என் மலர்
உலகம்
- சுமார் 2,000 போராட்டக்காரர்கள் நகர மையத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- முகமூடிகளைப் பயன்படுத்துவதை டிரம்ப் தடை செய்துள்ளார்.
வெளிநாட்டவரை கைது செய்து நாடுகடத்தும் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
போராட்டங்கள் நகரின் மையப்பகுதியை ஸ்தம்பிக்கச் செய்துள்ளன. நகர மையத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோதனை மேற்கொள்ளும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) துறைக்கு எதிராக, சுமார் 2,000 போராட்டக்காரர்கள் நகர மையத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தானியங்கி கார்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, முகமூடிகளைப் பயன்படுத்துவதையும் டிரம்ப் தடை செய்துள்ளார்.
இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய பெண் செய்தியாளர் ஒருவர் ரப்பர் தோட்டாவால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைன் நியூஸ் அமெரிக்க செய்தியாளர் லாரன் டோமாசி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தபோது அவரது காலில் ரப்பர் தோட்டா தாக்கியது. இந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, அங்கிருந்த போராட்டக்காரர்கள் டோமாசியிடம் சென்றனர். அவர் நலமாக இருப்பதாகப் பதிலளித்தார். சில போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை நோக்கி, "நீங்கள் செய்தியாளரை சுட்டுக் கொன்றீர்கள்" என்று கோஷமிட்டனர்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து நைன் நியூஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. லாரன் டோமாசி மற்றும் அவரது கேமராமேன் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்கள் செய்திகளை வெளியிடுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.
- கிரேட்டா தன்பர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல் கடந்த வாரம் பயணத்தை தொடங்கியது.
காசாவுக்குள் கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.
அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல் ஜூன் 1 ஆம் தேதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து கப்பல் புறப்பட்டது.
சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணக்குழுவில் உள்ளனர்.
இந்நிலையில் கப்பலை கைப்பற்றியுள்ள இஸ்ரேல், அதில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மேடலின் கப்பலையும் தன்னார்வலர்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் காசாவில் தனது படுகொலைகளைத் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், காசாவில் 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உணவு தேடி உதவி மையம் வந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்துள்ளனர்.
- அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது.
- இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வெகுவாக குறைந்தது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக 2ஆவது முறை பதவி ஏற்றதும், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உலக நாடுகள் குறைக்க வேண்டும். இல்லையென்றால் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அமல்படுத்தினார். பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்டதன் விளைவாக 90 நாட்களுக்கு அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளார். அதேளையில் சீனா பதில் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த வருடம் மே மாதம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சீனா அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்திருந்தது. தற்போது கடந்த மாதம் இது 28.8 பில்லியன் அமெரிக்க டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 10.8 பில்லியன் டாலர் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 12 சதவீதமாக இருந்தது. தற்போது 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியாவிற்கான ஏற்றுமதி குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரித்துள்ளது. ஜெர்மனிக்கான ஏற்றுமதி 12 சதவீத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது மொத்த ஏற்றுமதி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி 3.4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வர்த்தக உபரி 103.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேசினார். அப்போது வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.
- நேற்றி இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தாக்குதல்.
- பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல்.
ரஷியா நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் டிரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
479 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் டிரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை டிரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ஷாஹேத் வகை டிரோன்கள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்திய வருகிறது. கடந்த 3 வருடத்திற்கு மேலாக ரஷியா நடத்திய தாக்குதலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ரஷியா விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட ரஷிய விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ரஷியா தாக்குதலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே ரஷியா- உக்ரைன் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஆயிரக்கணக்கான கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
- ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு வங்காளதேச இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
- தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது.
டாக்கா, ஜூன்.9-
வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகினார். இதையடுத்து வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது.
இதன் காரணமாக ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்தியா-வங்கதேசம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு வங்கதேசம் இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேசம் மக்களுக்கும், இடைக்கால அரசின் தலை வர் முகமது யூனுசுக்கும், பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பிய முகமது யூனுஸ், இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.
வங்காளதேச இடைக் கால அரசின் எக்ஸ் வலை தளத்தில் பகிரப்பட்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இந்தியா, வங்காளதேசம் ஆகிய 2 நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
- அரசு அலுவலகத்தை பயன்படுத்தி ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு.
- இது தொடர்பான வழக்கு தலைநகர் அக்ராவில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
அக்ரா:
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் முன்னாள் நிதித்துறை மந்திரி கென் ஒபோரி அட்டா (65). அவர் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்துக்கு பயன்படுத்தி சுமார் ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு தலைநகர் அக்ராவில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக அவர் வெளிநாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேடப்படும் நபராக கானா அரசாங்கம் அவரை அறிவித்தது. பின்னர் அவரை கைதுசெய்ய சர்வதேச போலீசின் உதவியை அரசாங்கம் நாடியது.
