என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
- 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.
இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் போர்நிறுத்ததை உறுதிப்படுத்துதல், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியை அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.
இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் சார்பாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னில் சுருண்டது.
- 270 ரன் பின்தங்கியதால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில் சதம் அடிக்க இந்தியா 518 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் 248 ரன்களில் ஆல்அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 270 ரன்கள் பின்தங்கி, வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர் டி.சந்தர்பால் (10), அடுத்து வந்த அலிக் அதானேஸ் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3ஆவது விக்கெட்டுக்கு ஜான் கேம்பல் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இருவரும் அரைசதம் விளாசினர். அத்துடன் இன்றைய 3ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது நாள் ஆட்ட முடிவில 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. கேம்பல் 87 ரன்களுடனும், ஷாய் ஹோப் 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 97 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
நாளை காலை உணவு இடைவேளை வரை இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினால், இந்திய அணிக்கு நெருக்கடி உண்டாகும்.
- தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
- தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
தொகுதி பங்கீட்டில் நிதீஷ், சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கறார் காட்டுவதால் சிக்கீல் நீடித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.
இதனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து அமித்ஷா தலைமையில் பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
- 58 ரன்கள் எடுத்தபோது, 5 ஆயிரம் ரன்களை கடந்தார்.
மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்துள்ளது.
ஸ்மிரிதி மந்தனா 58 ரன்களை கடக்கும்போது, ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை தொட்ட வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடத்தில் மட்டும் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
112 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
- சந்தையில் அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
- போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வணிகக் கட்டிடங்கள் சேதமடைந்தன
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தன.
நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
- நெல்லைக்கான கட்டணம் ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நாளைக்குள் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை.
பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்திவிட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.
சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு வழக்கமாக இருந்த கட்டணமான ரூ.1,800 தற்போது ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கும் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி கேட்டப்பட்டது. அப்போது "500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதில் சுமார் 10 நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அவர்கள் நாளைக்குள் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லை என்றால், தீபாவளி பண்டிகைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
- பெர்ரி கருப்பு நிற நீச்சல் உடையிலும், ட்ரூடோ சட்டை இல்லாமலும் கட்டியணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
- கேட்டி பெர்ரி இதற்கு முன்பு நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (53) மற்றும் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி (40) குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ட்ரூடோவும், கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்து வருவதாக அணமைக் காலமாக வந்த கிசுகிச்சுகளை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது அவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பராவில், படகு ஒன்றில் அவர்கள் முத்தமிட்டுக் கொண்டபோது இவை எடுக்கப்பட்டுள்ளன.
இதில், பெர்ரி கருப்பு நிற நீச்சல் உடையிலும், ட்ரூடோ சட்டை இல்லாமலும் கட்டியணைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. மேலும், ட்ரூடோ, பெர்ரியின் கன்னத்தில் முத்தமிடும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்தச் காட்சியை நேரில் பார்த்த ஒரு சாட்சி, படகில் இருந்தவர்கள் ட்ரூடோ மற்றும் பெர்ரி என்பதை உறுதிப்படுத்திய பின்னர், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, ஜூலை 28 அன்று மாண்ட்ரீலில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இருவரும் இரவு உணவு சாப்பிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியானதைத் தொடர்ந்தே இவர்கள் டேட்டிங் செய்வதாக முதன்முதலில் செய்திகள் வெளியாகின.
கேட்டி பெர்ரி இதற்கு முன்பு நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.
அவர்களுக்கு நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது. எனினும், சில காரணங்களால் ஜூன் 2025-ல் அவர்களின் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கனடா பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடடோ விலகியது குறிப்பிடத்தக்கது.
- தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால், மக்கள் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க ஆர்வம்.
