என் மலர்
தலைப்புச்செய்திகள்
சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 39 வயதான இவர் தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் தொடர் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் திருமணமாகி முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார்.
ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிவி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களிடமும், மற்ற தொலைக்காட்சி நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த விசாரணை முடிவில்தான் நடிகை ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
- 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.
சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.
அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
- முப்பெரும் விழா கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்
- சிறப்பு பாடல் வீடியோ வெளியீடு
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் பிறந்தநாள், சினிமாவில் 50வது ஆண்டு, 25 ஆண்டுகளுக்கு பின்னர் படையப்பா ரீரிலீஸ் என முப்பெரும் விழாவாக, மகிழ்ச்சியாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர், சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரஜினியின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
"உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. நண்பனே... நண்பனே... ஊர் போற்றும் இன்பனே... இன்பனே... இன்பனே... நீ தனி நான் தனி என்றில்லை... என்றுமே நாம் அது நிரந்தரமே.. நாம் அது நிரந்தரமே" எனும் வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
- எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
- உக்ரைனின் துறைமுகங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தெற்கு உக்ரைனில் ஓடேசா பகுதியில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் துறைமுகங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் 90,000 பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
- இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார்.
- விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் படம் 'மெஜந்தா'. பரத் மோகன் இயக்கும் இப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரித்து வழங்குகின்றனர்.
'மெஜந்தா' படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்லு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும், கோத்தகிரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'மெஜந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சாந்தனு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எங்கள் அடுத்த படமான "மெஜந்தா"வின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்த நிறத்திற்குப் பின்னால் அவள் ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத ஒரு உண்மை இருக்கிறது. விரைவில் டீசர் வெளியாகும் என கூறியுள்ளார்.
- ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர்' இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' புகழ் ஆதித்ய தார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தக் கதை பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இந்தப் படம் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியது. வளைகுடா நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 44.5 கோடியை வசூலித்தது.
இந்த படம் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியைக் கொண்டிருப்பதாகக் கூறி ஆறு வளைகுடா நாடுகள் படத்தைத் தடை செய்துள்ளன.
பாலிவுட் படங்களுக்கு வளைகுடா பகுதி ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த சூழலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் படத்தின் கருப்பொருளை எதிர்த்து அதன் வெளியீட்டிற்கு அனுமதி மறுத்தனர்.
முன்னதாக 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'ஆர்டிகிள் 370' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தடைகளைச் சந்தித்துள்ளன.
- தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது.
- மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை.
தூத்துக்குடி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குளிர்கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்திருக்கிறோம். வாக்கு திருட்டு பீகாரிலேயே பா.ஜ.க. அணியினருக்கு வெற்றி வாகையை தந்திருக்கிறது. 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 47 லட்சம் பேரும் அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவியவர்களா என்றால் இல்லை. ஒருவர் கூட அப்படி இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.
இந்த நாட்டின் மக்களின் வாக்குரிமை பறிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை அமைந்துள்ளது. அவர்களுடைய நோக்கம் என்னவென்று விளங்கவில்லை. எஸ்.ஐ.ஆர். திருத்தத்தை பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. அந்த 1 கோடி பேர் வாக்குரிமையை பறி கொடுப்பதோடு குடியுரிமையையும் பறிகொடுக்கக் கூடிய அச்சம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது. சுதந்திரமாக இயங்க முடியாத நிலை இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட மக்களவையில் பதிவு செய்திருக்கிறோம்.
ஆனால் ஆளுங்கட்சி அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலை அளிக்கிறது. குடிமக்களின் வாக்குரிமை மட்டுமின்றி குடியுரிமையும் பறிக்கக்கூடிய ஆபத்தான அரசியல் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. நாடு எந்த திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று கவலை மேலோங்கி உள்ளது.
பீகாரில் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றது போல் தமிழகத்திலும் வெற்றி பெறுவதற்கு சதி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அமித்ஷா மக்களவையிலேயே உரத்து பேசுகிறார். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்பது விதைக்காமல் அறுவடை செய்கிற ஒரு முயற்சி அது.
மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை. எனவே வாக்கு திருட்டு என்பதை மட்டுமே மூலதனமாக வைத்து எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். குடிமக்களின் கடமையாகும் என்றார்.
- இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10:30 மணி அளவில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த கோர்ட்டு வழங்கிய அவகாசம் நிறைவடைந்து விட்டது என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரையில் அனைவரும் அமைதியை காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பழமையானது பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டு வரும் இடத்தில் தான் இந்த ஆண்டும் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதே பகுதியில் மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனிநபர் விடுத்த கோரிக்கையை ஏற்புடையதல்ல என்பதால் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த வழக்கு பொதுநல மனுவை போல விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராம ரவிக்குமார் மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருந்தார். சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல. இதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்து வருகிறது.
- திரை பிரபலங்களின் விவாகரத்து இந்தாண்டு இணையத்தில் பேசுபொருளனது
- ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்தனர்.
இந்த 2025 ஆம் ஆண்டில் திரையுலக பிரபலங்களின் திருமணங்கள் மட்டுமல்ல, சில ஜோடிகள் தங்கள் வாழ்க்கைத் துணையை பிரிந்து சென்றதும் சமூக ஊடகங்களில் மற்றும் செய்தித்தாள்களில் கவனம் பெற்றது. இவைகள் ரசிகர்களிடம் பேசுபொருளாகின.
அவ்வகையில் இந்தாண்டு விவாகரத்து பெற்ற திரை பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்

1. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

2. மீரா வாசுதேவன்
பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுது.
மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார். தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார்.
தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார். ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்தாண்டு தனது மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்தார் .

3. ஜெசிகா ஆல்பா
பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெசிகா ஆல்பா இந்தாண்டு தனது கணவர் கேஷ் வாரனை விவாகரத்து செய்தார். 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியின் விவாகரத்து பெரும் பேசுபொருளானது.

4. ஜெனிபர் லோபஸ் - பென் அப்லெக்
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்
ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை மணந்திருந்தார்.
- உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
14-ந்தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
- ‘சிறை’ திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
டிரெய்லரின் படி காவல் அதிகாரியான விக்ரம் பிரபு சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றவாளியை அழைத்து செல்கிறார். அப்போது அந்த குற்றவாளி துப்பாக்கியுடன் தப்பிச்செல்கிறார். இதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.
நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள 'சிறை' படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.
- பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு கொண்டு செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தை பிறப்பு சதவீதம் வீழ்ச்சி சீனாவில் 'ஆணுறைக்கு வரி' கருத்தடை மருந்துகளுக்கு வரி விலக்கு ரத்தாகிறது
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றி ருந்தால் சலுகைகள் மறுக் கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது.
இதற்கிடையே சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.
இதற்காக பல்வேறு சலுகைகள், உதவித் தொகை உள்ளிட்டவற்றை அரசு அறிவித்தது. ஆனாலும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆண்டு தோறும் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு அதிகரித்தது. இதனால் சீனாவில் முதிய வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் புதிய ஆணுறை வரி திட்டம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின்படி, ஜனவரி 1-ந்தேதி முதல் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதன தயாரிப்பு களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் 13 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும்.
இதற்கிடையே கருத்தடைச் சாதனங்களின் விலை உயர்வது என்பது மக்களை திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு கொண்டு செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வரி விதிப்பு குறித்து சீன சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. விலை உயர்த்தப்பட்டாலும் ஆணுறை வாங்குவதை விடக் குழந்தை களை வளர்ப்பதற்கான செலவு அதிகமாகவே இருக் கும் என்று பலர் கிண்டல் செய்துள்ளனர்.
சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமானதால் 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.






