என் மலர்tooltip icon

    உலகம்

    குடிவரவு சோதனைக்கு எதிராக கலவரம்.. 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு - அதிபர் டிரம்ப் உத்தரவு
    X

    குடிவரவு சோதனைக்கு எதிராக கலவரம்.. 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு - அதிபர் டிரம்ப் உத்தரவு

    • சட்டவிரோத குடிபெயர்த்தோரை கண்டறிய செயல்படும் ஐசிஇ(ICE) நடத்திய குடிவரவு சோதனைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் தெருவில் கூடினர்
    • நாளொன்றுக்கு குறைந்தது 3,000 ICE கைதுகளை இலக்காக நிர்ணயித்த டிரம்ப் தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.

    அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

    இந்நிலையில் அமெரிக்காவில் குடிவரவு சோதனை நடவடிக்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டாவது நாளாகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அங்கு 2,000 ராணுவ வீரர்களைக் குவிக்க டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    சனிக்கிழமையும் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பரமவுண்ட் நகரில் மத்திய படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்தன.

    சட்டவிரோத குடிபெயர்த்தோரை கண்டறிய செயல்படும் ஐசிஇ(ICE) நடத்திய குடிவரவு சோதனைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் தெருவில் கூடினர். கூட்டத்தைக் கலைக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

    வெள்ளிக்கிழமை நடந்த குடிவரவு நடவடிக்கையில் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் குறைந்தது 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து, சுமார் 1,000 போராட்டக்காரர்கள் அரசு கட்டடம் வெளியே கூடி, சொத்துக்களைச் சேதப்படுத்தியதுடன், வாகன டயர்களைக் கிழித்து, அதிகாரிகளைத் தாக்கியதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.

    பதிவில்லாத புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வெளியேற்றுவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியே இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நடவடிக்கை. இதற்கிடையே நாளொன்றுக்கு குறைந்தது 3,000 ICE கைதுகளை இலக்காக நிர்ணயித்த டிரம்ப் தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.

    ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிலளித்த அதிபர் டிரம்ப், "கலிபோர்னியாவின் கவர்னர் கேவின் நியூசமும், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரண் பாஸும் தங்கள் வேலையைச் செய்ய முடியாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு கலவரங்கள் மற்றும் கொள்ளையர்கள் பிரச்சனையைச் சரியான முறையில் தீர்க்கும்!" என்று காட்டமாகப் பதிவிட்டார்.

    நடந்து வரும் போராட்டங்களை "அமெரிக்காவின் சட்டங்கள் மற்றும் இறையாண்மைக்கு எதிரான கிளர்ச்சி" என்று வெள்ளை மாளிகையின் துணைத் தலைமைப் பணியாளர் ஸ்டீபன் மில்லர் கண்டித்தார்.

    Next Story
    ×