என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • நாடு தலைகுனியும் வகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்த கட்சி தி.மு.க.
    • அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நீலகிரிக்கு கொண்டு வந்துள்ளோம்.

    ஊட்டி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஊட்டி ஏ.டி.சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த மாவட்டத்தை அதிகம் நேசித்தவர் ஜெயலலிதா. அவர் ஊட்டிக்கு வரும் போதெல்லாம் மலைவாழ் மக்களை சந்தித்து செல்வார். நீலகிரி மாவட்ட மக்களை ஜெயலலிதா மிகவும் நேசித்தார். நீலகிரிக்கு அதிக முறை வந்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை.

    நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டு பிரயோஜனம் இல்லை. அவர் தலைக்கணம் பிடித்தவராக பார்க்கப்படுகிறார். பெரியவர்களை மதிப்பதில்லை. நாட்டுக்காக பாடுபட்டவர்களை, மக்களை மதிப்பதில்லை.

    அவர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்தவர் தான் தி.மு.க. வேட்பாளர். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் புரிகிற கட்சி தி.மு.க. விஞ்ஞான முறையில் ஊழல் பண்ணும் கட்சியும் தி.மு.க.

    நாடு தலைகுனியும் வகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்த கட்சி தி.மு.க. 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்தது நாம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் மீண்டும் வர உள்ளது. ஆகவே அவர் இங்கே இருப்பாரா எங்கே இருப்பார் என்பது விரைவில் தெரிய வரும். தி.மு.க.வில் ஒவ்வொருவராக ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆ.ராசாவும் ஜெயிலுக்கு செல்வார்.

    இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் அது தி.மு.க. அரசு தான். தரைப்பகுதியில் இருந்து மலைப்பகுதி வரை போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அதனை இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    தி.மு.க.வினரே போதைப்பொருளை விற்கும்போது எப்படி அதனை தடுக்க முடியும். தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர் ஒருவர் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இன்னும் பலர் போக உள்ளனர்.

    ஊர் ஊராக சென்று ஒருவர் என்னையும், கட்சியையும் விமர்சித்து கொண்டிருக்கிறார். அவரும் செல்வார் என பரவலாக தகவல்.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களையும் செய்யவில்லை. அதனால் அவர்களால் மக்களிடம் போய் பேச முடியாது. பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் தான் எங்கு சென்றாலும் என்னையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நீலகிரிக்கு கொண்டு வந்துள்ளோம். அதனால் நாங்கள் உரிமையோடு வந்து ஓட்டு கேட்கிறோம். ஆனால் நீங்கள் இந்த மாவட்டத்திற்கு எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஒன்றும் இல்லை. எனவே மக்களாகிய உங்கள் ஆதரவோடு அ.தி.மு.க. ஆட்சி மலரும். ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா உங்களுடன் இருந்ததை போன்று எங்கள் அரசும் ஒன்றாக இருந்து, உங்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருவோம்.

    தி.மு.க. ஆட்சியில் குன்னூர், ஊட்டியில் கடை வாடகைகளை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகிற இடங்களில் எல்லாம் எடப்பாடி ஆட்சி இருண்ட ஆட்சி என்று கூறுகிறார். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது? ஊட்டிக்கு வாங்க கண்ணை திறந்து பாருங்கள் நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊட்டியில் பிரசார கூட்டம் முடிந்ததும் இன்று மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதன்பின்னர் அவர் இரவு 7 மணிக்கு கோவை நகருக்கு வருகை தருகிறார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    • கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.
    • 76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை.

    ஈரோடு:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல் களத்தை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

    இந்தியாவில் 2024-ம் ஆண்டு பாரளுமன்றத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்ய வேண்டும் என்பதற்கான தேர்தல். பா.ஜ.க. பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளார்கள்.

    2014-ம் ஆண்டு 283, 2019-ம் ஆண்டு 303 எம்.பி.க்கள் வந்த நிலையில் இந்த முறை 300 எம்.பி.க்கள் தாண்டி வர வேண்டும் என்று பாஜக உழைக்கிறது. நமது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது இந்த தொகுதியின் அடையாளமான ஜமுக்காலத்தை போர்த்திக் கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார். 100 வாக்குறுதியை வேட்பாளர் கையேடு உருவாக்கி உள்ளார்.

