என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை வந்தடைந்த நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம்
- பிரத்தியேக பிரசார வாகனம் தொடக்க விழா நடைபெறும் மேடைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
- வாகனத்தின் மேற்கூரை பின்னோக்கிச் செல்லும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் பிரசார பயணத்தின்போது அவர் பயன்படுத்தக்கூடிய பிரத்தியேக பிரசார வாகனம் இன்று மதுரைக்கு கொண்டுவரப்பட்டு தொடக்க விழா நடைபெறும் மேடைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 4 திசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிரசார பயணத்தின் போது ஓட்டுநர் அருகே அமரக்கூடிய நயினார் நாகேந்திரன் அமரும் இடத்தில் சாலையை நோக்கியவாறு ஒரு கண்காணிப்பு கேமர, பிரசார வாகனத்தின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் தலா ஒரு கேமரா, வாகனத்திற்குள் படிக்கட்டில் ஏறும் இடத்தில் ஒரு கேமரா என மொத்தம் வாகனத்தை சுற்றிலும் 4 கேமராக்களும் வாகனத்திற்குள் ஒரு கேமரா என மொத்தம் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பிரசார வாகனத்திற்குள் கழிப்பறை வசதி மற்றும் வரக்கூடிய தலைவர்களோடு கலந்துரையாடுவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசாரத்தின்போது வாகனத்தின் மேற்கூரை பின்னோக்கிச் செல்லும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிரசார வாகனத்தில் நந்தி சிலை பொறிக்கப்பட்ட செங்கோலுடன் பிரதமர் மோடி இருகரம் கூப்பி வணங்குவது போன்றும், அய்யன் திருவள்ளுவர் சிலை, ராமேசுவரம் பாலம், வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட பாஜக-வின் செயல் திட்டங்களை விளக்கும் வண்ணம் படங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி ஒன்று பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகார் பெட்டியில், "விடியல, முடியல" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.






