என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
    • அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.

    ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்:-

    ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அரக்கன் திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் போன்ற சொற்களால் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இது ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.

    இது குறித்து ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் லெல்லாஅப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார்.

    சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 48 மணி நேரத்தில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாது என்று பேசி வருகிறார்கள்.
    • அ.தி.மு.க. மீது நீங்கள் கூறும் பொய்பிரசாரம் எடுபடாது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒவ்வொரு இடமாக சென்று வருகிறேன். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளமாக திரண்டு வருகிறார்கள். அதை பார்த்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால்தான் அவர் ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்.

    கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அந்த மாவட்டத்தில் போட்டியிடும் நமது வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவருடைய வெற்றி அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாது என்று பேசி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அவர் கண்ட கனவு வேறு. கூட்டணி பலம் அதிகமாக இருக்கிறது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று நினைத்தார். அது பகல் கனவாக போனது. கூட்டணி அனைத்து கட்சிகளுக்கும் தேவைதான். ஆனால் அ.தி..மு.க.வுக்கு மக்கள் பலம் உள்ளது.

    நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறீர்கள். ஆனால் அதி.மு.க. மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் பலம்தான் வலிமையானது. அந்த மக்கள் பலத்தால்தான் வெற்றி பெற முடியும். அது எங்கள் பக்கம் இருக்கிறது. அ.திமு.க. உழைப்பாளிகள் அதிகமாக இருக்கும் கட்சி. நாங்கள் உழைப்பு, மக்களை நம்பி இருக்கிறோம். எனவே இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்துவிட்டால் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அ.தி.மு.க.வில் அனைவருமே சமம். அனைவருக்கும் பொறுப்பும், உணர்வும், லட்சியமும் இருக்கிறது.

    அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை அறிவித்ததால் அதன் மூலம் மக்கள் ஏராளமான பயன் பெற்றனர். நீங்கள் பொறுப்பேற்று இந்த 3 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் போட்டோம் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். நீங்கள் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. அதி.மு.க.வை விமர்சனம் செய்கிறீர்கள்.

    அ.தி.மு.க. இருண்ட ஆட்சி என்று பேசி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தை போடுங்கள், உங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நீங்கள் பேசுங்கள், எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நானே நேரில் வந்து பேசுகிறேன். எந்த இடத்துக்கும் வந்து பேச நான் தயார். 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். வேண்டும் என்று திட்டமிட்டு அவதூறு பரப்பி பொய்யான குற்றத்தை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். அ.தி.மு.க. மீது நீங்கள் கூறும் பொய்பிரசாரம் எடுபடாது.

    நாங்கள் பா.ஜனதாவை கண்டு பயப்படவில்லை. இந்தியாவில் உள்ள எந்த கட்சியை கண்டும் எங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை. இதனால் யாரையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. தி.மு.க.தான் பா.ஜனதாவுடன் ரகசியமாக கூட்டணி வைத்து உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் கோ பேக் மோடி என போராட்டம் நடத்தினீர்கள். ஆளும்கட்சியான பிறகு வெல்கம் மோடி என்றீர்கள்.

    பிரதமர் மோடியை தமிழகத்துக்கு 6 முறை அழைத்து வந்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உதவி செய்தீர்களே.

    இரட்டை வேடம் போடும் கட்சிதான் தி.மு.க. அ.தி.மு.க. அப்படி அல்ல. தமிழகத்துக்கு நலம் சார்ந்த பிரச்சனை என்றால் அதை எதிர்ப்போம். தமிழகத்துக்கு நன்மை தரும் திட்டம் என்றால் அதை வரவேற்போம். தற்போது நாங்கள் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது தி.மு.க.வுக்கு பிடிக்க வில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் அதைபற்றி பேசி வருகிறார்கள்.

