என் மலர்tooltip icon

    உலகம்

    • பிரதமர் மோடியின் உழைப்பையும் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
    • பொதுமக்களின் தரவுகளை கசியவிடாமல் யு.பி.ஐ.-யை சேவை கிராமப் புறங்களுக்கும் அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

    கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அரசு முறை பயணமாக கடந்த 28-ந் தேதி தொடங்கி மார்ச் 2-ந்தேதிவரை இந்தியாவுக்கு வந்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் கல்வி, வர்த்தகம், நிதி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அங்குள்ள பிரதமர் அந்தோணி அல்பானிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சிட்னியில் உள்ள ஐயோவி நிறுவனத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் உழைப்பையும் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர், "நான் பார்த்த தலைவர்களிலேயே இந்திய பிரதமர் மோடி, மிகுந்த கவனம் கொண்டவராக உள்ளார். கோடிக்கணக்கான மக்களிடைய முறையான பொருளாதாரத்தை கொண்டு சேர்த்துள்ளார். பொதுமக்களின் தரவுகளை கசியவிடாமல் யு.பி.ஐ.-யை சேவை கிராமப் புறங்களுக்கும் அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

    2001-ம் ஆண்டு முதல் பொதுவாழ்க்கையில் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை" என்று அவர் புகழாரம் சூட்டினார்.

    • வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்சியை கத்தியால் குத்திக் கொன்றனர்.
    • வெளிநாடுகளில் இருந்து கொண்டு வெறுப்பைப் பரப்பக் கூடாது

    பஞ்சாபை சேர்ந்த 45 வயதான நான்சி கிரேவால் கனடாவில் வசித்து வந்தார். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பஞ்சாபிகள் மத்தியில் மிகவும் பிரபலமான யூடியூபர் ஆவார்.

    கடந்த மார்ச் 3 ஆம் தேதி இரவு சுமார் 9:30 மணியளவில் அண்டாரியோ மாகாணத்தில் உள்ள விண்ட்சர்-எசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள லாசெல் நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்சியை கத்தியால் குத்திக் கொன்றனர்.

    தகவல் அறிந்து வந்த அவசர சிகிச்சை பிரிவினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    இவர் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தார். குறிப்பாக, தடை செய்யப்பட்ட SFJ அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னூன் மற்றும் அவரது பிரிவினைவாத கருத்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாகச் விமர்சித்து வந்தார்.

    பிரச்சினைகள் இருந்தால் இந்தியாவிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து கொண்டு வெறுப்பைப் பரப்பக் கூடாது என்று பேசி வந்தார்.

    அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  

    • உலகப் பொருளாதாரத்தின் இதயம் என்று அழைக்கப்படுவது ஹார்முஸ் ஜலசந்தி.
    • ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீதம் கச்சா எண்ணெய்யும், இந்தியாவுக்கு தேவையான 50 சதவீதம் கச்சா எண்ணெய்யும் செல்கிறது.

    வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்துக்கு நடுவே இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷியா வழங்கியுள்ளது. மேலும் நாட்டின் 40 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளது.

    உலகப் பொருளாதாரத்தின் இதயம் என்று அழைக்கப்படுவது ஹார்முஸ் ஜலசந்தி. ஈரான் அருகே அமைந்துள்ள இந்த ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீதம் கச்சா எண்ணெய்யும், இந்தியாவுக்கு தேவையான 50 சதவீதம் கச்சா எண்ணெய்யும் செல்கிறது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக இப்போது இந்த வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.

    3,200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலிலும் துறைமுகங்களிலும் தேங்கி நிற்பதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன. பெட்ரோல்-டீசல் எரிபொருளுக்கு முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளநிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை தவிர்க்கும் பொருட்டு இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் உதவுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. ரஷியா எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை காரணம் காட்டி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து இருந்ததால் இந்த உதவியை பெற இந்தியா தயக்கம் காட்டியது.

    ஆனால் தற்போது ரஷியாவின் உதவியை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி முதல்கட்டமாக இந்தியாவுக்கு 95 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷியா வழங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் ரஷியாவின் பால்டிக் மற்றும் கருங்கடல் வழியாக இந்தியாவின் அரபிக் கடலுக்கு ரஷிய கச்சா எண்ணெய் பீப்பாய்கள் வரவிருக்கின்றன.