இந்நிலையில், வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சர்வதேச போலீசின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது எந்த நாட்டுக்கும் தப்பிச் செல்லாமல் இருக்க உலகம் முழுவதும் உள்ள போலீசுக்கு அறிவுறுத்தப்படுவதை குறிக்கிறது.
- நிலநடுக்கத்தின் எதிரொலி மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொலம்பியாவில் உள்ள பொகோட்டா என்ற பகுதி அருகே சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது சரியாக உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் எதிரொலி மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- டிரம்ப்பின் " பிக் பியூட்டிபுல் பில்" என்ற வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் எதிர்த்தார்.
- தங்கள் உறவு முடிந்துவிட்டது என்றும் அவர்கள் உறவை சரிசெய்ய எந்த விருப்பமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், வரிக்குறைப்பு மசோதாவுக்கு வாக்களிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மஸ்க் என்ன விளைவுகளைச் சந்திப்பார் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.
என்.பி.சி நியூஸ் பேட்டியில் டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டார்.
டிரம்ப்பின் " பிக் பியூட்டிபுல் பில்" என்ற வரிக்குறைப்பு மசோதா குறித்த மஸ்கின் கடுமையான விமர்சனமே இந்த மோதலுக்குக் காரணம்.
கடந்த ஆண்டு குடியரசுக் கட்சியின் பெரிய நிதி ஆதரவாளர்களில் ஒருவரான மஸ்க் விளங்கினார். இந்நிலையில் இப்போது மசோதாவை எதிர்த்த சில சட்டமியற்றுபவர்கள், மசோதாவுக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு எதிராக நிதி திரட்டும்படி மஸ்க்கிடம் கோரியிருந்தனர்.
இந்த சூழலில்தான், "அவர் அப்படிச் செய்தால் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று டிரம்ப் என்.பி.சி நியூஸிடம் கூறினார். மேலும், மஸ்க் "மரியாதையற்றவர்" என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தங்கள் உறவு முடிந்துவிட்டது என்றும் அவர்கள் உறவை சரிசெய்ய எந்த விருப்பமும் இல்லை என்றும், அவருடன் பேச எந்த நோக்கமும் இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.
- யூரிப் இரத்த வெள்ளத்தில் காரின் பானட்டில் கிடப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
- அவரது தாயார் டயானா டர்ப், 1990 இல் போதைப்பொருள் மாஃபியா டான் பாப்லோ எஸ்கோபரின் கும்பலால் கடத்தப்பட்டவர்.
கொலம்பிய செனட்டரும் 2026 அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (39), சனிக்கிழமை தலைநகர் போகோடாவில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தார்.
பொது பூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் பின்னால் இருந்து அவரைச் சுட்டனர்.
சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. யூரிப் இரத்த வெள்ளத்தில் காரின் பானட்டில் கிடப்பதும், மக்கள் உதவ விரைவதும் தெரிகிறது.
அவரது கழுத்து அல்லது தலையில் தோட்டா தாக்கியதாகவும், தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
தாக்குதலில் வேறு எவரும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
கொலம்பிய அதிபர் அலுவலகம் இந்த வன்முறைத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கொலம்பிய அதிபர் அல்வாரோ உரிப்பால் நிறுவப்பட்ட ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த மிகுவல் யூரிப், நாட்டின் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதி ஆவார்.
அவரது தாயார் டயானா டர்ப், 1990 இல் போதைப்பொருள் மாஃபியா டான் பாப்லோ எஸ்கோபரின் கும்பலால் கடத்தப்பட்டு, மீட்பு நடவடிக்கையின் போது உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியா நீண்ட காலமாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நாட்டில் நிலவும் அமைதியின்மையை பிரதிபலிக்கிறது. ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, யூரிப்பின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
- கருத்துக்கணிப்புக்கு 80 சதவீத மக்கள் அதாவது, 56.30 லட்சம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்தனர்.
- உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைதளத்தில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என்று கேள்வி கேட்டு இருந்தார்.
இந்தக் கருத்துக்கணிப்புக்கு 80 சதவீத மக்கள் அதாவது, 56.30 லட்சம் பேர் 'ஆம்' என்று பதில் அளித்தனர். அமெரிக்க மக்களின் இந்த பதில், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இதையடுத்து எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். மேலும் தான் தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரையும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன். அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருப்பது விதி.