    எங்கள் மீது குறை சொல்ல எதுவுமே இல்லை. இதனால்தான் எங்களை பற்றி மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தற்போது அவர் 23-வது புலிகேசி படத்தில் வடி வேலு வருவதுபோன்று தான் செய்து வருகிறார். எனவே அவருக்கு வெள்ளை குடை பிடித்த வேந்தர் என்று பட்டம் கொடுக்கலாம்.

    தற்போது கச்சத்தீவு குறித்த பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. அந்த கச்சத்தீவு குறித்து பேச அ.தி.மு.க.வுக்குதான் தகுதி இருக்கிறது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததில் இருந்து அதை மீட்டெடுக்க அ.தி.மு.க. போராடி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.

    2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. உடனே பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் கடந்த 10 ஆண்டுகாலமாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் வந்துவிட்டதால் கிடப்பில் போடப்பட்ட கச்சத்தீவை கையில் எடுத்து உள்ளனர்.

    கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருந்து வருகிறது. ஆனால் அந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. அப்படி பதில் மனு தாக்கல் செய்து, ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மறுபரிசீலனை செய்வோம் என்ற வாக்கியத்தை சேர்த்து மனு தாக்கல் செய்தால் தானாகவே கோர்ட்டு மூலம் அந்த கச்சத்தீவை நாம் பெற முடியும்.

    ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. மீனவர்களின் வாக்குகள் தேவை என்பதால் தற்போது அந்த பிரச்சினையை பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்களே அப்போது அவர்கள் எங்கே சென்றார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவது தொடர்பாக ஏதாவது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணினாரோ?, இல்லையே.

    மத்தியில் ஆட்சி செய்த பா.ஜனதாவுக்கும், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும் மீனவ மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. மீனவ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, கோர்ட்டு மூலம் கச்சத்தீவை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த தீவை மீட்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்.

    தி.மு.க. ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் உடனே குழு நியமிக்கிறது. இதுவரை 52 குழுக்கள் நியமித்து இருக்கிறது. இந்தியாவிலேயே திட்டங்களுக்கு அதிக குழு அமைத்த ஒரே மாநிலம் தமிழகம்தான். எந்த திட்டமும் இதுவரை மக்களுக்கு வரவில்லை. கோவைக்கு ஏதாவது திட்டங்கள் அறிவித்தார்களா இல்லையே.

    கோவை மாநகராட்சியில் 500 சாலைகளை சீரமைக்க ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டது. அதை தி.மு.க. ரத்து செய்துவிட்டது. மக்களுக்கு போடப்பட்ட திட்டங்களை அரசு ரத்து செய்யக்கூடாது. எனவே இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் கோவை மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கொடுத்தோம். ஆனால் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைக்கிறது. எதுவுமே தெரியாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    தி.மு.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.656 கோடி பெற்று இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தடை செய்தோம். ஆனால் அதை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தபோது அந்த வழக்கை சரியாக நடத்தாமல் கோட்டை விட்டுவிட்டது. ஆன்லைன் ரம்மி நிறுவனங்களிடம் இருந்து ரூ.500 கோடிக்கும் மேல் தேர்தல் பத்திரம் வாங்கியதுதான் தி.மு.க.

    தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் தடையில்லாமல் கிடைக்கிறது. அதற்கு மாணவர்கள், பொதுமக்கள் அடிமையாகி இருப்பதால்தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருளை கடத்திய தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடன் தி.மு.க.வை சேர்ந்த பலர் தொடர்பு வைத்து உள்ளனர். எனவே அதில் தொடர்புடைய பலர் விரைவில் சிக்க போகிறார்கள். அவர்கள் தேர்தலுக்கு முன்பு சிறைக்கு செல்வார்களா அல்லது தேர்தலுக்கு பின்னர் செல்வார்களா என்றுதான் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சிதான் நடந்து வருகிறது.

