என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள்
    • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.

    இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் போர்நிறுத்ததை உறுதிப்படுத்துதல், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    காசா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் கத்தார் மிக முக்கியமான மத்தியஸ்தர்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று, எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்

    காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்கேற்க இந்தத் தூதர்கள் சர்ம் எல்-ஷேக்கிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர்.

    அவர்கள் பயணித்த வாகனம், நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கூர்மையான வளைவில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக நடவடிக்கை.
    • சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்உஎம்.நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டுள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து புரட்டியெடுத்தது.

    முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 252 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்காவை 81 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி (19.4 ஓவர்) நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு தனது பிடியை நழுவவிட்டது.

    இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.

    இன்று மதியம் இன்றைய ஆட்டம் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்க உள்ளது.    

    • அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல.
    • ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன.

    ஒப்போ நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி சீன சந்தையில் தனது ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிவிக்க இருக்கிறது. புதிய ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ தவிர, ஒப்போ பேட் 5 டேப்லெட் மற்றும் ஒப்போ வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களையும் ஒப்போ நிறுவனம் இதே நிகழ்வில் வெளியிட உள்ளது.

    இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனி வெளியீட்டு நிகழ்வை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், இந்தியாவில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸில் இந்தியா வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

    ஒப்போ ஃபைண்ட் X9 வெளியீடு

    இந்திய சந்தையில் டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த மாடல்கள் நவம்பரில் நடைபெறும்.

    அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல. சமீபத்திய தகவல்களில் ரியல்மி நிறுவனம் தனது GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடலாம் என்றும், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இரு மாடல்களும் அசத்தலான புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • ஹீரோ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ரோட்ஸ்டர் மாடல் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட உள்ளது.
    • இந்த பண்டிகை காலத்தில் ஹீரோவின் பிரபலமான எக்ஸ்ட்ரீம் சீரிஸ் அப்டேட் செய்யப்பட உள்ளது.

    இந்திய சந்தையில் இரு சக்கர வாகன ஆர்வலர்களுக்கு அக்டோபர் மாதம் ஒரு விருப்பமான மாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல இந்திய பைக்குகளின் ஸ்போர்ட் அப்டேட்கள் முதல் புத்தம் புதிய அட்வென்ச்சர் மாடல்கள் என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க நிறைய மாடல்கள் வரிசையில் உள்ளன. அந்த வகையில் இந்த மாதம் என்னென்ன மாமடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பதைப் பார்ப்போம்...

    டிவிஎஸ் அப்பாச்சி RTX300

    அப்பாச்சி RTX300 உடன் டிவிஎஸ் நிறுவனம் அட்வென்ச்சர் பிரிவில் பெரிய அளவில் நுழைய தயாராகி வருகிறது . கடந்த ஆண்டு மோட்டோ சோலில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட 300 சிசி என்ஜினை அடிப்படையாகக் கொண்ட இந்த பைக், ஏராளமான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் இந்திய சாலைகளுக்குத் தயாராக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இது பல முறை சோதனை செய்யப்பட்டுள்ளது, மேலும் பண்டிகைக் காலத்திற்கு முன்பே அக்டோபர் 15, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சரியான விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதன் விலை சுமார் ரூ.2.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹஸ்க்வர்னா விட்பிலன் 250

    ஹஸ்க்வர்னாவின் விட்பிலன் 250, பழைய எல்சிடி கன்சோலுக்குப் பதிலாக செவ்வக வடிவ TFT கன்சோலுடன் அப்டேட் செய்யப்படுகிறது. புதிய மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட சுமார் ரூ.12,000 வரை அதிகரிக்கலாம். இதன் மூலம் சுமார் ரூ.2.25 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) இருக்கும். புதுப்பிக்கப்பட்ட பைக் இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    சுசுகி இ-அக்சஸ்

    2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட சுசுகி இ-அக்சஸின் வெளியீடு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது. மே மாதத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டாலும், இந்த மாதம் இது அறிமுகப்படுத்தப்படலாம். இதன் விலை சுமார் ரூ.1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். இ-ஆக்சஸ் கூர்மையான வடிவமைப்பு, 4.1kW மோட்டார் மற்றும் 3.07kWh பேட்டரி பேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது மணிக்கு 71 கிமீ வேகத்தையும் 95 கிமீ தூரத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.

    புதுப்பிக்கப்பட்ட ஹீரோ மேவரிக் 440

    ஹீரோ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ரோட்ஸ்டர் மாடல் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட உள்ளது. புதுப்பிக்கப்பட்ட மேவ்ரிக் 440, மேட் கிரே நிறம், கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பிரான்ஸ் நிற என்ஜின் கவர் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.



    புதுப்பிக்கப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R & 160R 4V

    இந்த பண்டிகை காலத்தில் ஹீரோவின் பிரபலமான எக்ஸ்ட்ரீம் சீரிஸ் அப்டேட் செய்யப்பட உள்ளது. இரண்டு எக்ஸ்ட்ரீம் மாடல்களும் டீலர் சந்திப்பில் ஏராளமான அப்டேட்களுடன் காணப்பட்டன. எக்ஸ்ட்ரீம் 125R ஒரு பிரைட் ரெட் மற்றும் பிளாக் என டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் பார்-எண்ட் மிரர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் திராட்டில், பல ரைடு மோட்கள், க்ரூயிஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளை பெறுகிறது.

    புதிய எக்ஸ்ட்ரீம் 160R 4V க்ரூயிஸ் கண்ட்ரோல், புளூடூத் உடன் கூடிய கலர்-எல்சிடி கிளஸ்டர், புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், கூர்மையான கிராபிக்ஸ் மற்றும் ஒற்றை இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது. இருப்பினும், இரண்டு பைக்குகளும் அவற்றின் தற்போதைய இயந்திரங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன மற்றும் இயந்திர ரீதியாக மாறாமல் உள்ளன.

