என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது.
    • நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    இந்நிலையில், H-1B விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு Green Card வைத்திருக்கும் நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண், தனது போஸ்டில் விசா தொடர்பான மன அழுத்தத்தையும், எதிர்கால அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கேள்வி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    விசா கட்டண உயர்வு போன்ற சமீபத்திய சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவே இது என பலர் கருத்து தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் பலர், விசா மற்றும் கிரீன் கார்டு தொடர்பான பிரச்சனைகளால் பாதிப்பு அடைகிறார்கள் என்பதையும் இப்பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

    • ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து சாதனை.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் 900 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றிருந்தனர்.

    இந்திய டி20 அணியின் அதிரடி வீரராக இளம் வீரர் அபிஷேக் சர்மா திகழ்ந்து வருகிறார். தொடக்க வீரராக விளையாடி வரும் அவர், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து வருகிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். மேலும் தரவரிசைக்கான புள்ளிகளில் 900-த்தை தாண்டியுள்ளார். தற்போது 907 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு 909 மற்றும் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டு 912 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் 900 புள்ளிகளை கடந்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

    • கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
    • விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.

    தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருது பிரிவில் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா அறிக்கை வெளியியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும். என் அன்பும் ஆருயிருமான எ ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!! நன்றி!!! கோடான கோடி நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
    • விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் சாத்தூரில் நேற்று பேசுகிறார், நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்கிறார்? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின். ஊழல், கலக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக, டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடல் திமுக, குடும்ப ஆட்சி வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் திமுக.

    2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். இதுதான் ரோல் மாடல். அதேபோல் போட்டோ ஷூட், ஸ்டிக்கர் ஒட்டித் திறப்பதிலே ரோல் மாடல் திமுக.

    கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒரு கருத்தை சொன்னார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொன்னார், சாற்றைக் குடித்துவிட்டு சக்கையை வழங்குவதாகச் சொன்னார், அதில் ரோல் மாடல் திமுக.

    திமுகவில் தொடர்ந்து நிலையான கூட்டணி இருக்கிறது, அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாகச் சொல்கிறார்கள். அதிமுக-வைப் பொறுத்தவை கூட்டணியை நம்பியில்லை மக்களை நம்பியிருக்கிறது. திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது.

    மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறது என்று உதயநிதி சொல்கிறார். ஆக கூட்டணியைத்தான் நம்புகிறார். அதிமுக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும், அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக அலுவலகம் அமித் ஷாவிடம் உள்ளதாம். அப்படியா இருக்குது? முன்பு திமுகவு-க்குள் குழப்பம் ஏற்பட்டது, இரண்டாகப் பிரிந்தது, உடைந்தது, அம்மா இருக்கும்போது வைகோ வெளியில் போனார், அப்போது வைகோ அறிவாலயத்தை கைப்பற்றும் நிலை உருவானபோது, அதை காப்பாற்றிக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசு.

    அதிமுக பாஜகவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக பாஜக-வோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா..? இது எந்த விதத்தில் நியாயம்?

    அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. எதிர்த்து நிற்க தெம்பு, திராணி இல்லாமல் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சியில் குற்றம் கண்டுபிடித்து சொல்லுங்கள், பதில் சொல்லத்தயார். எங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி. திட்டமிட்டு கூட்டணி அமைத்தபிறகு விமர்சித்தால் தோல்விதான் உங்களுக்குப் பரிசாக கிடைக்கும்.

    கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.

    இன்று 158-வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 158 தொகுதியிலும் மக்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன், எழுச்சி உரையாற்றினேன், உணர்வுகளைப் பார்த்தேன், அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • அக்டோபர் 2-ம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2-ம் தேதி தசராவும், அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போனஸ் தொகையானது, ரெயில்வே ஊழியர்களில் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரெயில்வே கார்டுகள், ரெயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.

    ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    • 'டேஸ்ட் அட்லஸ்' என்பது உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் ஆகும்.
    • உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டது.

    'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.

    இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெத்திலி 65 உணவு 81வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளன.

    மேலும், கேரளாவின் கறிமீன் பொளிச்சது 11வது இடத்தையும், மேற்கு வங்கத்தின் சிங்கிரி மலாய் கறி 30வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.

    • லடாக்கில் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
    • போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    லடாக்:

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது.

    இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.

    கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என ஜாய் கிரிசில்டா புகார்
    • சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.

    மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.

    காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. துணை ஆணையர் வனிதா ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

    இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    • விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும்.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், சீமான் மன்னிப்பு கூறி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த மன்னிப்பு தோரணை சரியானதாக இல்லை" என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து இருதரப்பும் மன்னிப்பு கோரி பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இருதரப்பும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக்கூடாது, குறிப்பாக இந்த வழக்கு குறித்து இருவரும் எந்த ஊடகங்களில் பேச கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

    • போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.
    • கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

    ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்திற்கு பிறகு, ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன், ஆஃப்லைன் வர்த்தக தளங்களில் சலுகை விலையுடன் விற்பனையாகும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

    ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் ஸ்மார்ட்போன், பானாசோனிக் பி110 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ரூ.4,999 முதல் விற்பனைக்கு கிடைக்கின்றன. குறைந்தபட்ச பயன்பாடு கொண்டவர்கள், தொலைபேசி அழைப்பிற்கு மட்டும் பயன்படுத்துபவர்கள், இந்த டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

    சோலோ 1எக்ஸ், லாவா இசட் 1எஸ், ரெட்மி 5ஏ போன்ற மாடல்கள் ரூ.5,299 விலையிலும், போகோ சி71 ரூ.5,599 விலையிலும், ரெட்மி ஏ2 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஆகியவை ரூ.5,900 விலையிலும் விற்பனையாகின்றன. இவையனைத்தும் 1 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.

    ரெட்மி ஏ3எக்ஸ், ரெட்மி ஏ5, ரெட்மி 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியுடன் ரூ.5,999 விலையில் கிடைக்கின்றன. போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.

    ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் மாடலின் 6 ஜிபி ரேம் மாடல் 128 ஜிபி மெமரியுடன், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் ரூ.6,499 விலையிலேயே கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போனிற்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேலாக சலுகை வழங்கி அதன் விலையை ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாக குறைத்திருக்கிறார்கள். அதேபோல கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது. அதுவும், ரூ.1.10 லட்சத்தில் விற்பனையாகிறது.

    • 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    • இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வருகிற நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்டேவியா சீரிசில் இது 4ஆம் தலைமுறை கார் மாடல் ஆகும். இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கும். இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 265 எச்.பி. பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும், இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொறுத்தவரை, கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெறும்.

    காரின் உள்புறத்தில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம்பெறும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    ×