search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் முந்தப்போவது யார்?
    X

    தெலுங்கானாவில் முந்தப்போவது யார்?

    • கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
    • 2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தெலுங்கானா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. ஐதராபாத், வாரங்கல், கம்மம் உள்ளிட்ட 14 பெரிய நகரங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன.

    2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3 கோடியே 51 லட்சத்து 93 ஆயிரத்து 978 ஆக உள்ளது. 119 சட்டமன்ற தொகுதிகள் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் பயணித்த கே.சந்திரசேகர ராவ் 2001-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை தொடங்கினார். அவரது முன்னிலையில் எடுக்கப்பட்ட போராட்டங்களால் தெலுங்கானா மாநிலம் உருவானது. இதனால் அசைக்க முடியாத தலைவராக சந்திரசேகர ராவ் உருவானார்.

    தொடர்ச்சியாக 2 முறை தேர்தலில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

    சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 39 இடங்களிலும் பா.ஜ.க-8 இடங்களிலும் வென்றது. தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 13-ந் தேதி ஒரே கட்டமாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 - ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி-9 இடங்களிலும் பாஜக- 4, காங்கிரஸ் -3, இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தெலுங்கானாவில் போட்டியில் இருந்து விலகின.

    2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தென்னிந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவற்றை விட தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. கூடுதல் கவனம் செலுத்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் டார்கெட் 75 இலக்குடன் களமிறங்கிய பா.ஜ.க., இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் இலக்குடன் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளது.

    பெண்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து முதன் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

    கட்சிக்கு புதியவரான ரேவந்த் ரெட்டி பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்வதன் மூலம் கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இருந்து ஓட்டம், வேட்பாளர்கள் பின்னடைவு, ஜெயிலில் மகள் என பல்வேறு சிக்கலில் உள்ள சந்திரசேகர ராவ் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க தீவிரமாக செயல்பட்டுகிறார்.

    சந்திரசேகர ராவ் மற்றும் அவருடைய மகன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானாவில் மண்ணின் மைந்தர் என்ற கோஷத்துடன் புறப்பட்ட பி. ஆர்.எஸ்.கட்சி இந்த தேர்தலில் ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெலுங்கா னாவை பொருத்தவரை காங்கிர சுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    Next Story
    ×