    • 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
    • குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம்சாட்டிய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.

    நேற்று இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த தாக்குதலின்போது இரு தரப்புப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்தது.

    இந்த தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இன்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்தச் சண்டையின்போது கூடுதலாக 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர் எதிர்த்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறினால் வலுவான பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானை எச்சரித்தார். 

    குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், தலிபான் தங்கள் முகாம்களை கைப்பற்றியதாகக் கூறும் கூற்றுக்களை அவர்கள் நிராகரித்தனர்.

    இந்த தாக்குதலில் பீரங்கிகள் மற்றும் வான்வழி ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். தாலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியா வருகை தந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    13-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    14-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமமைபெய்யவாய்ப்புள்ளது

    17-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனிடையே இன்று முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் படிப்படியாக குறையக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • இது ஏழு பேர் அமரக்கூடிய நிலையான இருக்கைகளுடன் வருகிறது.
    • இந்த மோட்டாருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் புதுப்பிக்கப்பட்ட பொலிரோ மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இந்த புதுப்பிப்பு மாடலில் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

    2025 பொலேரோ மாடல் 1.5 லிட்டர் mHawk75 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 75bhp பவர் மற்றும் 210Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டாருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும், இது ஏழு பேர் அமரக்கூடிய நிலையான இருக்கைகளுடன் வருகிறது.

    வண்ணங்களைப் பொறுத்தவரை, புதிய பொலிரோ- டயமண்ட் ஒயிட், டிசாட் சில்வர், ராக்கி பெய்க் மற்றும் ஸ்டெல்த் பிளாக் என நான்கு விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த கார் B4, B6, B6(O) மற்றும் B8 ஆகிய நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

    மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    ஏப்ரல் 18, 2024 அன்று கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் மாதத்தில் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

    சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட பில்லாலா நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைந்து, சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

    இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

    இந்நிலையில் மருத்துவ அதிகாரி டாக்டர் ஆதியா தாவர் என்பவர் October 7, 2025,கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவை கைது செய்து செய்தனர்.

    அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

    • பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன

    காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 28 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ. 12 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ரூ. 16 கோடி உபயதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

    திருப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஆன்மீகவாதிகளில் பொற்காலம் எனப் போற்றுகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோயில்களைக் கணக்கெடுத்து, இதுவரை 3707 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மன்னர்கள் விட்டுச் சென்ற திருக்கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன.

    ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் 844 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் சேர்த்து 65% நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் முக்கிய திட்டமான தங்க முதலீடு திட்டத்தின் மூலம், இறைவனுக்குத் தேவைப்படாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலுக்கு அனுப்பி வைத்து, இதுவரை 1074 கிலோ தங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 17 கோடி வைப்பு நிதி வருவாயாகப் பெறப்படுகிறது. தற்போது நான்கு திருக்கோவில்களில் இருந்து 53 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 18 கோயில்களில் இருந்து 308 கிலோ தங்கம் இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17 கோடி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. உபயதாரர்களிடமிருந்து இந்த ஆட்சியில் சுமார் ரூ. 1512 கோடி நிதி வந்துள்ளது என்றும், இது வேறு எந்த ஆட்சியிலும் வரவில்லை.

    காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களுக்கான மதிப்பை அவர்களே குறைத்துக் கொள்வதாகவும், இது இந்து அறநிலையத் துறைக்கு இழுக்கான சூழலை ஏற்படுத்தவில்லை, அவர்களுக்குத் தான் இழுக்கான நிலை ஏற்படுகிறது.

    எனவே, பிரச்சனை செய்யாமல் இரு பிரிவினரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

    சமயபுரம் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியவர் நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    • அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
    • இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது.

    1984 இல் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையிலான பிரிவினைவாதிகள் பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக்கோரி அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்தபடி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர்.

    இந்த பிரிவினைவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவதற்காக இந்திரா காந்தி அரசு ஜூன் 1 முதல் ஜூன் 6, 1984 வரை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் பெயர் தான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.

    இந்த நடவடிக்கையில் பொற்கோவிலுக்குள் புகுந்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பொற்கோவிலிலும் சேதங்கள் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் சீக்கியர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்திய நிலையில் இதற்கு பழிவாங்கும் விதமாக, அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான நடவடிக்கை என்றும் அந்த தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    நேற்று, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் நடந்த பஞ்சாப் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இலக்கிய விழாவில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பவேஜா எழுதிய இந்திரா காந்தி படுகொலை பற்றிய புத்தகம் குறித்த விவாதத்தில் சிதம்பரம் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், "எந்த ராணுவ அதிகாரியையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை, ஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடத்தப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.

    ப்ளூ ஸ்டார் ஒரு தவறான அணுகுமுறை, மேலும் அந்த தவறுக்கு இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்பது இராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிவில் அமைப்பிகளின் கூட்டு முடிவு. இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது" என்று கூறினார்.

    மேலும் கலந்துரையாடலின் போது, பஞ்சாபில் காலிஸ்தான் மற்றும் பிரிவினைவாதம் பற்றிய அரசியல் முழக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அங்கு தற்போது உள்ள உண்மையான பிரச்சனை பொருளாதார நிலைமை என்றும் பஞ்சாப் சென்றபோது தான் இதை உணர்ந்ததாகவும் சிதம்பரம் கூறினார்.  

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது.
    • ஜெய்ஸ்வால் 175 குவித்து அவுட்டானார்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.

    இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிகே அத்னாஸ் 41 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாலோ ஆன் ஆனதால் 2 ஆவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் பேட்டிங் செய்யவுள்ளது.

    ×