    அதி.மு.க. ஆட்சியி ன்போது கோவைக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீரும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து உள்ளார். வெள்ளலூரில் ஒருங்கிணைக்கப்பட்ட பஸ்நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அந்த பணி 60 சதவீதம் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த பணிகள் தொடங்கப்படும். எனவே தமிழகத்தில் திமு.க. ஆட்சியை விரட்டி அடிக்க நீங்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம்.
    • எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தி.மு.க வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி , சசிகலா சிறைக்கு சென்றபோது அவர் யார் என கேட்டார். இத்தகைய குணம் கொண்ட எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் அ.தி.மு.க.விற்கும் துரோகம் செய்து விட்டார்.

    கடந்த 10 ஆண்டுகளாக பிரதமாக உள்ள மோடி தமிழகத்திற்கு இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்திடம் இருந்து பெறும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே மத்திய அரசு திரும்பி வழங்கி உள்ளது.

    நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம். எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியில் இழந்த தமிழக உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். நமது தலைவர் (மு.க.ஸ்டாலின்) யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வருமான வரித்துறையினர் 2.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
    • குல்பர்கா தொகுதியில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, மது வழங்குவதை தடுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறை அதிகாரிகளையும் முடுக்கிவிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கென சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் பணம், மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மைசூரு மாவட்டம் சாமராஜநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்களை பறிமுதல் செய்தனர். இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வருமான வரித்துறையினர் மற்றும் எஸ்எஸ்டி 3.53 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வருமான வரித்துறையினர் 2.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

    எஸ்எஸ்டி அதிகாரிகள் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள குல்பர்கா தொகுதியில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். உடுப்பி-சிக்மங்களூரு தொகுதியில் 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே 7-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    • கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், வருகையால் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கணேசன் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    இதற்காக விழுப்புரம் வி.சாலை பகுதியில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பாதுகாப்பு பணியில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், வருகையால் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

    • கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
    • 2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தெலுங்கானா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. ஐதராபாத், வாரங்கல், கம்மம் உள்ளிட்ட 14 பெரிய நகரங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன.

    2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3 கோடியே 51 லட்சத்து 93 ஆயிரத்து 978 ஆக உள்ளது. 119 சட்டமன்ற தொகுதிகள் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் பயணித்த கே.சந்திரசேகர ராவ் 2001-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை தொடங்கினார். அவரது முன்னிலையில் எடுக்கப்பட்ட போராட்டங்களால் தெலுங்கானா மாநிலம் உருவானது. இதனால் அசைக்க முடியாத தலைவராக சந்திரசேகர ராவ் உருவானார்.

    தொடர்ச்சியாக 2 முறை தேர்தலில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

    சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 39 இடங்களிலும் பா.ஜ.க-8 இடங்களிலும் வென்றது. தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 13-ந் தேதி ஒரே கட்டமாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 - ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி-9 இடங்களிலும் பாஜக- 4, காங்கிரஸ் -3, இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தெலுங்கானாவில் போட்டியில் இருந்து விலகின.

    2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தென்னிந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவற்றை விட தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. கூடுதல் கவனம் செலுத்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் டார்கெட் 75 இலக்குடன் களமிறங்கிய பா.ஜ.க., இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் இலக்குடன் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளது.

    பெண்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து முதன் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

    கட்சிக்கு புதியவரான ரேவந்த் ரெட்டி பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்வதன் மூலம் கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இருந்து ஓட்டம், வேட்பாளர்கள் பின்னடைவு, ஜெயிலில் மகள் என பல்வேறு சிக்கலில் உள்ள சந்திரசேகர ராவ் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க தீவிரமாக செயல்பட்டுகிறார்.

    சந்திரசேகர ராவ் மற்றும் அவருடைய மகன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானாவில் மண்ணின் மைந்தர் என்ற கோஷத்துடன் புறப்பட்ட பி. ஆர்.எஸ்.கட்சி இந்த தேர்தலில் ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெலுங்கா னாவை பொருத்தவரை காங்கிர சுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படுகிறது.
    • ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் முக்கிய அலுவலர்களுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பக்கத்து மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை செய்வது பற்றியும், தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார்.

    வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகளை 'சுவிதா செயலி' மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற வேண்டும்.

    பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமருக்கு மட்டும் சில விதிவிலக்கு உள்ளது. அது தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ரோடு ஷோவுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பயன்படுத்தும் வீடியோ வகை வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கும். மற்ற வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்தான் பெறவேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படுகிறது. இதுவரை 13.08 லட்சம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். இதில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதில் அதிகபட்சம் 50 ஓட்டுக்களை பதிவு செய்யலாம்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு பாடல் அடங்கிய ஆடியோ கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டப்பட்டது. தற்போது அதே பாடல், வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

    கோவை பா.ஜனதா வேட்பாளர் அண்ணாமலை, ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக வந்த வீடியோ, கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த பழைய சம்பவம் என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து வந்த புகார் மீது விசாரணை நடைபெறுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக இதுவரை வேறு புகார்கள் இல்லை.

    தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டுள்ளது.

    அதிகபட்சமாக மதுரை தொகுதியில் 511 வாக்குச்சாவடிகளும், தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகளும், தேனியில் 381 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. திருவள்ளூர் தொகுதியில் 170, வடசென்னையில் 254, மத்திய சென்னையில் 192, ஸ்ரீபெரும்புதூரில் 337, காஞ்சிபுரத்தில் 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன.

    பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாகேவே துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும். மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

    பதற்றம் குறைந்த ஓட்டு சாவடிகள் உள்ள தொகுதிகளாக பெரம்பலுார் (55 ஓட்டு சாவடிகள்), விழுப்புரம் (76 ஓட்டு சாவடிகள்), திருச்சி (84 ஓட்டு சாவடிகள்) அடையாளம் காணப்பட்டுள்ளன.

    கடந்த தேர்தலில் 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப் பதிவாகி, அதில் 75 சதவீத ஓட்டுகள் ஒரு வாக்காளருக்கு சென்றிருந்தால், அதுபோன்ற வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

    அதில் அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 39 வாக்குச்சாவடிகளும், வடசென்னையில் 18 வாக்குச்சாவடிகளும், அரக்கோணம் தொகுதியில் 15 வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    திருவள்ளூர் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேர் உள்ளனனர். அவர்கள் 12-டி படிவத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்திருந்தது.

    அதற்கு விருப்பம் தெரிவித்து 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 4.30 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகள் 3.66 லட்சம் பேரும் விண்ணப்பம் பெற்றனர். பூர்த்தி செய்த படிவங்களை 85 வயதுக்கு மேற்பட்ட 77 ஆயிரத்து 455 பேரும், மாற்றுத் திறனாளிகள் 50 ஆயிரத்து 676 பேரும் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்தே வாக்குப்பதிவு செய்யலாம்.

    அந்த வகையில் முதியவர்களிடம் வீடுகளுக்கு சென்று ஓட்டுகளை பெறும் நடவடிக்கை, திருச்சி, ஈரோடு, கோவை தொகுதிகளில் தொடங்கியுள்ளது. அவர்கள் வீடுகளுக்கு ஒரு போலீஸ் அதிகாரி, கட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் சென்று வாக்குகளை பெற்று வருகின்றனர்.

    அதற்காக அவர்கள் வீட்டிலேயே தற்காலிக வாக்குசாவடி உருவாக்கப்பட்டு, அதில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு வாக்கு செலுத்துகின்றனர்.

    அலுவலர்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பதால் ஒரே நாளில் தொகுதி முழுவதும் இப்படி வாக்கைப்பெற முடியாது. முதல் முறை வீட்டுக்கு அலுவலர்கள் செல்லும்போது, வாக்காளர் இல்லையென்றால் மேலும் ஒருமுறை ஓட்டுப்பதிவு அலுவலர்கள் செல்வார்கள். அதற்கு மேல் வாய்ப்பு கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை செய்து தரப்பட வேண்டும்.
    • குழந்தைகளை அழைத்து வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு இருக்கை வசதி அவசியம் அளிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் 19-ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து அரசுச் செயலாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உதவியாளர் மேஜை, குடிநீர், கழிவறை, சாய்தளம், மின்சார இணைப்பு வசதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை செய்து தரப்பட வேண்டும்.

