என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி விற்பனை: சென்னை ஜவுளிக்கடைகளில் இன்று அலைமோதிய கூட்டம்
- தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால், மக்கள் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க ஆர்வம்.
- தி.நகரில் இன்று காலை முதல் அதிக அளவில் மக்கள் வரத்தொடங்கினர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் கடந்த சில நாட்களாகவே பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தீபாவளி விற்பனையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஜவுளிக்கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்கினார்கள். இதனால் சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் இன்று காலையிலேயே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இன்று கடை வீதிகள் களை கட்டின.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சேலைகள், சுடிதார், பேண்ட், சட்டை, ஜீன்ஸ், வேட்டி உள்ளிட்ட துணிமணிகளை வாங்கினார்கள். குழந்தைகளுக்கான ஆடைகளும் விற்பனை அமோகமாக நடந்தது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல்களில் ஆடைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன.
சென்னையின் முக்கிய வணிகப்பகுதி தி.நகர் ஆகும். வழக்கமாக தி.நகரில் உள்ள கடைகளுக்கு பகல் 12 மணிக்கு பிறகுதான் வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவார்கள். ஆனால் தீபாவளி ஜவுளி வாங்குவதற்காக இன்று காலை 10 மணியில் இருந்தே தி.நகரில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அலை அலையாக வரத்தொடங்கினார்கள்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் இன்று காலையில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ரங்கநாதன் தெருவில் தரையே தெரியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் ஜவுளி வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மின்சார ரெயில்களில் வந்து இறங்கினார்கள். இதனால் ஒவ்வொரு மின்சார ரெயில்கள் வரும்போதும் ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தபடியே காணப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளுக்குள்ளும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடைகளின் நுழைவு வாயில்களில் பொதுமக்கள் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததால் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. பலரும் முண்டியடித்தபடியே கடைக்குள் நுழைந்தனர்.
தி.நகரில் இன்று பகலில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் ஆடை வாங்க பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்கள் மழை பெய்யும்போது கடைகளில் ஒதுங்கி நின்று, மழை வெறித்ததும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கினார்கள்.
இதேபோல் தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டிபஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் தி.நகர் முழுவதுமே இன்று பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் அதிக அளவில் மக்கள் படையெடுத்ததால் தி.நகரில் உள்ள சாலைகளில் இன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. சாலை முழுவதுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோடு, எம்.சி.ரோட்டில் 1000-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. தீபாவளி ஆடைகள் வாங்க திருவொற்றியூர், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர், ஆர்.கே.நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை போன்ற பகுதியில் இருந்து ஏராளமானோர் இன்று வண்ணாரப்பேட்டைக்கு ஜவுளி வாங்க வந்திருந்தனர்.
கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், பெரியபாளையம், மாதவரம், செங்குன்றம் ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வண்ணாரப்பேட்டைக்கு வந்து ஜவுளி வாங்கினார்கள்.
சென்னை சவுகார் பேட்டை பழனியப்பன் தெரு, மின்ட் தெரு, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, யானை கவுனி போன்ற பகுதிகளில் ஏராளமான துணிக்கடைகள் உள்ளன. இங்கு வட மாநிலங்களில் இருந்து பேண்ட், சட்டைகள் போன்ற துணிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெண்களுக்கு தேவையான அனைத்து வகையான புடவைகளும் இங்கு விற்பனை செய்யப் படுகின்றன. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளை வாங்கினார்கள்.
சென்னை புரசைவாக்கத்தில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இங்கு இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவிந்து தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கி வருகிறார்கள். தொடர்ந்து பொதுமக்களின் வருகை அதிகரித்தது.
சென்னை குரோம் பேட்டை தற்போது புதிய வணிக பகுதியாக மாறியுள்ளது. இங்கு ஏராளமான ஜவுளிகடைகள் உள்ளன. இந்த கடைகளின் அருகில் மின்சார ரெயில் நிலையமும் உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குரோம் பேட்டையில் ஜவுளி வாங்குவதற்காக குவிந்திருந்தனர். இதனால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் பல ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கினார்கள். இதனால் சண்முகம் சாலையில் நெரிசல் காணப்பட்டது.
இதேபோல் சென்னை அண்ணாநகர், பாடி, அம்பத்தூர், பெரம்பூர், போரூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கீழ்க்கட்டளை, திருவான்மியூர், மயிலாப்பூர், காரப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளிலும் இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.