    ஏற்கனவே இவை புறப்பட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டது. ஒருவாரத்துக்குள் அவை இந்தியாவுக்கு வந்தடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவுக்கு தேவையான 40 சதவீதம் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதாகவும் ரஷியா உறுதியளித்துள்ளது.

    இதுகுறித்து ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்தியாவுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கிறோம்" என்றுள்ளது. நாட்டின் கச்சா எண்ணெய் தேவை ஒருநாளுக்கு 60 லட்சம் பேரல்களாகும். இருப்பினும் ரஷியாவின் இந்த உடனடி உதவி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒரு முக்கியமான அவசர கால உதவியாக அமையும் என்பது மறுப்பதற்கில்லை.

    • அமேசான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
    • நடப்பு நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 16 ஆயிரம் பேரை நீக்கியுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இயங்கி வரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்தில் உலக அளவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிறுவனம் அடிக்கடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் 16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

    இந்நிலையில், ரோபோடிக்ஸ் பிரிவில் பணிபுரிந்த 150க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 57,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது.

    பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
    • அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் இலக்காகி வருவது உலகெங்கிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகள், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

    இன்று மதியம், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பரண்ட் (Parand) நகரில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது அமெரிக்காவின் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. 

    இந்த தாக்குதலில் பள்ளிக் கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான புகைப்படங்களை ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    பள்ளிகளுக்கு அருகிலுள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த துல்லியமான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை

    முன்னதாக, கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள ரேடார் மையங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    மேலும், பாரசீக வளைகுடாவின் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    நேற்று இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்டு 87 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது. 

    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
    • மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் ரஷ்யாவில் பெட்ரோல் விலையை "பாதிக்க முடியாது, பாதிக்கக்கூடாது”

    ஈரான் ஆரம்பத்திலிருந்து தற்போதுவரை தங்களிடம் இருந்து எந்த ராணுவ உதவியையும் கோரவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 6 நாட்களாக ஈரான் மீது தாக்குதலைத் தொடர்ந்துவரும் நிலையில், 'இந்த விவகாரத்தில் ஈரானிடமிருந்து எந்தக் கோரிக்கைகளும் வரவில்லை' என செய்தியாளர்களிடம் ரஷ்ய தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் ரஷ்யாவில் பெட்ரோல் விலையை "பாதிக்க முடியாது, பாதிக்கக்கூடாது" என்றும் தெரிவித்துள்ளார்.

    கமேனி உயிரிழப்புக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. ஆனாலும் தாக்குதலுக்கு அமெரிக்கா முன்வைத்த முக்கிய காரணமான அணு ஆயுத தயாரிப்பிற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.

    இருநாடுகளின் கூட்டுத் தாக்குதலால் ஈரானில் தற்போதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானும் பதிலடித் தாக்குதலை தொடர்ந்துவருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி, வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை தொடர்ந்துவருகிறது. இதனால் அந்த நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    மறுபுறம் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா, வடகொரியா, சீனா போன்றவை அதற்கு உதவவேண்டும் என பலரும் எதிர்பார்க்கும் நிலையில், எந்த நாடுகளும் இதுவரை ராணுவ உதவி குறித்து பேசவில்லை. மேலும் ஈரானும் உதவிக் கோரியதாக தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் ரஷ்யா இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது. 

    2025-ஆம் ஆண்டில், ரஷ்யாவும் ஈரானும் ஒரு மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (strategic partnership agreement) கையெழுத்திட்டன. இதில் பொதுவான அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், வடகொரியாவுடன் ரஷ்யா கையெழுத்திட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போலன்றி, இந்த ஒப்பந்தம் பரஸ்பர பாதுகாப்பு கடப்பாடுகளை (mutual defense obligations) கொண்டிருக்கவில்லை.

    • 527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
    • இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சேர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் 700க்கும் அதிகமானோர் ஈரானில் கொல்லப்பட்டனர்.

    ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக தாக்குதல் வருகிறது.

    லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 77 கொல்லப்பட்டனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    லெபனான் சுகாதார அமைச்சர் கூறுகையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 7 குழந்தைகள் அடங்குவர். சுமார் 527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் ஹிஸ்புல்லாவை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) தெற்கு லெபனானில் உள்ள நபதியே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானில் இருந்து இதுவரை சுமார் 83,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஈரானில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 6,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
    • அமெரிக்கக் கடற்படை ஈரானின் 17 போர்க்கப்பல்களை அழித்துள்ளது.