    15X15 அடி அளவில் துணிப்பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரப்படவேண்டும். குறிப்பாக, குழந்தைகளை அழைத்து வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு இந்த வசதி அவசியம் அளிக்கப்பட வேண்டும்.

    கடந்த பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணிக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ.1,300 வீதம் வழங்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தப் பணிகளை மேற்கொண்டனர். மக்கள் அதிகமாக கூடும் இடம் என்பதால் சுகாதாரத்தை பேணுவதற்காக தகுந்த உத்தரவுகளை அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

    வாக்குச்சாவடிகளுக்கு எண் அளித்தல், 200 மீட்டர் எல்லைக்கோடு வரைதல், வாக்குச்சாவடிக்குள் தடுப்புகளை அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை அதரித்து தேர்தல் பணி மேற்கொண்டு வருகிறார்.
    • அலுவலகத்தில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றவில்லை என ஆவுடையப்பன் விளக்கம்.

    திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து திமுக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்க்கு வாக்குகள் திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று திடீரென வருவமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்து அவரது ஆதராவளர்களும், திமுகவினர் அலுவலம் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    வருமானவரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி பாக முகவர்கள், வட்ட செயலாளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகின.

    அதேசமயத்தில் தன்னுடைய அலுவலகத்தில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்த ஆவுடையப்பன், தன்னை பிரசாரம் செய்ய விடாமல் சுமார் இரண்டு மணி தடுத்து வைத்தனர் எனக் குற்றம்சாட்டினார்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • வரும் 19-ல் பொதுவிடுமுறையாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குகளைப் பெறும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

    • தி.மு.க. அரசின் ரூ.1,000 திட்டம் மகளிருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பயன் தருகிறது.
    • மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால் அடுத்து தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான் என்றார்

    சென்னை:

    தென் சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 3 ஆண்டுகளில் பல முத்தான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    பெண்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பயணம்; காலை உணவு திட்டம் என முத்திரை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    தி.மு.க. அரசின் ரூ.1,000 திட்டம் மகளிருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பயன் தருகிறது.

    10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வந்த முத்தான திட்டங்கள் என்னென்ன? புயல், வெள்ள பாதிப்பு நிதியை கூட பா.ஜ.க அரசு தரவில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது.

    நான் அச்சமூட்டுவதாக நினைக்க வேண்டாம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை. ஏன் நாவலிலும் கூட படித்ததில்லை என தெரிவித்தார்.

    • கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
    • நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு மத்தியில் பேசும்போது, நீலகிரியில் போட்டியிடும் ஆ.ராசாவுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    அப்போது தி.மு.க நிர்வாகிகள், உதயசூரியன் சின்னம் என்பதை நினைவுபடுத்தினர். பின்னர் சுதாரித்து கொண்ட செல்வப்பெருந்தகை, நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்களுக்கு மத்தியில் பேசியதாவது:-

    இந்த நாட்டில் அமைதி நிலவவும், ஜாதி-மத கலவரத்தை தடுத்து நிறுத்தவும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பொறுப்பு உண்டு. அவற்றை எல்லாம் நீங்கள் தடுத்து நிறுத்தி நாட்டை மேன்மைப்படுத்த வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாரோ, அதைவிட 2 மடங்கு அதிகம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

    மேலும் உங்கள் பகுதிக்கு ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு வரஉள்ளார். கொடுப்பவர்களுக்கும், எடுப்பவர்களுக்குமான தேர்தலில் கொடுப்பவராக ராகுல்காந்தியும், எடுப்பவராக மோடியும் உள்ளனர். எனவே திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×