என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.
- அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.
இன்று காலை எடப்பாடி பழனிசாமியை தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னுசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் சந்தித்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் கூறும்போது:-
விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி தந்ததுடன் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னெடுப்பு மேற்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
அதேபோல் அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்.
- பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.
- விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.
சென்னை:
சென்னை தங்க சாலை, அரசு அச்சகம் அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய இரண்டு அணிகள் நம்மை எதிர்க்கிறார்கள் என்று மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது தோன்றும். இரண்டு அணிகளும் ஒன்றுதான். ஒரு அணிதான்.
காரணம் இல்லாமல் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். காரணத்தோடுதான் அவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்னால் வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி நாள்தோறும் நரேந்திர மோடியுடனும், அமித்ஷாவுடனும் பேசிக் கொண்டிருந்தார். கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இப்பொழுது கூட்டணி இல்லை போன்று தோற்றமளிக்கிறது.
தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்று நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
அ.தி.மு.க. மேடையிலே குறிப்பாக பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியை விமர்சிப்பது கிடையாது, பாரதிய ஜனதா கட்சி மேடையிலும் அ.தி.மு.க.வை விமர்சிப்பது கிடையாது.
இரண்டு திசையிலிருந்து அம்பை எய்கிறார்கள் ஒழிய, அந்த இரண்டு அம்புகளும் நம் மீதுதான் பாய்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. ஆக தேர்தலுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு நான் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். மோடி உங்களை தழுவுவார், அது மரணத் தழுவல், உங்களை தழுவியவுடன் கூரு கூராக, உங்கள் கட்சி உடைந்து விடும். இதுதான் நடக்கும்.
மாயாவதி கட்சி இருந்த இடம் தெரியாமல் போச்சு. தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் கட்சியைத் தழுவினார். அந்த கட்சி படுதோல்வி அடைந்து இப்போ அந்த கட்சி சின்னாபின்னமாகி விட்டது.
"மரணத் தழுவல்" என்று தமிழ்ச்சொல் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேடல் எம்பிரேஸ். பாரதிய ஜனதா கட்சி யாரை தழுவினாலும், அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள். அந்த விளைவு தான் அ.தி.மு.க.வுக்கும் காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னாடி அந்த கட்சி ஏற்கனவே 2-3 கூறுகளாக பிரிந்து இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்த பிறகு, இன்னும் மோசமாகிவிடும். அதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.
பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.
பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமெல்லாம் கட்சியை முடக்க வேண்டும். கட்சி கணக்குகளை முடக்க வேண்டும். ஒடுக்க வேண்டும். பிறகு அழிக்க வேண்டும். எத்தனை கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து அழிந்து போயிருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சி பீகாரில் எண்ணற்ற கட்சிகள். ஆந்திராவில் சந்திர சேகர் ராவ் கட்சி எல்லாம் அழிந்து போய்விட்டன.
அவர்கள் நோக்கம் என்ன? இந்தியாவுல நாடு முழுவதும் தடம் பதித்த காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் பிறகு மற்ற கட்சிகளெல்லாம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மாநில கட்சிகள் தானே? திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டின் முதல் கட்சி வலிமையான கட்சி, யாரும் மறுக்க முடியாது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியிலேயே வந்ததால் ஜனநாயகம் நிலைத்திருந்தது. ஜனநாயகத்துக்காக போராடியவர்கள் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் நம்மை தலைமை ஏற்று நடத்தியதால் ஜனநாயகம் இருந்தது. அந்த ஜனநாயகத்துல தான் மோடி தப்பித்தவறி பிரதமராக வந்துவிட்டார்.
விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.
