search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலை சிற்றுண்டி திட்டம் மு.க.ஸ்டாலினுக்கு புகழ் சேர்க்கும்: ப.சிதம்பரம்
    X

    "காலை சிற்றுண்டி திட்டம்" மு.க.ஸ்டாலினுக்கு புகழ் சேர்க்கும்: ப.சிதம்பரம்

    • பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.
    • விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

    சென்னை:

    சென்னை தங்க சாலை, அரசு அச்சகம் அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய இரண்டு அணிகள் நம்மை எதிர்க்கிறார்கள் என்று மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது தோன்றும். இரண்டு அணிகளும் ஒன்றுதான். ஒரு அணிதான்.

    காரணம் இல்லாமல் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். காரணத்தோடுதான் அவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்னால் வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி நாள்தோறும் நரேந்திர மோடியுடனும், அமித்ஷாவுடனும் பேசிக் கொண்டிருந்தார். கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இப்பொழுது கூட்டணி இல்லை போன்று தோற்றமளிக்கிறது.

    தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்று நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    அ.தி.மு.க. மேடையிலே குறிப்பாக பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியை விமர்சிப்பது கிடையாது, பாரதிய ஜனதா கட்சி மேடையிலும் அ.தி.மு.க.வை விமர்சிப்பது கிடையாது.

    இரண்டு திசையிலிருந்து அம்பை எய்கிறார்கள் ஒழிய, அந்த இரண்டு அம்புகளும் நம் மீதுதான் பாய்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. ஆக தேர்தலுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்கு நான் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். மோடி உங்களை தழுவுவார், அது மரணத் தழுவல், உங்களை தழுவியவுடன் கூரு கூராக, உங்கள் கட்சி உடைந்து விடும். இதுதான் நடக்கும்.

    மாயாவதி கட்சி இருந்த இடம் தெரியாமல் போச்சு. தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் கட்சியைத் தழுவினார். அந்த கட்சி படுதோல்வி அடைந்து இப்போ அந்த கட்சி சின்னாபின்னமாகி விட்டது.

    "மரணத் தழுவல்" என்று தமிழ்ச்சொல் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேடல் எம்பிரேஸ். பாரதிய ஜனதா கட்சி யாரை தழுவினாலும், அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள். அந்த விளைவு தான் அ.தி.மு.க.வுக்கும் காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னாடி அந்த கட்சி ஏற்கனவே 2-3 கூறுகளாக பிரிந்து இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்த பிறகு, இன்னும் மோசமாகிவிடும். அதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.

    பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.

    பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமெல்லாம் கட்சியை முடக்க வேண்டும். கட்சி கணக்குகளை முடக்க வேண்டும். ஒடுக்க வேண்டும். பிறகு அழிக்க வேண்டும். எத்தனை கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து அழிந்து போயிருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சி பீகாரில் எண்ணற்ற கட்சிகள். ஆந்திராவில் சந்திர சேகர் ராவ் கட்சி எல்லாம் அழிந்து போய்விட்டன.

    அவர்கள் நோக்கம் என்ன? இந்தியாவுல நாடு முழுவதும் தடம் பதித்த காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் பிறகு மற்ற கட்சிகளெல்லாம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மாநில கட்சிகள் தானே? திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டின் முதல் கட்சி வலிமையான கட்சி, யாரும் மறுக்க முடியாது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

    ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியிலேயே வந்ததால் ஜனநாயகம் நிலைத்திருந்தது. ஜனநாயகத்துக்காக போராடியவர்கள் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் நம்மை தலைமை ஏற்று நடத்தியதால் ஜனநாயகம் இருந்தது. அந்த ஜனநாயகத்துல தான் மோடி தப்பித்தவறி பிரதமராக வந்துவிட்டார்.

    விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

    இந்த மூன்று ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த முத்தான திட்டங்களை நான் சொல்கிறேன். 1,15,00,000 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை. எங்களையும் நெகிழ வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அன்று கேலி பேசினார்கள். ஆனால் இன்று நாடு முழுவதும் மதிய உணவு திட்டம் கட்டாயத்துக்கானது. அதே அளவுக்கு புகழும் பெயரும், இன்றைய தேதியை குறிச்சிக்குங்க, நேரத்தை குறிச்சிக்குங்க. பெருந்தலைவர் காமராஜருடைய மதிய உணவு திட்டம், அவருக்கு நாடு முழுவதும் புகழையும் பெயரையும் பெற்றுத் பெற்றுத் தந்ததோ அதைப்போல் காலை சிற்றுண்டி திட்டம், ஒரு நாள் நாடு முழுவதும் பரவும். நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் பெயரும், புகழும் ஓங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மேயர் பிரியா ராஜன், இந்தியா கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×