search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மற்ற கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய செல்வதால் கமல்ஹாசன் எதிர்காலம் என்ன ஆகும்?
    X

    மற்ற கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய செல்வதால் கமல்ஹாசன் எதிர்காலம் என்ன ஆகும்?

    • கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்று அரசியல் களம் கேள்விக் குறியாகவே மாறியுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலில் போட்டியிடாமல் புறக் கணித்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேல் சபை எம்.பி. பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசனின் முடிவு சரிதானா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள்.

    தி.மு.க.வை விமர்சித்து கமல்ஹாசன் ரிமோட்டை தூக்கி வீசி டி.வி.யை உடைக்கும் பழைய வீடியோக்களை வெளியிட்டும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் ஓராண்டிலேயே நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலையும் தனித்தே சந்தித்தார்.

    இப்படி 2 பெரிய தேர்தல்களை மட்டுமே சந்தித்த நிலையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கூட்டணி அரசியலை முன்னெடுத்துச் சென்றுள்ளார். தேர்தலில் போட்டியிடாமல் விலகிச் சென்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் மற்ற கட்சிகளின் சின்னங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.


    தேர்தலில் போட்டியிடாத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான 'டார்ச் லைட்' சின்னம் தேர்தலில் களம் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க.வில் இடம் பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகளை போன்று மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை பெற்று தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்பதே பெரும் பாலானவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அது போன்று முடிவெடுக்காமல் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவதை புறக்கணித்திருப்பதன் மூலமாக மக்கள் நீதி ம்யயம் கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும்? என்கிற கேள்வியையும் அரசியல் நோக்கர்கள் முன் வைத்து உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ள கமல்ஹாசன் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையும் கூட்டணியில் இணைந்தே சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால் தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை போலவே மக்கள் நீதி மய்யம் கட்சியும் மாறிவிடும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியால் அது என்ன நோக்கத்துக்காக (மாற்று அரசியல்) தொடங்கப்பட்டதோ? அதனை எட்ட முடியாத சூழலே எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் கமல்ஹாசன் தனது மாற்று அரசியல் கோஷத்தை கைவிட்டு விட்டு கூட்டணி அரசியலை தொடரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாற்று அரசியல் களம் கேள்விக் குறியாகவே மாறியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

    Next Story
    ×