    இஸ்ரேலின் போரை நாங்கள் நடத்த விருப்பமில்லை என ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அமெரிக்க மேலவை (Senate) துணைக் குழு விசாரணையின் போது, பிரையன் மெக்கின்னிஸ் என்ற அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் இஸ்ரேலுக்காகப் போர் புரிய தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இஸ்ரேலுக்காக, அமெரிக்கா தனது மகன்களையும் மகள்களையும் போருக்கு அனுப்ப விரும்பவில்லை. இஸ்ரேல் தான் இந்தப் போருக்குக் காரணம். அமெரிக்கா இஸ்ரேலுக்காக இந்தப் போரை நடத்த விரும்பவில்லை. பாலஸ்தீனத்தை விடுவியுங்கள். போரை நிறுத்துங்கள்." என முழக்கமிட்டார். இதனால் அங்கிருந்த காவலர்கள் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்ற முயன்றனர்.

    அப்போது அவர் அங்குள்ள கதவை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இருப்பினும் பாதுகாப்புப் படையினர் அவரை வெளியே கொண்டுசெல்ல வேகமாக இழுத்தனர். இதில் அவர் கை கதவுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டது. இதனைத்தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர் அவரை இழுத்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

    இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மெக்கின்னிஸ் மீது போலீசாரைத் தாக்கியது, கைது செய்யப்படுவதைத் தடுத்தது மற்றும் சட்டவிரோதமாகப் போராட்டம் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோதலில் மூன்று போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.


    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையே இந்தச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாகும். பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார். 

    இதனால் ஈரான் பதில் தாக்குதலைத் தொடர்ந்தது. தற்போது வளைகுடா நாடுகள்மீதும் ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதனால் மத்தியில் போர்பதற்றம் அதிகரித்துள்ளது. ஐந்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்துவரும் இந்த தாக்குதலில் ஈரானில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 6,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    அமெரிக்கக் கடற்படை ஈரானின் 17 போர்க்கப்பல்களை அழித்துள்ளது. இதில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும். இதனிடையே ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அமெரிக்கா தனது வீரர்களை இஸ்ரேலுக்காகப் பலிகொடுக்கக் கூடாது என்று கூறிப் போராடி வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் இந்த சம்பவமும்.

    • நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை.
    • பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி.

    பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகிய முன்னணி சமூக வலைதளங்களை இயக்கி வரும் நிறுவனம் மெட்டா. இதன் தலைமை செயல் அதிகாரியாக பேஸ்புக்-ஐ உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

    பயனர்களின் தரவுகளை உளவு பார்க்கும், திருடும் குற்றச்சாட்டுகளுக்கு மெட்டாவின் பேஸ்புக் பல முறை உள்ளாகி நீதிமன்ற விசாரணையையும் எதிர் கொண்டது.

    மெட்டா சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி மெட்டா ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் இயங்கி வருகிறது.

    அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் Ray Ban ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ஒன்றாக உள்ளது.

    எசிலார் லுக்சோட்டிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், 2025ல் மட்டும் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

    இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இந்த Ray-Ban ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தும் பயனர்களின் அந்தரங்கக் காட்சிகள் கண்காணிக்கப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    கென்யாவின் நைரோபியில் உள்ள Sama என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள், மெட்டா கண்ணாடிகள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்து வகைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    கண்ணாடியை அணிந்துகொண்டு இருக்கும் பயனர்கள் உடைகளைக் களைவது, கழிவறைக்குச் செல்வது மற்றும் உடலுறவு கொள்வது போன்ற மிக அந்தரங்கமான காட்சிகள் இந்தக் கண்ணாடிகள் மூலம் படமாக்கப்பட்டு, அந்த ஊழியர்களுக்கு அனுப்பப்படுவதாக ஸ்வீடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    சில வீடியோக்களில் பயனர்களின் வங்கி அட்டைகள் தெளிவாகத் தெரிவதாகவும், இவை கசிந்தால் மிகப்பெரிய பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    "நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம். வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை. சிலர் இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டே உடலுறவு கொள்கிறார்கள்" என்று அந்த கென்ய நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அந்த ஊழியர்கள் பிறரின் அந்தரங்கங்களை கண்காணிக்கும் வேலையை விரும்பவில்லை என்றாலும் வேறு வழியின்றி அதில் ஈடுபட்டுள்ளதாக கூறுவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    ஏஐ-ஐ மேம்படுத்த பயனர்களின் உரையாடல்கள் மற்றும் தரவுகள் தானியங்கி முறையிலோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ ஆய்வு செய்யப்படலாம் என்று மெட்டா நிறுவனம் தனது தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இது பயனர்களின் தவறுகளை சட்டபூர்வமாக திருட ஒரு தந்திரமான வழி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.    

