என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
- இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து, வங்கதேசம் அணி பந்து வீச, இந்திய அணி பேட் செய்ய களமிறங்குகிறது.
- திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும்.
- கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் விஜய் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு "76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்துவிட்டோம். விஜய் பற்றி எதுவும் கேட்காதீர்கள். இதை வெளிப்படையாக சொல்கிறேன்" என்றார்.
அவருக்கு கூட்டம் அதிக அளவில் கூடுகிறதே? எனக் கேள்வி எழுப்ப, "நாராயணசாமி நாயுடு என்பவர் 1980களில் இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா?. தெரியுமா?. தெரியாதா.., அவர் விவசாய கட்சியை நடத்தினர். அவருக்கு மக்கள் அதிக அளவில் கூடினர். 1980 தேர்தலுக்கு முன்னாடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். இந்திரா காந்தி சென்று பார்த்தார். கலைஞரும் சென்று பார்த்தார். மூன்று பேரும் ஆதரவு கேட்பதற்கான போனார்கள். அந்த கட்சி இப்போது இருக்கா? இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எட போட முடியாது.
40 வருடத்திற்கு முன்னதாக, எம்.ஜி.ஆர்.ஐ எதிர்த்து பழனிபாபா பேசி வந்தார். நான், பேராசிரியர் வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினோம். அதன் அருகில் பழனிபாபா பேசினார். எங்கள் கூட்டத்திற்கு 100 பேர்தான் வந்திருந்தனர். அவரது கூட்டத்திற்கு 50 ஆயிரம் பேர் வந்தனர். அப்போது பேராசிரியர், இது கொள்கை கூட்டம். இது மாயை கூட்டம் என்றார். அந்த கூட்டம் என்னாச்சு?
திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும். கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.
விஜய்க்கு கூடும் கூட்டம் மாயை கூட்டம் என எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, அதை நீங்கள்தான் முடிவு செய்யனும் என பதில் அளித்தார்.
- லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.
- போராட்டத்தைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
லடாக்:
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- அமெரிக்க சட்டங்களை தவறாமல் பின்பற்றும் எக்ஸ் நிறுவனம், இந்தியச் சட்டங்களை பின்பற்ற மறுக்கிறது.
- சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது காலத்தின் கட்டாயம்- கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து.
எக்ஸ் பக்கத்தில் உள்ள பல கணக்குகளை முடக்கவும், பதிவுகளை நீக்கவும் மத்திய அரசு, எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் எக்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அமெரிக்க சட்டங்களை தவறாமல் பின்பற்றும் எக்ஸ் நிறுவனம், இந்தியச் சட்டங்களை பின்பற்ற மறுப்பதாகவும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்றும் கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், எக்ஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
- பாலாவை பற்றிப் பேசினால்தான் உங்களுக்கு வருமானம் வரும்.
- நீங்கள்தான் பாலாவை பற்றிப் பேசி பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ வழி ஏற்படுத்தித் தரும் தம்பி பாலாவின் உயர்ந்த உள்ளமும், உதவுகின்ற செயல்களும் மிகுந்த பாராட்டுக்குரியது.
வறுமையில் வாடும் மக்களுக்கு தம்பி பாலா தம்மால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகின்றார். நாம் அதனை வாழ்த்தி, வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். முடிந்தால் அவரைப்போல தாமும் உதவிகள் செய்ய வேண்டும். மாறாக உதவி செய்பவர்கள் புகழ் பெறுகிறாரே என்று பொறாமை கொள்வதும், அவருக்கு கிடைக்கும் நற்பெயரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகளை அள்ளித்தெளிப்பதும் தரம் தாழ்ந்த இழிச்செயலாகும்.
தம்பி பாலா மீது சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த 10 நாட்களாக சிலர் செய்யும் எதிர்மறையான அவதூறு தாக்குதல் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவர் தன்னலமற்று தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் எத்தனை எத்தனை கேள்விகள்? உதவி செய்கின்றவருக்கு எங்கிருந்தோ பணம் வருகின்றது. அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர். சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி.
எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்? உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது? இந்த நாட்டில் உளவுத்துறை உள்ளது. பாதுகாப்பு முகமை உள்ளது. வருமானவரித்துறை உள்ளது. சிறப்புப் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை உள்ளது. அது அவர்களுடைய வேலை, அவர்களுடைய கவலை. உங்களுக்கு என்ன கவலை? எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, அவருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது? அவர் எப்படி மருத்துவமனை கட்டுகிறார்? என்றெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி செய்வது ஏன்?
இதையெல்லாம் கேட்பவர்கள் எப்படி இவ்வளவு கோடிக்கு சமாதி கட்டுனீங்க? எப்படி இவ்வளவு கோடி போட்டு திரைப்படம் எடுக்குறீங்க? அப்படியென்று யாரையும் கேட்பது இல்லையே ஏன்? தம்பி பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன? அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அரசும், அது சார்ந்த நிர்வாக அமைப்புகளும்தான். உங்களுக்கு என்ன வேலை அதில்? ஏனென்றால், இப்போது தம்பி பாலாவை பற்றிப் பேசினால்தான் உங்களுக்கு வருமானம் வரும்? நீங்கள்தான் தம்பி பாலாவை பற்றிப் பேசி பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.
மற்றவர் கண்ணீரைத் துடைத்து உதவ வரும் இளம்பிள்ளைகளை வருமுன்னே இப்படி கசக்கித் தூரப்போட்டீர்கள் என்றால், இனி வருங்காலத்தில் இதுபோல யார் உதவ முன்வருவார்கள்? பாலா போன்ற உதவும் உள்ளங்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை; துண்டாடாமல் இருங்கள். போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள். இப்பொழுது தம்பி பாலாவை பற்றி அவதூறு பேசி, நீங்கள் சாதித்தது என்ன? பிறர் துயர் துடைக்கும் தம்பி பாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தவிர இதனால் நிகழ்ந்த நன்மை என்ன? இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு அருவருப்பான சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா? என்ற நடுக்கம் வருகின்றது. யாருக்கு என்ன உதவி செய்தாலும் அதில் குறை சொல்பவர்கள், அவர்கள் இதுவரை மற்றவர்களுக்குச் செய்த உதவிகள் என்ன? என்ற கேள்விக்கு பதில் தருவார்களா?
அன்புத்தம்பி பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினை தொடர்ந்து செய்துகொண்டே இரு. தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணை நிற்கின்றோம். எத்தனையோ தாய்மார்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அன்று உன்னிடம் சொன்னதையே மீண்டும் உனக்குச் சொல்கிறேன். 'அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்!' என்ற நம் அறிவு மூதாட்டி ஔவையின் வார்த்தையை உச்சரித்துக்கொண்டே முன்னேறிச் சென்றுகொண்டே இரு!
மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள்! அதனால்தான் உன்னை விரும்புகிறார்கள்.
அன்புத்தம்பி பாலாவுக்கு
அன்பும், வாழ்த்துகளும்!
என சீமான் கூறினார்.
- நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசிய கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம்.
- எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இந்தியா இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டியுள்ளது. இரண்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைவோம் என்ற நம்பிக்கை பாகிஸ்தானுக்கு உள்ளது.
இந்த நிலையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அவர்களை வீழ்த்துவோம் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாஹீன் அப்ரிடி கூறியதாவது:-
இந்தியா இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்போது பாரப்போம். நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசிய கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம். எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயார். அவர்களை நாங்கள் வீழ்த்துவோம்.
இவ்வாறு ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
- சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர்.
- பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பூஜா கண்ணன் பகிர்ந்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இதையடுத்து தெலுங்கில் நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' படத்தில் நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள ராமாயனா படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தில் சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.
இந்நிலையில், சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது கடற்கரையில் இருவரும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவின. ராமாயண படத்தில் சீதாவாக நடிக்கும் சாய் பல்லவி பிகினி உடையில் புகைப்படங்கள் வெளியிடலாமா? என்று வட இந்தியாவில் சிலர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்று சாய் பல்லவிக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு நடிகை வேதிகா வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது சாய் பல்லவியின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா "ஏ"- ஆஸ்திரேலியா "ஏ" அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 420 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
அந்த அணியைச் சார்ந்த யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்களும், சாம் கோன்டாஸ் 49 ரன்களும் அடித்தனர். இந்தியா "ஏ" தரப்பில் மனவ் சுதர் 5 விக்கெட் சாய்த்தார்.