இந்த மூன்று ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த முத்தான திட்டங்களை நான் சொல்கிறேன். 1,15,00,000 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை. எங்களையும் நெகிழ வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அன்று கேலி பேசினார்கள். ஆனால் இன்று நாடு முழுவதும் மதிய உணவு திட்டம் கட்டாயத்துக்கானது. அதே அளவுக்கு புகழும் பெயரும், இன்றைய தேதியை குறிச்சிக்குங்க, நேரத்தை குறிச்சிக்குங்க. பெருந்தலைவர் காமராஜருடைய மதிய உணவு திட்டம், அவருக்கு நாடு முழுவதும் புகழையும் பெயரையும் பெற்றுத் பெற்றுத் தந்ததோ அதைப்போல் காலை சிற்றுண்டி திட்டம், ஒரு நாள் நாடு முழுவதும் பரவும். நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் பெயரும், புகழும் ஓங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மேயர் பிரியா ராஜன், இந்தியா கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டிற்கு 1.75 லட்சம் குப்பிகள் அழியாத மை சப்ளை செய்யப்பட்டுள்ளது.
- அதிகபட்சமாக 15.30 கோடி வாக்காளர்களை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்திற்கு 3.64 லட்சம் குப்பிகள் சப்ளை.
இந்தியா 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு நாளில் வாக்களித்த வாக்காளர் கையில் அழியாத மை இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும். வாக்காளர் வாக்களித்ததை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.
இந்த அழியாத மையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கும் பொறுப்பை 1962-ல் இருந்து கர்நாடகா அரசு பெற்றுள்ளது. இங்குள்ள மைசூர் பெயின்ட்ஸ் அண்டு வார்னிஷ் லிமிடெட் (The Mysore Paints and Varnish Ltd) என்ற நிறுவனம் இந்த அழியாத மையை தயாரித்து வழங்குகிறது.
இந்த முறை மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தலுக்காக 26.55 லட்சம் அழியாத மை குப்பிகளை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்காக சுமார் 55 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கடந்த 2019 தேர்தலின்போது 25.98 லட்சம் அழியாத மை குப்பிகளை இந்த நிறுவனம் சப்ளை செய்திருந்தது. அதற்கான செலவு சுமார் 36 கோடி ரூபாய் ஆகும். தற்போது 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அழியாத மை அனுப்பும் பணி நிறைவடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 15.30 கோடி வாக்காளர்களை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்திற்கு 3.64 லட்சம் குப்பிகள் சப்ளை செய்துள்ளதாகவும், குறைந்தபட்சமாக 57,500 வாக்காளர்களை கொண்ட லட்சத்தீவிற்கு 125 குப்பிகள் சப்ளை செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவிற்கு 2.68 லட்சம், மேற்கு வங்காளத்திற்கு 2 லட்சம், பீகாருக்கு 1.30 லட்சம், அந்திராவிற்கு 1.16 லட்சம், குஜராத்திற்கு 1.13 லட்சம், கேரளாவிற்கு 63 அயிரம், பஞ்சாப் மாநிலத்திற்கு 55 ஆயிரம், ஹரியானாவிற்கு 42 ஆயிரம், ராஜஸ்தானுக்கு 1.3 லசட்ம், தமிழ்நாட்டிற்கு 1.75 லட்சம், தெலுங்கானாவற்கு 1.5 லட்சம், மத்திய பிரதேசத்திற்க 1.52 லட்சம், கர்நாடகாவிற்கு 1.32 லட்சம், டெல்லிக்கு 35 ஆயிரம், ஜம்மு-காஷ்மீருக்கு 30 அயிரம் குப்பிகள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
- மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
- திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல்களை கட்டி உள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பணத்தை வாரி வழங்கி வருகிறார்கள்.
இந்த பணத்தை வைத்தே கட்சி நிர்வாகிகள் தங்களுடன் வருபவர்களுக்கு செலவு செய்கிறார்கள். மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களிடம் இது போன்ற பணம் மொத்தமாக வழங்கப்பட்டு பின்னர் பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி அதனை கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு கொடுத்து செலவு செய்ய சொல்லி வருகிறார்கள் .
