search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காரைக்குடி, தென்காசி, நாகர்கோவிலில் நாளை அமித்ஷா ரோடு-ஷோ
    X

    காரைக்குடி, தென்காசி, நாகர்கோவிலில் நாளை அமித்ஷா ரோடு-ஷோ

    • ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.
    • நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

    மதுரை:

    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகத்தில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகம் வருகை தரும் அவர் 3 இடங்களில் ரோடு-ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.

    அதற்காக அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு சிவகங்கை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவிற்கு வாக்குகளை கேட்டு ரோடு-ஷோ நடத்துகிறார்.

    முன்னதாக காலை 10 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழக ஹெலிபேட் தளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பெரியார் சிலை வந்தடைகிறார். தொடர்ந்து பெரியார் சிலை முதல் அண்ணாசிலை வரை சாலையில் நடந்து சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்கிறார். அவருடன் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

    இதையடுத்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். தொடர்ந்து தென்காசி ஆசாத் நகர் முதல் பழைய பஸ் நிலையம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று ரோடு-ஷோ மூலம் ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். முன்னதாக மதுரையில் இன்று இரவு பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பிரசார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×