search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குகளை வீடு வீடாக சென்று சேகரித்த தேர்தல் குழுவினர்
    X

    பென்னாகரம் வாணியர் தெருவில் உள்ள ஒரு மூதாட்டியிடம் தேர்தல் குழுவினர் தபால் வாக்கை ஓட்டி பெட்டியின் மூலம் பெற்று கொண்டதை காணலாம்.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குகளை வீடு வீடாக சென்று சேகரித்த தேர்தல் குழுவினர்

    • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.
    • அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர்.

    தருமபுரி:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று (4-ந் தேதி) தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.

    அதன்படி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் 1897 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 1228 வாக்காளர்களும் என மொத்தம் 3125 வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர், போலீசார் அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோகிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற்று கொண்டனர்.

    முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் காலை 7 மணி முதல் தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொண்டனர். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தபால் மூலம் தங்களது விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தினர்.

    அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் காணொளி பதிவாக பதிவு செய்யப்பட்டது.

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரி ரமணசரன் தலைமையில் தேர்தல் நடத்தும் குழுவினர் அன்னசாகரம், கொல்ல அள்ளி, எரகாட்டு கொட்டாய், மதிகோன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 33 தபால் வாக்குகளை சேகரித்தனர். இதேபோன்று பென்னாகரம் வாணியர் தெருவில் இன்று முதற்கட்டமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தேர்தல் நடத்தும் குழுவினர் தபால் வாக்குகளை செலுத்தினர்.

    தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பதை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம். இப்பணிக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×