கூட்டத்துக்கு ஆட்களை சேர்ப்பது பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது என அத்தனை செலவுகளும் இந்த பணத்தை வைத்தே செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
வேட்பாளரிடம் சென்று 500 ரூபாய் கட்டுகளாக பணத்தை வாங்கிய அந்த மாவட்ட நிர்வாகி கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்காமல் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குறிப்பிட்ட கட்சியின் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் இது பற்றி கட்சியின் மாவட்ட தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை தங்களது பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களிலும் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கட்சியின் பெயர் மாவட்ட செயலாளர் ஆகியோரது பெயரையும் படத்தையும் வெளியிட்டு வேட்பாளரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றவர் தலைமறைவாகி விட்டார். கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அவர் பணத்தை பிரித்து கொடுக்க வில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
தங்களது கட்சியின் பெயரை குறிப்பிட்டு நாங்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் இல்லை இருப்பினும் மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இதற்கு மேல் பணம் கொடுப்பதாக இருந்தால் அவரிடம் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களிடம் தனித்தனியாக பணத்தை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் திருவள்ளூர் தொகுதி முழுவதும் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது. தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகி சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருக்கும் சம்பவத்தை பார்த்து திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறார்கள்.
- எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தப்படும்.
- நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் அதில் உள்ள முக்கியம்சங்களை குறிப்பிட்டு பேசினார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தப்படும்.
மத்திய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.
நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும் போன்றவை தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்திருந்தன.
- மத்திய அரசு திட்டம் கொடுத்தாலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் இருந்து வருகிறது.
- இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
கோவை:
பா.ஜ.க மாநில தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான அண்ணாமலை சூலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள், தொழில்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு என்று மத்திய அரசு பவர் டெக்ஸ் என்ற திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறியாளர்களுக்கு சோலார் தகடுகள் 50 சதவீத மானியத்தில் கொடுக்கப்பட்டு வந்தது.
2021-ம் ஆண்டு வரை இந்த திட்டம் இருந்தது. இந்த திட்டத்தை அப்போது இருந்த எம்.பிக்கள் யாரும் அவ்வளவு ஆர்வமாக செயல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டம் கொடுத்தாலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் இருந்து வருகிறது. இதுவரை இருந்த எம்.பிக்களை அதனை கண்டு கொள்வில்லை.
பா.ஜனதா வெற்றி பெற்றதும் 2024 முதல் 2026-ம் ஆண்டு வரை 2 ஆண்டுக்கு மீண்டும் பவர்டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்.

சோமனூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். அம்ரூத் பாரத் திட்டத்தில் சோமனூர் ரெயில் நிலையத்தை இணைத்து, அதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
ப.சிதம்பரம் கூறுவது போல நாட்டில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்படவில்லை. இளைஞர்கள் அனைவரும் வேலையில் தான் உள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
ப.சிதம்பரமும், அவரது தலைவருமான ராகுல் காந்தியும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர். எனவே ப.சிதம்பரம், ராகுல் தான் வேலையில்லாமல் உள்ளார் என குறிப்பிட்டு இருக்கலாம். அவர்கள் தான் வேலையில்லாமல் இந்தியா முழுவதும் சுற்றி வந்து பிரச்சனை செய்து வருகின்றனர். மற்றபடி இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பதற்றமான சாவடிகள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பறக்கும் படை சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் எவ்வளவு உள்ளன? என்பது பற்றி 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னையிலும் 3 பாராளுமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்சென்னையில் 456 சாவடிகளும், வடசென்னையில் 254 சாவடிகளும், மத்திய சென்னையில் 192 சாவடிகளும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டும் 982 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளிலும் தேர்தலின் போது துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு முந்தைய நாளான 18-ந்தேதி அன்றே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த பணிகள் அடுத்த வார இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குச்சாவடி மையத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில் ஓட்டு போட வரும் வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் இடங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஆகியவை தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. துணை ராணுவ படையினருடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இப்படி பதற்றமான சாவடிகள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பறக்கும் படை சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார்.
- விஷ்ணு பிரசாத் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி:
கடலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் செல்ல காரில் வந்தார். அப்போது பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். வாகன சோதனயில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை குழு அதிகாரி தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் விஷ்ணு பிரசாத்தின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று பண்ருட்டிபகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர்.
- சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி:
இந்தியா கூட்டணியில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பானை சின்னத்தை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் முடிவு செய்தார்.
இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்ய ஆர்டர் செய்தார்.
4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர். இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்டவையாகும்.
இந்த மெகா சைஸ் பானைகள் சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார் பிரசாரம் செய்யவும் பானைகள் தயாராகி வருகிறது.
- வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது.
- திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற சக்கர வியூகம் வகுத்து வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் கும்பிட்ட கரங்களுடன் பிரசார வேனில் செல்கிறார். அவரது பேச்சு, அவருக்கென அமைந்த தனி பாணி தொடர்கிறது. பிரசார பயணம் காலையில் தொடங்கினாலும் மதிய வெயிலுக்கு ஏதாவது ஓரிடத்தில் முகாமிடுகின்றனர்.
வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது. மத்தியில் அமையும் புதிய அரசின் மூலம் திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்யபாடுபடுவேன் என்றவாறு ஓட்டு சேகரிக்கிறார்.
திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர். கட்சி நிர்வாகிகளிடம் கோஷ்டி பாகுபாடு பாராமல் அனைவருடன் சென்று வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார். அமைதியான முகத்துடன் கரம் குவித்தபடி செல்கிறார்.
ஆரத்தி தட்டுடன் பெண்கள் நின்றால் மூத்த பெண்களின் காலில் விழுந்து வணங்குகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை வேட்பாளர்கள் இல்லாமலேயே 4 அடுக்கு தேர்தல் பணி நடக்கிறது. 4 கட்ட பொறுப்பாளர் களத்தில் இறங்கியுள்ளனர். இருப்பினும் பூத் கமிட்டி மற்றும் பொறுப்பாளர்கள்தான் 40 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற வகையில் தனித்தனியே சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
பா.ஜ.க., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மற்ற கட்சிகளை காட்டிலும் வித்தியாசமாக மக்களை சந்திப்பது, வாக்காளர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. தினமும் கட்சியினர் காலையிலேயே புறப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் முன்பாகவே சென்று பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஏற்கனவே சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனுபவத்தில் உற்சாகத்துடன் பிரசாரம் செய்து வருகிறார். இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வம் , அரசியலில் மாற்றம் என்ற மாற்று சிந்தனையுடன் புதிய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் பலர் உள்ளனர். அவர்களது ஓட்டுகளை அறுவடை செய்ய வியூகம் வகுத்து செயல்படுகிறார்.
- பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார்.
சூலூர்:
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று சூலூர், காங்கேயம் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் மத்திய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வர எந்தவித முனைப்பும் காட்டவில்லை. கோவையின் வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை.
பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார்.
இந்த முறை பிரதமர் மோடியின் ஆட்சியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தங்களுக்கு தேவையானதை பெற்று கொள்ள இங்கு போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப்போவது நிச்சயம். இது வருகிற 19-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. மாற்றத்தை விரும்பும் கோவை மக்கள் மாற்றத்தின் பக்கம் நிற்பீர்கள். எனக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்.
இந்த பகுதியில் அரசு வேலை செய்கிறதோ இல்லையோ மக்கள் தங்கள் வேலைகளை செய்து தாங்களாகவே முன்னேறி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் விசைத்தறி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மீண்டும் பவர்டெக்ஸ் திட்டத்தை கொண்டு வருவோம்.
கோவையில் கடந்த 2 மாதங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு நிலவக்கூடிய குடிநீர் பிரச்சனைக்கு மாநில அரசு எந்த தீர்வும் காணவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கோவையின் நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
- 31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி.
திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பஸ் யாத்திரை சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
காளஹஸ்தி அருகே உள்ள நாயுடு பேட்டையில் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி விடிந்தவுடன் தன்னார்வலர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடு தனது உறவினரான நிம்ம கட்டா ரமேஷ் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உதவித்தொகை வழங்குவதை தடுத்து நிறுத்தினார்.
இதனால் வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி. கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் ரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெகன்மோகன் ரெட்டியை சந்திரபாபு நாயுடு அரக்கன் என கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை ரத்தம் குடிக்கும் சந்திரமுகி என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.






