீண்ட கால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து, தாமரை புதுவையில் மலரும் என்று பா.ஜனதாவினர் எதிர்பார்க்கின்றனர். புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு 1963-ம் ஆண்டு முதல் இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளது.

    1996-ம் ஆண்டு நடந்த தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வும், த.மா.கா.வும் இணைந்து தேர்தலை சந்தித்தன.

    தமிழகத்தில் வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. புதுவையில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ஜானகிராமன் தலைமையில் அமைந்தது. அமைச்சரவையில் உள்துறை பொறுப்பை ப.கண்ணன் வகித்து வந்தார்.

    1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தமிழகத்தில், தி.மு.க. கூட்டணியிலிருந்து த.மா.கா. வெளியேறியது. அதே நேரத்தில் புதுவையில் கூட்டணி ஆட்சி இருந்தது. உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ப.கண்ணன் த.மா.கா. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்பு 2000-ம் ஆண்டில் த.மா.கா., தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் புதுவை தி.மு.க. அரசு கவிழ்ந்தது.

    இதன்பின் 25 ஆண்டுக்கு பிறகு உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாராளுன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரித்திரம் திரும்பியுள்ளது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.
    • இரு கட்சிகளும் உட்கார்ந்து பேசுகிற போது பரஸ்பர மாறுதல் என்பது இயற்கையாக நடக்க கூடியதுதான்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வசம் இருந்த கோவை எம்.பி. தொகுதியில் இந்த முறை தி.மு.க. போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது.

    தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் என்பதாலேயே கோவை தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்தீர்களா? ஏன் இந்த மாற்றம்? என்று கேட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பதில் வருமாறு:-

    நாங்கள் வெற்றி பெற்ற தொகுதி கோவை என்றால் தி.மு.க. வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை தான் எங்களுக்கு தந்தார்கள்.


    இரு கட்சிகளும் உட்கார்ந்து பேசுகிற போது பரஸ்பர மாறுதல் என்பது இயற்கையாக நடக்க கூடியதுதான். தி.மு.க. கோவையில் கொஞ்சம் வலுவான வேட்பாளரை இந்த முறை நிறுத்த வேண்டும் என்று பல காரணங்களை சொன்னார்கள்.

    அப்போது அண்ணாமலை கோவையில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியாது. ஒரு யூகம்தான். அந்த வகையில் அண்ணாமலை போட்டியிடலாம் என்று நினைத்து கோவையை தி.மு.க. கேட்டிருக்கலாம். எங்களுக்கு திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கொடுத்த போது கூட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை தந்திருக்கிறோம். பலவீனமான தொகுதியை தரவில்லை என்றுதான் சொன்னார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்று அரசியல் களம் கேள்விக் குறியாகவே மாறியுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலில் போட்டியிடாமல் புறக் கணித்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேல் சபை எம்.பி. பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசனின் முடிவு சரிதானா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள்.

    தி.மு.க.வை விமர்சித்து கமல்ஹாசன் ரிமோட்டை தூக்கி வீசி டி.வி.யை உடைக்கும் பழைய வீடியோக்களை வெளியிட்டும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் ஓராண்டிலேயே நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலையும் தனித்தே சந்தித்தார்.

    இப்படி 2 பெரிய தேர்தல்களை மட்டுமே சந்தித்த நிலையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கூட்டணி அரசியலை முன்னெடுத்துச் சென்றுள்ளார். தேர்தலில் போட்டியிடாமல் விலகிச் சென்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் மற்ற கட்சிகளின் சின்னங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.


    தேர்தலில் போட்டியிடாத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான 'டார்ச் லைட்' சின்னம் தேர்தலில் களம் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க.வில் இடம் பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகளை போன்று மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை பெற்று தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்பதே பெரும் பாலானவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அது போன்று முடிவெடுக்காமல் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவதை புறக்கணித்திருப்பதன் மூலமாக மக்கள் நீதி ம்யயம் கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும்? என்கிற கேள்வியையும் அரசியல் நோக்கர்கள் முன் வைத்து உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ள கமல்ஹாசன் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையும் கூட்டணியில் இணைந்தே சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால் தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை போலவே மக்கள் நீதி மய்யம் கட்சியும் மாறிவிடும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியால் அது என்ன நோக்கத்துக்காக (மாற்று அரசியல்) தொடங்கப்பட்டதோ? அதனை எட்ட முடியாத சூழலே எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் கமல்ஹாசன் தனது மாற்று அரசியல் கோஷத்தை கைவிட்டு விட்டு கூட்டணி அரசியலை தொடரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்று அரசியல் களம் கேள்விக் குறியாகவே மாறியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
    • 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஏப்ரல்-19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    28-ந்தேதி (வியாழக்கிழமை)-கரூர், ஈரோடு, 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 1-ந் தேதி (திங்கட்கிழமை)-திருநெல்வேலி, தென்காசி, 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-கன்னியாகுமரி, 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.
    • நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.

    அதன்படி, சஹாரன்பூரில் மஜித் அலி, கைரானாவில் ஸ்ரீபால் சிங், முசாபர்நகரில் தாரா சிங் பிரஜாபதி, பிஜ்னூரில் விஜயேந்திர சிங், நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    ராம்பூரில் இருந்து ஜிஷான் கான், சம்பாலில் இருந்து ஷவுலத் அலி, அம்ரோஹாவில் இருந்து மொஸாஹித் ஹுசைன், மீரட்டில் இருந்து தேவ்ரத் தியாகி மற்றும் பாக்பத்தில் இருந்து பிரவீன் பன்சால் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    கட்சி வேட்பாளராக கவுதம் புத்த நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கியும், புலந்த்ஷாஹர் (எஸ்சி) தொகுதியில் கிரீஷ் சந்திர ஜாதவ், அயோன்லா தொகுதியில் அபித் அலி, பிலிபிட்டில் அனிஸ் அகமது கான் என்ற பூல் பாபு, ஷாஜஹான்பூரில் தோதாரம் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது
    • எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக கட்சி, பாமக , தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வரும் தேர்தலை சந்திக்கிறது.

    மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் எம்பி சுப்பிரமணிய சாமி, "பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது, தெரிந்து கண்டு பதில் சொல்கிறேன்.

    இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பாஜக அரசியல் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. விளம்பரத்தில் மட்டுமே எல்லாம் செய்து விட்டதாக பாஜக சொல்கிறது" என்று அவர் தெரிவித்தார். 

    • விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
    • மதுரையில் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான்

    பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சமகவை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். மூன்றாவது முறை மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் களம் காண்கிறார்கள். இதனால் விருதுநகரில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

    மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வழிபாடு நடத்திய பிறகு ராதிகா சரத்குமார் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய ராதிகா, "வேலைவாய்ப்பு, இருப்பிடம் மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி நாட்டுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் பல விஷயங்கள் இன்னும் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவில்லை. ஆகவே, மோடியின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி ஆக்குவேன். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம்.
    • தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார்.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்கும்போது ஏப்ரல் 10-க்கு பிறகு தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேரும். என்னை தோற்கடிக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடும்.


    குளுமையாக இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம் ஆகும். கோவையில் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. மாஸ்க் இல்லாமல் இருக்க முடியவில்லை.

    பணம் செலவிடமாட்டேன் என நான் பேசியதை எடப்பாடி பழனிசாமி முழுமையாக கேட்கவில்லை. டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கி கொடுப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    நான் வருகிற புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்து மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

    நீங்கள் வேட்பாளராக இருந்தால் எப்படி பணியாற்றுவீர்களோ, அதே போல் பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்கள் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதே வெற்றியை உறுதி செய்யும்.


    கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. வெவ்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். 20 ஆண்டுகள் ஆனாலும் நமது பழைய பணிகளை மக்கள் போற்றுகின்றனர்.

    2 டிரங்கு பெட்டிகளுடன் 2002-ல் கோவைக்கு படிக்க வந்தேன். கடின உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் ஊர் இந்த ஊர். கோவையில் பிறந்து வாழ்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    கோவை எங்களது கோட்டை என்று பலரும் சொல்லி வருகின்றனர். கோட்டையில் ஓட்டைபோட நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன்.

    இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களை சந்திப்பது மட்டுமே நமது எண்ணம். டிபன் பாக்ஸ் கொடுத்தோம், வேறு பரிசு பொருட்கள் கொடுத்தோம் என்று வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். இதில் 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்
    • தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் கமல் சேர்ந்தது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது

    தமிழ்நாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக ஒரு மாநிலங்களவை தொகுதி கொடுக்கப்பட உள்ளது. ஆனால், மக்களவை தொகுதி எதுவும் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் 29-ந்தேதி பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.கவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து பேசினார். கமல்ஹாசன் பிரசார விளம்பர வீடியோவில், தொலைக்காட்சி பெட்டியை தனது கையில் இருந்த ரிமோட்டை வைத்து உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் சேர்ந்ததை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்; இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை.

    நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை..வியூகம். தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டி.வி; நமது ரிமோட். அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்க்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்

    ஒரு தொகுதி, 2 தொகுதி என இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பிரச்சாரம் செய்ய முடியும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன்.

    என் அரசியல் எதிரி சாதியம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சாதியம் தான் எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்" என அவர் தெரிவித்தார்.

    • மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் பேராதரவை கொடுக்க காத்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சிதம்பரம் தொகுதியில் வருகிற 25-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். முதலமைச்சர்களை கைது செய்யும் புதிய நடைமுறையை அரசியலில் பா. ஜனதா கையாண்டு வருகிறது. பழிவாங்கும் வெறியோடு பா.ஜ.க. செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜனதா தோல்வி பயத்தில் இது போன்று செய்து வருகிறது.

    தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த முறை 40-க்கு 40தையும் வெல்வோம். தேர்தல் முடிவுகள் வரத் தான் போகிறது. அப்போது மக்கள் பா.ஜனதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் போட போகிறார்கள் என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 தொகுதிகளிலும் தி.மு.க.-இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
    • தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி நிலவுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நிச்சயமாக தி.மு.க.வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.-இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

    நான் எனது தூத்துக்குடி தொகுதியில் மட்டும் இல்லாமல், மேலும் 10 அல்லது 12 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். சென்னை தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வது பற்றி திட்டம் உள்ளது. எனது தேர்தல் பிரச்சார பயணத் திட்டம் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி என்று பார்க்கும் போது, தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் நிச்சயமாக பா.ஜ.க.வை, தமிழக மக்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள்.

    அண்ணாமலை சவால் விட்டுக் கொண்டு இருக்கட்டும். தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது, பார்த்துக் கொள்ளட்டும். பா.ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்று நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் முக்கியமான ஒரு மாநிலமாக இருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்குக் காரணம், திராவிட இயக்கங்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு இருக்கின்ற, ஆட்சி நடப்பதால்தான்.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு ஒருபோதும் உரு வாகாது. அந்த நிலை ஏற்பட்டால், தமிழ்நாட்டை யாருமே காப்பாற்ற முடியாது. இப்போது முதலில் அனைவரும் சேர்ந்து, நமது இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×