    உலகத்தில் யாருக்கு புரோஜனம் இல்லாமல் அரசியலில் இருப்பது கம்யூனிஸ்டு கட்சிகாரர்கள் தான்.


    தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் தான் உள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள பா.ம.க., அ.ம.மு.க. ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கு உழைக்க வேண்டும். வீடு தோறும் சென்று மோடி 3-வது முறையாக வருவார் என்று சொல்ல வேண்டும்.

    வாக்காளர்கள் எது கேட்டாலும் 10 தகவல்களை சொல்ல வேண்டும். அதில் இந்திய பொருளாதார உயர்வு, 2014-ம் ஆண்டில் உலகத்தில் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வந்தது.

    இந்திய கூட்டணி பொருளாதார வளர்ச்சி கொடுக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்க சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சமூக நீதி குறித்து சொல்ல வேண்டும். 76 அமைச்சர்களில் 11 பேர் பெண்கள், 12 பட்டியிலினவர்கள், 27 பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியோர் அமைச்சராக உள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 35 பேரில் 2 பெண்கள். 2 பேர் பட்டியலின பெண்கள். அவர்கள் குடும்ப கோட்டா அடிப்படையில் வந்து இருப்பார்கள். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே சமூக நீதி பின்பற்றப்படுகிறது. ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகள் தான் மோடி நம்புகிறார்.

    48 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 89,490 விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் 30 ஆயிரம் வங்கி கணக்கு வந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஆனால் மோடி சொல்லாமல் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்து வருகிறார்.

    பவானியில் அரசு கல்லூரி ஏன் இல்லை. ஏனென்றால் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் தனியார் கல்லூரி நடத்துவதால் அரசு கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.

    பொருளாதாரம் சமூக நீதி அனைத்து மக்களின் வளர்ச்சி பெற மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வரும் 25 ஆண்டுகளுக்கு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல்.

    2019-ம் ஆண்டு தேர்தலில் 295 தேர்தல் அறிக்கை பா.ஜ.க. கொடுத்தது. இதில் 295 அறிக்கை ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டது. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியோடு தி.மு.க. கம்யூனிஸ்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதனால் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து பேச நேருக்கு நேர் தயார்.

    தி.மு.க.வை பொறுத்தவரை கோபாலபுரம் வளர்ந்தால் போதும் என்று வளர்ச்சி நினைக்கிறார்கள். அதனால் வளர்ச்சி தேவை வீக்கம் தேவை இல்லை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

    தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. துபாய், ஸ்பெயின் போன்ற வெளிநாட்டுக்கு முதல்- அமைச்சர் சென்ற நிலையில் முதலீடு வரவில்லை.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு இதனால் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். எல்லா பக்கமும் மின் கட்டணம் உயர்வு ஏற்றப்பட்டுள்ளது

    விடியல் தருகிறேன் என்று சுடுகாட்டிற்கு பாதை அமைத்து நம்மை அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள். நரேந்திர மோடி மீண்டும் நம் நாட்டின் பிரதமராக வந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும்.

    வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது. தீவிரவாதம் இல்லை. குண்டு வெடிப்பு, கலவரம், வெளிநாட்டு கூலிப்படை இல்லாத வகையில் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


    ஆனால் தமிழகத்தில் பெண்கள் இரவு சுதந்திரமாக நடக்கவில்லை. ஹெல்மெட் போட்டு கொண்டு செல்கிறார். இதன் மூலம் கூலிப்படை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சட்டசபையில் சட்ட ஒழுங்கு சிரிக்கிறது.

    76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை. ஆனால் தமிழகத்தில் வேட்டி வாங்குவதில் முறைகேடு. குண்டூசி கூட விடாமல் தமிழகத்தில் ஊழல் உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 29 பைசா என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் உதயநிதி கஞ்சா உதயநிதி என்று சொல்லலாமா, கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க சென்றால் அறிவாலயம் வாசலில் வரிசையாக நிற்கிறார்கள். கஞ்சா விற்பனை கிராம தோறும் அதிகரித்து உள்ளது.