பின்னர் இந்தியா "ஏ" முதல் இன்னி்ங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா "ஏ"வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது.
கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும், ஆயுஷ் படோனி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொதப்ப, சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் 75 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா ஏ 194 ரன்னில் சுருண்டது.
பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ 16 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
- அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது.
- நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில், H-1B விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு Green Card வைத்திருக்கும் நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண், தனது போஸ்டில் விசா தொடர்பான மன அழுத்தத்தையும், எதிர்கால அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கேள்வி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது பொது விவாதமாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விசா கட்டண உயர்வு போன்ற சமீபத்திய சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவே இது என பலர் கருத்து தெரிவித்தனர்.
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் பலர், விசா மற்றும் கிரீன் கார்டு தொடர்பான பிரச்சனைகளால் பாதிப்பு அடைகிறார்கள் என்பதையும் இப்பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
- ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து சாதனை.
- இதற்கு முன்னதாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் 900 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றிருந்தனர்.
இந்திய டி20 அணியின் அதிரடி வீரராக இளம் வீரர் அபிஷேக் சர்மா திகழ்ந்து வருகிறார். தொடக்க வீரராக விளையாடி வரும் அவர், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து வருகிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். மேலும் தரவரிசைக்கான புள்ளிகளில் 900-த்தை தாண்டியுள்ளார். தற்போது 907 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு 909 மற்றும் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டு 912 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் 900 புள்ளிகளை கடந்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
- கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
- விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருது பிரிவில் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா அறிக்கை வெளியியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும். என் அன்பும் ஆருயிருமான எ ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!! நன்றி!!! கோடான கோடி நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
- கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
- விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் சாத்தூரில் நேற்று பேசுகிறார், நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்கிறார்? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின். ஊழல், கலக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக, டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடல் திமுக, குடும்ப ஆட்சி வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் திமுக.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். இதுதான் ரோல் மாடல். அதேபோல் போட்டோ ஷூட், ஸ்டிக்கர் ஒட்டித் திறப்பதிலே ரோல் மாடல் திமுக.
கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒரு கருத்தை சொன்னார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொன்னார், சாற்றைக் குடித்துவிட்டு சக்கையை வழங்குவதாகச் சொன்னார், அதில் ரோல் மாடல் திமுக.
திமுகவில் தொடர்ந்து நிலையான கூட்டணி இருக்கிறது, அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாகச் சொல்கிறார்கள். அதிமுக-வைப் பொறுத்தவை கூட்டணியை நம்பியில்லை மக்களை நம்பியிருக்கிறது. திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது.
மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறது என்று உதயநிதி சொல்கிறார். ஆக கூட்டணியைத்தான் நம்புகிறார். அதிமுக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும், அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக அலுவலகம் அமித் ஷாவிடம் உள்ளதாம். அப்படியா இருக்குது? முன்பு திமுகவு-க்குள் குழப்பம் ஏற்பட்டது, இரண்டாகப் பிரிந்தது, உடைந்தது, அம்மா இருக்கும்போது வைகோ வெளியில் போனார், அப்போது வைகோ அறிவாலயத்தை கைப்பற்றும் நிலை உருவானபோது, அதை காப்பாற்றிக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசு.
அதிமுக பாஜகவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக பாஜக-வோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா..? இது எந்த விதத்தில் நியாயம்?
அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. எதிர்த்து நிற்க தெம்பு, திராணி இல்லாமல் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சியில் குற்றம் கண்டுபிடித்து சொல்லுங்கள், பதில் சொல்லத்தயார். எங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி. திட்டமிட்டு கூட்டணி அமைத்தபிறகு விமர்சித்தால் தோல்விதான் உங்களுக்குப் பரிசாக கிடைக்கும்.
கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.
இன்று 158-வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 158 தொகுதியிலும் மக்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன், எழுச்சி உரையாற்றினேன், உணர்வுகளைப் பார்த்தேன், அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.