    • தாக்குதல் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானது
    • ஈரான் இந்த விவகாரத்தை விரைவில் தெளிவுப்படுத்தவேண்டும்

    அஜர்பைஜானின் நக்சிவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாக்குதலில் விமான நிலைய முனையக் கட்டிடம் சேதமடைந்ததுடன், அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டுபேர் காயமடைந்ததாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலுக்கு அஜர்பைஜான் கண்டனம் தெரிவித்துள்ளது.

    "அஜர்பைஜான் பிரதேசத்தின் மீதான இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானது மற்றும் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

    இஸ்லாமியக் குடியரசான ஈரான் இந்த விவகாரத்தை விரைவில் தெளிவுப்படுத்தவேண்டும், வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்." என அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தெஹ்ரானுக்கு எதிராக "பொருத்தமான பதிலடி நடவடிக்கைகளை" மேற்கொள்ளும் உரிமையை அஜர்பைஜான் கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஈரானிய எல்லையிலிருந்து சுமார் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் அமைந்துள்ள நக்சிவன் சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டிடத்தின் மீது ஒரு ட்ரோன் விழுந்ததாகவும், மற்றொரு ட்ரோன் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்திற்கு அருகே தரையிறங்கியதாகவும் அஜர்பைஜான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு, அதிபருக்கு இல்லை
    • 3 லட்சம் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைவார்கள்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% முதல் 18% வரை வரி விதித்தார்.

    அமெரிக்காவின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் (IEEPA) கீழ் டிரம்ப் இந்த வரியை விதித்திருந்தார்.

    ஆனால் கடந்த பிப்ரவரி 20 அன்று, அமெரிக்க உச்சநீதிமன்றம் இந்த வரி விதிப்பு அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்தது.

    வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு, அதிபருக்கு இல்லை என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

    இந்த சூழலில் ஏற்கனவே வரி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) தொகையை இறக்குமதியாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என மன்ஹாட்டன் நகரில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் டிரம்ப் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வாசித்த நீதிபதி ரிச்சர்ட் ஈடன், அசல் தொகையுடன் மட்டுமல்லாமல், வரி வசூலிக்கப்பட்ட நாள் முதல் கணக்கிட்டு வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்தத் தீர்ப்பால் அமெரிக்காவில் உள்ள சுமார் 3 லட்சம் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைவார்கள்.

    இதற்கிடையில், பிப்ரவரி 24 முதல் 'பிரிவு 122' என்ற மற்றொரு சட்டத்தைப் பயன்படுத்தி தற்காலிகமாக 10% வரியை உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது டிரம்ப் அரசு வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா நடத்திய 'சர்வதேச கடற்படை சீராய்வு-2026' என்ற ராணுவப் பயிற்சியில் பங்கேற்றது.
    • இலங்கை கடற்படையினர், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து 32 பேரை காயத்துடன் மீட்டனர்.

    இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் கடற்படையின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.

    இத்தாக்குதல் இலங்கை தெற்கு கடற்பகுதியில் இருந்து 40 நாட்டிக்கல் தொலைவில் நடந்தது. 180 பேர் இருந்த அந்த ஈரான் போர்க்கப்பல் சேதமடைந்து மூழ்க தொடங்கியது. போர்க்கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக்கு அவசர உதவி அழைப்பு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து 32 பேரை காயத்துடன் மீட்டனர். இந்த தாக்குதலில் 87 பேர் பலியாகி உள்ளனர். 61 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஐரிஸ் டெனா போர்க் கப்பல், சில நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய 'சர்வதேச கடற்படை சீராய்வு-2026' என்ற ராணுவப் பயிற்சியில் பங்கேற்றது. அந்த பயிற்சியை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றபோது அமெரிக்க தாக்குதலில் சிக்கியது.

    இந்த நிலையில் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஈரான் கடற்கரையில் இருந்து 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது.

    கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஐரிஸ் டெனா போர்க்கப் பலை சர்வதேச கடல்பகுதியில் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் தாக்கி உள்ளது.

    எனது வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். அமெரிக்கா தனது செயலுக்காக மிகவும் வருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ×