என் மலர்tooltip icon

    உலகம்

    • அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
    • இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தெரிவித்தார்.

     ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58 வயது).

    ஆஸ்தில்டர் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது இள வயது அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது தனது 22 ஆவது வயதில், 16 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    ஆஸ்தில்டர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்நாட்டில் கடும் கண்டனங்களை குவித்தது. இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், நேற்று முன் தினம் இரவு ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய அவர், "அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. இன்று இந்தப் பிரச்சினைகளை நான் நிச்சயமாக வித்தியாசமாகக் கையாண்டிருப்பேன். அப்போது அதற்கான முதிர்ச்சி என்னிடம் இல்லை" என்று கூறினார்.

    இதற்கிடையே இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர், "இது மிகவும் தனிப்பட்ட விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த விஷயத்தில் நான் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

    • முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
    • இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

    நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 13 பேர் படுக்கையமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

    ஆனால் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து 3 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நைஜர், மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய 3 நாடுகளும் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக அல்கொய்தா உள்ளிட்ட ஜிகாதி கிளர்ச்சிக் குழுக்களால் நடத்தப்படும் கிளர்ச்சியை ஒடுக்க போராடி வருகிறது.  

    • சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.
    • தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

    எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.

    பொய்யான தகவலை கொடுத்ததற்காக சாட்ஜிபிடி மீது நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஹோல்மென் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.

    அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார்.

    இதற்கான பதிலளித்த சாட்ஜிபிடி, "ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொன்றுக்கு ஏழு வயது.

    இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020 இல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது" என்று கூறியுள்ளது.

    அர்வே ஜால்மர் ஹோல்மென்

    இதைக் கண்டு ஹோல்மன் அதிர்ச்சியடைந்தார். இதற்குப் பிறகு, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகிய அவர், அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்தார்.

    இதில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்யை மக்கள் உண்மை என்று நம்பக்கூடும் என்பது ஹோல்மனின் கவலை.

    இந்த நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  

    • இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர்
    • இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைனிய நகரமாக ஜபோரிஷ்யாவில் நேற்று இரவு ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது நடந்த ரஷிய டிரோன் தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜாபோரிஷ்யா மீது 10 முறை தாக்குதல் நடந்ததகவும், இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்தனர் என அந்நகரின் ஆளுநர் இவான் பெட்ரோவ் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

     

    மேலும் வடகிழக்கில் உள்ள சுமி (Sumy) பகுதியில் உள்ள கிராமத்தில் ரஷியா குறைந்தது 6 குண்டுகளை வீசியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உக்ரைன் கிழக்கில் உள்ள டோன்ட்ஸ்க் (Donetsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்றும் அம்மகானை ஆளுநர் தெரிவித்தார்.

     

    இதனையடுத்து ரஷியாவின் வோரோனிஸ், பெலோகிராட் ரோஸ்டோவ் வோலோகிராட் உள்ளிட்ட பகுதிகள் மீது உக்ரைன் ஏவிய 47 டிரோன்களை இடைமறித்து அளித்ததாகவும், மொத்தம் 6 பேர் காயமடைந்ததாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த வியாழக்கிழமை போர் நடைபெறும் எல்லையில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷியாவின் ஏங்கல்ஸ் ராணுவ விமானத் தளம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.

    சோவியத் காலத்திலிருந்தே ஏங்கல்ஸ் தளத்தில், வைட் ஸ்வான்ஸ் என்று அழைக்கப்படும் டுபோலேவ் டு-160 அணுசக்தி திறன் கொண்ட கனரக குண்டுவீச்சு விமானங்கள் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலின் வீடியோவும் வைரலாகியது.

    2022 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மோசமாக்கியுள்ளது. 

    • காசா மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
    • இதனைத் தொடர்ந்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை.

    இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்னும் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலின் மெடுலா நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை வானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. எச்சரிக்கை விடுத்த நிலையில் லெபனான் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான்- இஸ்ரேல் எல்லையில் உள்ள இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட், ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

    லெபனான்- இஸ்ரேல் இடையே கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது ஜனவரி மாதம் இறுதிக்குள் லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது, பின்னர் பிப்ரவரி 18-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் நாட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற உத்தரவிடக்கோரி லெபனான் ஐ.நா. உதவியை நாடியுள்ளது.

    • துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
    • ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநா தெரிவித்திருந்தது.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில்  உள்ள அதிபர் மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை சூடான் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     

    துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி, மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சூடான் இராணுவம் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    உள்நாட்டு போரில் கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

     

    கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் சூடானில் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை மதிப்பிடுகிறது .

    • 6 வயது சிறுமி ரோகித் சர்மாவை போல் புல்ஷாட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • பயனர்கள் பலரும் சிறுமி சோனியா கானின் திறமையை பாராட்டி பதிவிட்டனர்.

    கிரிக்கெட் விளையாட்டு சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த சோனியா கான் என்ற 6 வயது சிறுமி ரோகித் சர்மாவை போல் புல்ஷாட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், சிறுமிக்கு ஒருவர் பந்து வீசுகிறார்.

    அப்போது சோனியா கான் ரோகித் சர்மாவை போலவே புல்ஷாட் அடிக்கிறார். இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 12 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

    பயனர்கள் பலரும் சிறுமி சோனியா கானின் திறமையை பாராட்டி பதிவிட்டனர். ஒரு பயனர், சோனியா கான் ஒரு தொழில்முறை நிபுணரை போல விளையாடுகிறார் என பதிவிட்டார்.



    • குடியேற்ற விஷயங்கள் ஒரு நாட்டின் இறையாண்மை செயல்பாடுகளுக்குள் இருக்கின்றன.
    • மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டால் அவர்களுக்கு இந்திய தூதரகங்கள் உதவும்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதில் பங்கேற்ற இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசனின் விசா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து தாமாக வெளியேறினார். இதற்கிடையே ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவரான பதர் கான் சூரி, ஹமாசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    விசா மற்றும் குடியேற்ற விஷயங்கள் ஒரு நாட்டின் இறையாண்மை செயல்பாடுகளுக்குள் இருக்கின்றன. இதுபோன்ற உள் விஷயங்களைத் தீர்மானிக்க அமெரிக்காவிற்கு உரிமை உண்டு. வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வரும்போது, அவர்கள் எங்கள் சட்டங்கள், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    அதேபோல், இந்தியர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது, அந்நாட்டின் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    மாணவர்கள் ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர்களுக்கு உதவும். பதர் கான் சூரி, ரஞ்சினி சீனிவாசன் ஆகியோர் உதவிக்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகவில்லை. ரஞ்சினி சீனிவாசன் கனடாவுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரோல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் குடியேறினர்.
    • 2 ஆண்டுகள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த நிலையில் கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளில் குடியேறிய 5.32 லட்சம் பேரின் சட்டப் பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.

    இவர்கள் கடந்த ஜோபைடன் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் 2 ஆண்டு மனிதாபிமான பரோல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் குடியேறினர். இவர்கள் அமெரிக்காவில் வாழவும், வேலை செய்யவும் 2 ஆண்டுகள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    தற்போது சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

    • இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
    • இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது.

    கொழும்பு:

    இலங்கை அதிபர் அனுரா திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 5-ந்தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அனுரா திசநாயகே தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் கூறும்போது, இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மகிந்த ஜெயதிஸ்ச கூறும்போது, இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது. இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி வருகையின்போது கையெழுத்தாகும்.

    இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவாட் (நிலை 1) மற்றும் 70 மெகா வாட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாடு ஆகியவை, இலங்கை மின்சார வாரியம், இந்திய தேசிய வெப்ப மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.

    முன்னதாக, இந்த இடத்தில் ஒரு நிலக்கரி மின் நிலையத்தை இந்தியா கட்ட இருந்தது. தற்போது அது புதிய கூட்டு முயற்சியில் சூரிய மின் நிலையமாக மாற்றப்படுகிறது.

    • ஆஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அதன்படி நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவில் லெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை நேற்று தொடர்ந்து 3 முறை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. எனவே ஆஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ஆறாக பாய்ந்தது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

    • தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர்.
    • தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் நிக்கோலசை கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் பிரோஸ்பர் (வயது 19). கடந்த ஆண்டு இவருக்கும், தாய் ஜூலியானா பால்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் திடீரென வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் நிக்கோலசை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். எனவே நிக்கோலசுக்கு 49 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    ×