- தி.நகரில் இன்று காலை முதல் அதிக அளவில் மக்கள் வரத்தொடங்கினர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் கடந்த சில நாட்களாகவே பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தீபாவளி விற்பனையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஜவுளிக்கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்கினார்கள். இதனால் சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் இன்று காலையிலேயே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இன்று கடை வீதிகள் களை கட்டின.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சேலைகள், சுடிதார், பேண்ட், சட்டை, ஜீன்ஸ், வேட்டி உள்ளிட்ட துணிமணிகளை வாங்கினார்கள். குழந்தைகளுக்கான ஆடைகளும் விற்பனை அமோகமாக நடந்தது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல்களில் ஆடைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன.
சென்னையின் முக்கிய வணிகப்பகுதி தி.நகர் ஆகும். வழக்கமாக தி.நகரில் உள்ள கடைகளுக்கு பகல் 12 மணிக்கு பிறகுதான் வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவார்கள். ஆனால் தீபாவளி ஜவுளி வாங்குவதற்காக இன்று காலை 10 மணியில் இருந்தே தி.நகரில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அலை அலையாக வரத்தொடங்கினார்கள்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் இன்று காலையில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ரங்கநாதன் தெருவில் தரையே தெரியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் ஜவுளி வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மின்சார ரெயில்களில் வந்து இறங்கினார்கள். இதனால் ஒவ்வொரு மின்சார ரெயில்கள் வரும்போதும் ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தபடியே காணப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளுக்குள்ளும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடைகளின் நுழைவு வாயில்களில் பொதுமக்கள் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததால் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. பலரும் முண்டியடித்தபடியே கடைக்குள் நுழைந்தனர்.
தி.நகரில் இன்று பகலில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் ஆடை வாங்க பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்கள் மழை பெய்யும்போது கடைகளில் ஒதுங்கி நின்று, மழை வெறித்ததும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கினார்கள்.
இதேபோல் தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டிபஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் தி.நகர் முழுவதுமே இன்று பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் அதிக அளவில் மக்கள் படையெடுத்ததால் தி.நகரில் உள்ள சாலைகளில் இன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. சாலை முழுவதுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோடு, எம்.சி.ரோட்டில் 1000-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. தீபாவளி ஆடைகள் வாங்க திருவொற்றியூர், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர், ஆர்.கே.நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை போன்ற பகுதியில் இருந்து ஏராளமானோர் இன்று வண்ணாரப்பேட்டைக்கு ஜவுளி வாங்க வந்திருந்தனர்.
கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், பெரியபாளையம், மாதவரம், செங்குன்றம் ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வண்ணாரப்பேட்டைக்கு வந்து ஜவுளி வாங்கினார்கள்.
சென்னை சவுகார் பேட்டை பழனியப்பன் தெரு, மின்ட் தெரு, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, யானை கவுனி போன்ற பகுதிகளில் ஏராளமான துணிக்கடைகள் உள்ளன. இங்கு வட மாநிலங்களில் இருந்து பேண்ட், சட்டைகள் போன்ற துணிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெண்களுக்கு தேவையான அனைத்து வகையான புடவைகளும் இங்கு விற்பனை செய்யப் படுகின்றன. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளை வாங்கினார்கள்.
சென்னை புரசைவாக்கத்தில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இங்கு இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவிந்து தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கி வருகிறார்கள். தொடர்ந்து பொதுமக்களின் வருகை அதிகரித்தது.
சென்னை குரோம் பேட்டை தற்போது புதிய வணிக பகுதியாக மாறியுள்ளது. இங்கு ஏராளமான ஜவுளிகடைகள் உள்ளன. இந்த கடைகளின் அருகில் மின்சார ரெயில் நிலையமும் உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குரோம் பேட்டையில் ஜவுளி வாங்குவதற்காக குவிந்திருந்தனர். இதனால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் பல ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கினார்கள். இதனால் சண்முகம் சாலையில் நெரிசல் காணப்பட்டது.
இதேபோல் சென்னை அண்ணாநகர், பாடி, அம்பத்தூர், பெரம்பூர், போரூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கீழ்க்கட்டளை, திருவான்மியூர், மயிலாப்பூர், காரப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளிலும் இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
- ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்
- நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தற்கொலை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.
திருவனந்தபுரம் மத்திய ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என்று அடையாளம் காணப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.
இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், "நான் தற்கொலை செய்து கொள்வது பெண்ணாலோ, காதல் விவகாரத்தாலோ, கடன் பிரச்சனையாலோ அல்லது அது போன்ற எதனாலோ அல்ல. எனது பதட்டம் மற்றும் மனச்சோர்வு காரணமாக நான் இதைச் செய்கிறேன்.
எனக்கு ஒரு நபர் மற்றும் ஒரு அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் கோபம் இல்லை. அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம்), என் தந்தை (மிகவும் நல்ல மனிதர்) என்னை அதில் சேரச் செய்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன்.
ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்" என்று அனந்து எழுதியுள்ளார்.
அனந்துவின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் கோரியுள்ளன.
சிபிஐ(எம்) இளைஞர் பிரிவான டிஒய்எஃப்ஐ மாநில செயலாளர் வி.கே. சனோஜ் பேசுகையில், "அன்று அவர் வெளியிட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்ஸின் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்துகிறது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று கூறினார்.
அனந்து ஏற்கனவே மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். அனந்துவின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு, அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் என்று எலிகுளம் பஞ்சாயத்துத் தலைவர் ஜிம்மி ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. இயற்கைக்கு மாறான மரணமாக மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- பிரத்தியேக பிரசார வாகனம் தொடக்க விழா நடைபெறும் மேடைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
- வாகனத்தின் மேற்கூரை பின்னோக்கிச் செல்லும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் பிரசார பயணத்தின்போது அவர் பயன்படுத்தக்கூடிய பிரத்தியேக பிரசார வாகனம் இன்று மதுரைக்கு கொண்டுவரப்பட்டு தொடக்க விழா நடைபெறும் மேடைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 4 திசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிரசார பயணத்தின் போது ஓட்டுநர் அருகே அமரக்கூடிய நயினார் நாகேந்திரன் அமரும் இடத்தில் சாலையை நோக்கியவாறு ஒரு கண்காணிப்பு கேமர, பிரசார வாகனத்தின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் தலா ஒரு கேமரா, வாகனத்திற்குள் படிக்கட்டில் ஏறும் இடத்தில் ஒரு கேமரா என மொத்தம் வாகனத்தை சுற்றிலும் 4 கேமராக்களும் வாகனத்திற்குள் ஒரு கேமரா என மொத்தம் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பிரசார வாகனத்திற்குள் கழிப்பறை வசதி மற்றும் வரக்கூடிய தலைவர்களோடு கலந்துரையாடுவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசாரத்தின்போது வாகனத்தின் மேற்கூரை பின்னோக்கிச் செல்லும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிரசார வாகனத்தில் நந்தி சிலை பொறிக்கப்பட்ட செங்கோலுடன் பிரதமர் மோடி இருகரம் கூப்பி வணங்குவது போன்றும், அய்யன் திருவள்ளுவர் சிலை, ராமேசுவரம் பாலம், வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட பாஜக-வின் செயல் திட்டங்களை விளக்கும் வண்ணம் படங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி ஒன்று பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகார் பெட்டியில், "விடியல, முடியல" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன.
- தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் காலை உணவு திட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், "முதல் மணி அடிப்பதற்கு முன்பு லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவளிக்கும் பெண்களைப் பற்றியும், தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை இயக்கும் சமையலறைகளுக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களைப் பற்றியும் செய்தி நிறுவனம் தொடர்ந்த வீடியோவை பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்," காலை உணவு திட்டம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன.
தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றனர்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
- ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள்
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.
இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் போர்நிறுத்ததை உறுதிப்படுத்துதல், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
காசா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் கத்தார் மிக முக்கியமான மத்தியஸ்தர்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று, எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்கேற்க இந்தத் தூதர்கள் சர்ம் எல்-ஷேக்கிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வாகனம், நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கூர்மையான வளைவில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






