என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "military support"

    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
    • மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் ரஷ்யாவில் பெட்ரோல் விலையை "பாதிக்க முடியாது, பாதிக்கக்கூடாது”

    ஈரான் ஆரம்பத்திலிருந்து தற்போதுவரை தங்களிடம் இருந்து எந்த ராணுவ உதவியையும் கோரவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 6 நாட்களாக ஈரான் மீது தாக்குதலைத் தொடர்ந்துவரும் நிலையில், 'இந்த விவகாரத்தில் ஈரானிடமிருந்து எந்தக் கோரிக்கைகளும் வரவில்லை' என செய்தியாளர்களிடம் ரஷ்ய தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் ரஷ்யாவில் பெட்ரோல் விலையை "பாதிக்க முடியாது, பாதிக்கக்கூடாது" என்றும் தெரிவித்துள்ளார்.

    கமேனி உயிரிழப்புக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. ஆனாலும் தாக்குதலுக்கு அமெரிக்கா முன்வைத்த முக்கிய காரணமான அணு ஆயுத தயாரிப்பிற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.

    இருநாடுகளின் கூட்டுத் தாக்குதலால் ஈரானில் தற்போதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானும் பதிலடித் தாக்குதலை தொடர்ந்துவருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி, வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை தொடர்ந்துவருகிறது. இதனால் அந்த நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    மறுபுறம் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா, வடகொரியா, சீனா போன்றவை அதற்கு உதவவேண்டும் என பலரும் எதிர்பார்க்கும் நிலையில், எந்த நாடுகளும் இதுவரை ராணுவ உதவி குறித்து பேசவில்லை. மேலும் ஈரானும் உதவிக் கோரியதாக தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் ரஷ்யா இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது. 

    2025-ஆம் ஆண்டில், ரஷ்யாவும் ஈரானும் ஒரு மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (strategic partnership agreement) கையெழுத்திட்டன. இதில் பொதுவான அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், வடகொரியாவுடன் ரஷ்யா கையெழுத்திட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போலன்றி, இந்த ஒப்பந்தம் பரஸ்பர பாதுகாப்பு கடப்பாடுகளை (mutual defense obligations) கொண்டிருக்கவில்லை.

    ×