    முதல்வர் நிதிநிலை அறிக்கைக்கு கொடுத்தால் தான் கணக்கில் கொள்வோம் என்றார். ஆனால் மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் பணம் கணக்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். கோபாலபுரம் அனுப்பினால் தான் கணக்கு என்று சொல்கிறார்கள்.

    அரசியலை மோடி மக்கள் பக்கத்தில் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு இதுவரை எந்த பிரதமரும் கொடுக்காத அங்கீகாரத்தை மோடி கொடுத்துள்ளார்.

    மோடி சாமானிய மகனாக இருந்து உழைப்பு மூலம் வளர்ந்து வருகிறார். மேலும் சாமானிய மக்களை கண்டறிந்து கவுரவிப்பதற்காக பத்மா விருது வழங்கப்படுகிறது. மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் சாமானிய மக்கள் பற்றி மோடி பேசி வருகிறார். சாமானிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்.

    பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, லல்லு பிரசாத் மகன் ஆகியோர் நான் தான் பிரதமர் என்று சொல்லி வருகிறார்கள்.

    நாட்டை ஆட்டை அறுப்பது போல நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இதனால் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது.

    ஒவ்வொரு வாக்குகளும் பாரத பிரதமர் மோடியை வலுப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தை அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவையில் வரும் 12ம் தேதி பிரமாண்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அப்போது,

    அண்ணாமலைக்கு எதிராக ஆதரவு திரட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி வருகிற 12ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நெல்லையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து பேசும் ராகுல்காந்தி மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து 12ம் தேதி மாலையில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    கோவையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், அண்ணா மலைக்கு எதிராகவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் பேச உள்ளனர்.

    இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., இணைந்து வருகிற 12-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி 6-வது முறையாக வருகை தரும் நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரபல தலைவர்கள் யாருமே பிரசாரத்துக்கு வராமலேயே இருந்தனர்.

    இந்த நிலையில் தான் ராகுல்காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ராகுல்காந்தி வருகையை யொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்.
    • விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

    இதற்காக வி.சாலை பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    இக்கூட்டத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பொதுக்கூட்ட மைதானம் மற்றும் முதலமைச்சர் வருகை தரும் வழிநெடுகிலும் என 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விழுப்புரம் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு தங்கும் அவர், மறுநாள் 6-ந் தே தி (சனிக்கிழமை) சிதம்பரம் லால்புரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
    • இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார்.

    பீகார் மாநிலம் ஜமுய்-ல் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார். இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார். நாட்டிற்காகவும் பணியாற்றியுள்ளார். எங்களுடைய பதவி காலத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    தவறுதலாக கூட எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், மீண்டும் அந்த கலவரங்கள் தொடங்கிவிடும் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    பிரதமர் மோடி பேசும்போது "முழு அக்கறையுடன் ராம் விலாஸ் பஸ்வானின் சிந்தனைகளை என்னுடைய இளைய சகோதரர் முன்னெடுத்துச் செல்வதில் முழு திருப்தி அடைகிறேன். ஒட்டுமொத்த நாட்டிற்கும் பீகார் வழிகாட்டியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு 5-6 பீகார் தலைமுறையினருக்கு நீதி கிடைக்கவில்லை" என்றார்.

    • லஞ்சப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
    • இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் இன்று பிரசாரம் செய்தார்.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர். அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக எளிய பிள்ளைகளாகிய நாங்கள் உங்களை நாடி வந்துள்ளோம். எனவே இந்தமுறை மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.

    இன்று நாட்டில் ஊழலும் லஞ்சமும் பெருகிவிட்டது. லஞ்சப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

    டிஜிட்டல் இந்தியா என்று கூறி மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இன்னும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்காமல் அலட்சியமாக செயல்படுபவர்களை கைது செய்து 10 ஆண்டு ஜெயில் தண்டனை அளிக்க வேண்டும்.

    தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பா.ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்துள்ள பா.ம.க., த.மா.கா.வுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் எளிதாக சின்னம் கிடைத்துவிட்டது. நாங்கள் பா.ஜனதாவை எதிர்ப்பதாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாலும் கரும்பு விவசாயி சின்னத்தை எங்களுக்கு தராமல் முடக்கி வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். என் மீதான பயத்திலேயே இப்படி செய்துள்ளனர்.

