என் மலர்
இந்தியா

இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறானது - ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
- அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
- இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது.
1984 இல் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையிலான பிரிவினைவாதிகள் பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக்கோரி அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்தபடி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர்.
இந்த பிரிவினைவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவதற்காக இந்திரா காந்தி அரசு ஜூன் 1 முதல் ஜூன் 6, 1984 வரை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் பெயர் தான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.
இந்த நடவடிக்கையில் பொற்கோவிலுக்குள் புகுந்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பொற்கோவிலிலும் சேதங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் சீக்கியர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்திய நிலையில் இதற்கு பழிவாங்கும் விதமாக, அதே ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான நடவடிக்கை என்றும் அந்த தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் நடந்த பஞ்சாப் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இலக்கிய விழாவில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பவேஜா எழுதிய இந்திரா காந்தி படுகொலை பற்றிய புத்தகம் குறித்த விவாதத்தில் சிதம்பரம் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "எந்த ராணுவ அதிகாரியையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை, ஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடத்தப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.
ப்ளூ ஸ்டார் ஒரு தவறான அணுகுமுறை, மேலும் அந்த தவறுக்கு இந்திரா காந்தி தனது உயிரை விலையாக கொடுத்தார் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்பது இராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிவில் அமைப்பிகளின் கூட்டு முடிவு. இதற்கு இந்திரா காந்தியைக் குறை கூற முடியாது" என்று கூறினார்.
மேலும் கலந்துரையாடலின் போது, பஞ்சாபில் காலிஸ்தான் மற்றும் பிரிவினைவாதம் பற்றிய அரசியல் முழக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அங்கு தற்போது உள்ள உண்மையான பிரச்சனை பொருளாதார நிலைமை என்றும் பஞ்சாப் சென்றபோது தான் இதை உணர்ந்ததாகவும் சிதம்பரம் கூறினார்.