கட்சியின் பெயரை 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்று சொல்வது நல்ல தொனியாக உள்ளது. உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சட்டவிரோத குடிபெயர்த்தோரை கண்டறிய செயல்படும் ஐசிஇ(ICE) நடத்திய குடிவரவு சோதனைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் தெருவில் கூடினர்
- நாளொன்றுக்கு குறைந்தது 3,000 ICE கைதுகளை இலக்காக நிர்ணயித்த டிரம்ப் தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
இந்நிலையில் அமெரிக்காவில் குடிவரவு சோதனை நடவடிக்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டாவது நாளாகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அங்கு 2,000 ராணுவ வீரர்களைக் குவிக்க டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சனிக்கிழமையும் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பரமவுண்ட் நகரில் மத்திய படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்தன.
சட்டவிரோத குடிபெயர்த்தோரை கண்டறிய செயல்படும் ஐசிஇ(ICE) நடத்திய குடிவரவு சோதனைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் தெருவில் கூடினர். கூட்டத்தைக் கலைக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
வெள்ளிக்கிழமை நடந்த குடிவரவு நடவடிக்கையில் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் குறைந்தது 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சுமார் 1,000 போராட்டக்காரர்கள் அரசு கட்டடம் வெளியே கூடி, சொத்துக்களைச் சேதப்படுத்தியதுடன், வாகன டயர்களைக் கிழித்து, அதிகாரிகளைத் தாக்கியதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.

பதிவில்லாத புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வெளியேற்றுவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியே இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நடவடிக்கை. இதற்கிடையே நாளொன்றுக்கு குறைந்தது 3,000 ICE கைதுகளை இலக்காக நிர்ணயித்த டிரம்ப் தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிலளித்த அதிபர் டிரம்ப், "கலிபோர்னியாவின் கவர்னர் கேவின் நியூசமும், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரண் பாஸும் தங்கள் வேலையைச் செய்ய முடியாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு கலவரங்கள் மற்றும் கொள்ளையர்கள் பிரச்சனையைச் சரியான முறையில் தீர்க்கும்!" என்று காட்டமாகப் பதிவிட்டார்.

நடந்து வரும் போராட்டங்களை "அமெரிக்காவின் சட்டங்கள் மற்றும் இறையாண்மைக்கு எதிரான கிளர்ச்சி" என்று வெள்ளை மாளிகையின் துணைத் தலைமைப் பணியாளர் ஸ்டீபன் மில்லர் கண்டித்தார்.
- "நான் ஒரு நாள் பிரபலமாவேன், நீங்களே பாருங்கள்" என்று ரென்னா என்னிடம் அடிக்கடி கூறுவாள்.
- தங்கள் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர கூடாது என்றும் ரென்னாவின் தாய் எச்சரித்தார்.
அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் வைரலான 'டஸ்டிங்' சவாலை முயற்சித்த 19 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் அரிசோனாவைச் சேர்ந்த ரென்னா ஓ'ரூர்க். சமூக ஊடகங்களில் அதிக பார்வையாளர்களைப் பெறுவதற்காக 'டஸ்டிங்' மற்றும் 'குரோமிங்' என்றும் அழைக்கப்படும் இந்த சவாலை ரென்னா முயற்சித்தார்.
டஸ்டிங் என்பது கணினி கீபோர்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரேயை உள்ளிழுத்து சுவாசிக்கும் ஒரு சவாலாகும்.
ரென்னா தனது பெற்றோருக்குத் தெரியாமல் ஆன்லைனில் ஏரோசல் கீபோர்டு கிளீனரை ஆர்டர் செய்து இந்த சவாலை முயற்சித்துள்ளார். ஸ்ப்ரேயை சுவாசித்த ரென்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 1 வாரம் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

"நான் ஒரு நாள் பிரபலமாவேன், நீங்களே பாருங்கள்" என்று ரென்னா தன்னிடம் அடிக்கடி கூறுவாள்,ஆனால் அவள் இப்படித் தனது மரணத்தின் மூலம் பிரபலமாவாள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என ரென்னாவின் தந்தை கண் கலங்கி கூறுகிறார்.
இதுபோன்ற ஸ்ப்ரேக்களை வாங்க எந்த அடையாள அட்டையும் தேவையில்லை என்பதால் குழந்தைகளுக்கு கூட இது எளிதில் கிடைக்கிறது. எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தங்கள் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர கூடாது என்றும் ரென்னாவின் தாய் எச்சரித்தார்.
ரசாயனங்களை உள்ளிழுப்பது தற்காலிகமாக போதையை உணரவைக்கும் அதே வேளையில், அது விரைவாக மரணத்திற்கு வழிவகுக்கும். மரணம் பெரும்பாலும் இதய செயலிழப்பு காரணமாக ஏற்படுகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.