    ஓட்டுப்பதிவு எந்திரத்தை கண்டுபிடித்த ஜப்பான் அதனை பயன்படுத்துவது இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தூக்கி எறிந்துவிட்டன.

    இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. அந்த எந்திரத்தை பயன்படுத்துபவர்கள் முட்டாள்கள் என்று ஜப்பான் கூறி இருக்கிறது.

    வாக்குப்பதிவு முடிந்து 41 நாள் கழித்துதான் எந்திரத்தில் பதிவான ஓட்டை எண்ணுகிறார்கள். இத்தனை நாட்களில் அதில் தில்லு முல்லு செய்ய முடியாதா? தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது. லஞ்ச ஊழல் அழுக்கு எங்கள் மீது படிந்துவிடக்கூடாது என்பதால் தனித்தே களம் இறங்கி இருக்கிறோம்.

    மத்திய சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் கட்சி சின்னமான மைக் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    • பிரதமர் மோடி பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.
    • தி.நகர் மற்றும் பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள அனைத்து லாட்ஜூகளும் இப்போதே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் களத்தில் அனல்பறக்கும் பிரசாரம் நடக்கிறது.

    இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலும் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. இதற்காக திட்டமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி 5 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசினார். தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் 4 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

    வருகிற 9-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட ரோடுஷோவில் கலந்து கொள்கிறார்.

    அங்கு பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பா.ம.க. வேட்பாளர்கள் சவுமியா அன்புமணி (தர்மபுரி), தேவதாஸ் (கள்ளக்குறிச்சி) கணேஷ் குமார் (ஆரணி), தங்கர் பச்சான் (கடலூர்), பா.ஜனதா வேட்பாளர்கள் நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கார்த்தியாயினி (சிதம்பரம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் காரில் நந்தனம் வழியாக பனகல் பூங்கா வருகிறார். அங்கிருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.

    இங்கு பா.ஜனதா வேட்பாளர்கள் டாக்டர் தமிழிசை (தென்சென்னை), வினோஜ் செல்வம் (மத்திய சென்னை), பால் கனகராஜ் (வடசென்னை), பொன்பால கணபதி (திருவள்ளூர்), பா.ம.க. வேட்பாளர்கள் ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) கே.பாலு (அரக்கோணம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    சென்னையில் பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

    பிரதமரின் 'ரோடுஷோ' நிகழ்ச்சி தொடங்கும் தி.நகர் பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரையில் சாலையில் இரு புறமும் போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ரோடு ஷோ நடத்தப்படும் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். வருகிற 9-ந் தேதி அன்று மாலை 6 மணிக்கு பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அன்று காலையில் இருந்தே அந்த பகுதி முழுவதையும் போலீசாரும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உள்ளனர்.

    டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்னைக்கு வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய உள்ளனர்.

    பிரதமரின் வருகையையொட்டி சென்னை மாநகர் முழுவதுமே டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சென்னை மாநகர் முழுவதும் சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்காக லாட்ஜூகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சி.பி.சக்கரவர்த்தி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இன்று ஆலோசித்தார்கள்.

    தி.நகர் மற்றும் பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள அனைத்து லாட்ஜூகளும் இப்போதே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பணி புரிபவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை திரட்டியுள்ள போலீசார் அதில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 'ரோடு ஷோ' நடைபெறும் அன்று தி.நகர் மற்றும் பாண்டிபஜார் பகுதியில் போக்குவரத்து மாற்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    மறுநாள் (10-ந் தேதி) காலை 11 மணிக்கு நீலகிரியில் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதில் நீலகிரி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    மாலையில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    பிரசாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் பிரதமர் மோடி மீண்டும் 13 மற்றும் 14-ந் தேதிகளில் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வருகிறார்.

    13-ந் தேதி பெரம்பலூர் பொதுக்கூட்டத்திலும், 14-ந் தேதி விருதுநகர் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். தேர்தல் பிரசாரம் வருகிற 17-ந் தேதி முடிவடைகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து இரண்டு முறை பிரதமர் மோடி தமிழகம் வருவது பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது.
    • தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் எந்தெந்த பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் பாகம் வாரியாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நிழற் பந்தல்கள், நாற்காலிகள், குடிநீர் வசதி அமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு உள்ளன.

    இந்த பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஊழியர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி விளக்கம் பெற்றுள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல்நலம் சரியில்லாத பணியாளர்கள், மருத்துவ காரணங்கள் கூறி இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    எனவே தேர்தல் பணிக்கு யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. பயிற்சி வகுப்புக்கு வராத ஊழியர்கள் அடுத்து நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு வந்து விடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எவ்வளவு பேர் வராமல் உள்ளனர் என்ற விவரம் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பட்டியல் சேகரித்து அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் தேர்தல் நடத்தும் ஊழியர்கள் முழுவதும் பெண்களாக இருப்பார்கள். இதேபோல் ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் பணியை முற்றிலும் மாற்றுத் திறனாளிகள் கவனிப்பார்கள்.

    இளம் தலைமுறையாக உள்ள அரசு ஊழியர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் மாவட்டத்துக்கு ஒன்று அமைக்கப்படும்.

    தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 702 பறக்கும் படைகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் இப்போது கூடுதலாக 191 படைகள் உருவாக்கப்படடு 893 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் 702 நிலைக் குழுக்களின் எண்ணிக்கையும் இப்போது 906 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு கணக்கு வேண்டும். இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வணிக அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளன. இதேபோல வேறு சிலரும் மனு கொடுத்திருந்தனர்.

    இவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் அதற்கு அங்கிருந்து பதில் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன்.
    • நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்தார்.

    அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் சென்று அங்கு திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நானும் மக்களில் ஒருவன் என்பதால் என் நிலைதான் அவர்களுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மாற்றம் என்பதல்ல, இப்போது முக்கியம், நம்முடைய குடியுரிமை, அரசியலமைப்பு உட்பட எல்லாவற்றையும் தற்காத்து கொள்ளும் நேரம் இது.

    கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். இந்தியன் என்பதும், தமிழன் என்பதும்தான் இன்று எனக்கு பிரதானமாக தெரி கிறது. நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கமல்ஹாசனை வரவேற்க மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரண்டு, பேரணியாக அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். ஆனால் லாஸ்பேட்டை போலீசார் தேர்தல் நன்னடத்தை விதிகளை சுட்டிக்காட்டி, பேரணியாக சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.

    • ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.
    • நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

    மதுரை:

    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகத்தில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகம் வருகை தரும் அவர் 3 இடங்களில் ரோடு-ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.

    அதற்காக அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு சிவகங்கை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவிற்கு வாக்குகளை கேட்டு ரோடு-ஷோ நடத்துகிறார்.

    முன்னதாக காலை 10 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழக ஹெலிபேட் தளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பெரியார் சிலை வந்தடைகிறார். தொடர்ந்து பெரியார் சிலை முதல் அண்ணாசிலை வரை சாலையில் நடந்து சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்கிறார். அவருடன் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

    இதையடுத்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். தொடர்ந்து தென்காசி ஆசாத் நகர் முதல் பழைய பஸ் நிலையம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று ரோடு-ஷோ மூலம் ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். முன்னதாக மதுரையில் இன்று இரவு பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பிரசார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
    • மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

    சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

    சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

    இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.

    இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.
    • அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர்.

    தருமபுரி:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று (4-ந் தேதி) தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.

    அதன்படி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் 1897 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 1228 வாக்காளர்களும் என மொத்தம் 3125 வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர், போலீசார் அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோகிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற்று கொண்டனர்.

    முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் காலை 7 மணி முதல் தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொண்டனர். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தபால் மூலம் தங்களது விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தினர்.

    அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் காணொளி பதிவாக பதிவு செய்யப்பட்டது.

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரி ரமணசரன் தலைமையில் தேர்தல் நடத்தும் குழுவினர் அன்னசாகரம், கொல்ல அள்ளி, எரகாட்டு கொட்டாய், மதிகோன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 33 தபால் வாக்குகளை சேகரித்தனர். இதேபோன்று பென்னாகரம் வாணியர் தெருவில் இன்று முதற்கட்டமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தேர்தல் நடத்தும் குழுவினர் தபால் வாக்குகளை செலுத்தினர்.

    தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பதை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம். இப்பணிக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ×