என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
- அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக பெரும்பான்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பில், அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
இதற்கான தொடக்க விழா இன்று மதுரை மாவட்டம், அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இதில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும், கூட்டணி கட்சியான அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரசார பயணம் தொடக்க விழாவில், பாஜக பிரசார பாடல் வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி திமுக மற்றும் காங்கிரஸை விமர்சிக்கும் பேச்சும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் பேச்சும் இடம் பெற்றிருந்தன.
- தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் சேர்த்தார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் லாகூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷபிக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் களம் இறங்கினார். இவர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஷான் மசூத் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் அசாம் (23), சாத் ஷகீல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6ஆவது விக்கெட்டுக்கு ரிஸ்வான் உடன் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் 300 ரன்களை கடந்தது.
இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது. ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மன் ஆகா 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சீனுரான் முத்துசாமி 2 விக்கெட் வீழத்தினார். ரபடா, சுப்புராயன், ஹார்மன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- பாஜக, நிதிஷ் குமார் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிடும்.
- ஜித்தன் ராம் மாஞ்சி கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடித்தார். இவரது கட்சி மக்களவை தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது. அதனால் 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி 25 முதல் 30 இடங்களுக்குள்தான் கொடுக்க முன்வந்தன. இந்த சிராக் பஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில்தான் தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
அதன்படி பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும், லோக் ஜனதா கட்சி 29 தொகுதியில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.
- இந்தியாவின் தொடக்க ஜோடி 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.
- ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களும், பிரதிகா ராவல் 75 ரன்களும் விளாசினர்.
மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.
ஸ்மிரிதி மந்தனா ஆட்டமிழந்ததும், பிரதிகா ராவல் 96 பந்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுதது வந்த ஹர்லீன் தியோல் 42 பந்தில் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்னில் வெளியேறினார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 21 பந்தில் 33 ரன்களும், ரிச்சா கோஷ் 22 பந்தில் 32 ரன்களும் சேர்க்க இந்தியா 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சுதர்லேண்டு 5 விக்கெட் சாய்த்தார். ஷோபி மொலினக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக நடவடிக்கை.
- சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்உஎம்.நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டுள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிர்மல்குமார் கைதை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல்நிலையத்தை தவெகவினர் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டு பல மணி நேரமாகியும் காவலத் நிலையத்தில் விசாரணை நடத்தி வருவதாக தவெகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என தவெகவினர் கோஷமிட்டனர். காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு.
- அதனால் தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு.
மக்களவை எம்.பி. ஆ.ராசா சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த ஆட்சி தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது. 30 வருடங்களாக நான் எம்.பி.யாக இருக்கிறேன். PL2 தெரியுமா? PLC தெரியுமா? (நிகழ்ச்சியில் இருந்தவர்கள் பார்த்து) எதுவுமே தெரியாது.
தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு. பூத் ஸ்லிப் நம் கையில், வாக்காளர் பட்டியல் நம் கையில், ஸ்லிம் கொடுக்கிறது நம் கையில், சின்னம் கொடுக்கிறது நம் கையில்.
ஏனென்றால் ஓட்டு போடுறதில் 10 பேர் திருடர்களாக இருப்பார்கள். இதனால் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் நாம் அந்த வேலையை பார்த்தோம். தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு.
தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் வந்துவிட்டார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. தேர்தல் ஆணையத்தின் திருட்டை தடுக்கத்தான் இவ்வளவு வேலை. இப்படி தடுத்துதான் முதலமைச்சராக வேண்டுமென்றால், வேண்டியதில்லை. வந்துவிடுவார்கள்.
130, 150 என இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால் அது தமிழ்நாட்டுக்கான தேர்தல். இது தமிழ்நாட்டுக்கான தேர்தல் மட்டுமல்ல. இந்த தேர்தல் இந்தியாவுக்கான தேர்தல். மத்திய அரசுக்கு தற்போது மெஜாரிட்டி இல்லை. தமிழக தேர்தலில் 150 முதல் 200 தொகுதிகளை பிடித்துவிட்டால், பாராளுமன்ற தேர்தல் இல்லாமலேயே மத்திய அரசு மாறும்.
இவ்வாறு ஆ. ராசா தெரிவித்தார்.
- பிராமணரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததார்.
- புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்
மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் சதரியா என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் வசித்து வந்த புர்ஷோத்தம் குஷ்வாஹா என்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், கிராம மக்கள் முன்னிலையில் அன்னு பாண்டே என்ற பிராமண இளைஞரின் கால்களைக் கழுவி அந்த தண்ணீரை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சத்தாரியா கிராமத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிராமணரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்டபோது, கிராம கூட்டத்தில் அவருக்குப் ரூ.2,100 அபராதம் விதித்தனர். அன்னு பாண்டே இதை ஏற்றுக்கொண்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புர்ஷோத்தம் குஷ்வாஹா, அன்னு பாண்டே செருப்பு மாலை அணிந்திருப்பது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு படத்தை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அவர் அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கோரிய போதும், இது பிராமண சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று சிலர் கருதினர்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு ஒன்று கூடி, புர்ஷோத்தம் தனது செயலுக்கு தண்டனை பெற வேண்டும் செய்ய வேண்டும் என்று கோரியது.
இதன் விளைவாக, புர்ஷோத்தம் அன்னு பாண்டேயின் கால்களைக் கழுவி, அந்த நீரை அருந்த வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும், அவர் ரூ.5,100 அபராதம் செலுத்தி பிராமண சமூகத்திடம் மன்னிப்பு கேட்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
வைரலாகி வரும் காணொளியில், புர்ஷோத்தம் தரையில் முழங்காலிட்டு அன்னுவின் கால்களைக் கழுவுவது பதிவாகியுள்ளது.
இருப்பினும் இதை எளிதாக கேட்டுக்கொண்ட புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்
ஆனால் இந்தச் சம்பவம் குறித்து புர்ஷோத்தம் உடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பிரசார பயணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இபிஎஸ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து, சூரப்பள்ளி அருகே, நொரச்சிவளவு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
- மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன்.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தில் ஒதுக்குபுறமான இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
தற்போது மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் இதேபோல் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மருத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சம்பவம்.
மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதேவேளை இதுபோன்ற குற்றங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தை குறிவைப்பது சரியல்ல. மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் எவ்வளவு சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஒடிசாவில், கடற்கரைகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?.
நாங்கள் 1-2 மாதங்களுக்குள் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். மேலும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது"" என முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு மம்தா பேசினார்.
- எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் திட்டமிட்டு வேண்டுமேன்றே விமர்சனம் செய்கிறார்கள்.
- நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து இன்று வரைக்கும் எங்களை பற்றிதான் விமர்சனம்.
எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் "தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப்பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அ.தி.மு.க. பலவீனமாகி விட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் பிரசாரம் செய்யும் இடத்தில் எல்லாம் த.வெ.க.வினர் வரவேற்பு கொடுப்பது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கிறார்கள். தலைமையின் ஆணையை பெற்று வர வேண்டும் என்று நாங்கள் கூட சொன்னோம். எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். அவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள்.
எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் திட்டமிட்டு வேண்டுமேன்றே விமர்சனம் செய்கிறார்கள். பொறுக்க முடியவில்லை. நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து இன்று வரைக்கும் எங்களை பற்றிதான் விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன? அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. திமுக கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அந்த கட்சித் தலைவர்கள் எங்களை பற்றி பேச என்ற தகுதி இருக்கிறது.
எங்களுடன் சேர விரும்புகின்ற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்கிறோம். அதில் விமர்சனம். பொறுக்க முடியவில்லை. நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என்றால் எளிதாக வரலாம் என நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
த.வெ.க. உடன் கூட்டணி வைத்தால் பாஜக-வை கழற்றி விட்டுவிடுவார்கள் என டிடிவி தினகரன் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, "அது எல்லாம் ஒரு கட்சியா?. அவர் கூறியதாக கேள்வி கேட்கலாமா?. யார் யாரோ பேசுவதற்கெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். திட்டமிட்டு தவறான விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்" என்றார்.
த.வெ.க. உடன் கூட்டணி வருமா என்ற கேள்விக்கு, "இந்த கூட்டணி வருமா? அந்த கூட்டணி வருமா? என்பது தேர்தலின்போதுதான் தெரியும்" என்றார்.
- தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அது புரளி என்றும் தெரிய வந்தது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்மநபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து, உடனடியாக தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல்.
- நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது:-
கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.
ஒரு மனு இறந்தவரின் உண்மையான பிரதிநிதி அல்லாத ஒருவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, மற்றொன்று அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஆவணங்களில் கையொப்பமிட தவறாக வழிநடத்தப்பட்டதாகத் தோன்றும் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல். இது மலிவான அரசியல் ஆதாயத்திற்காக துக்கத்தையும் சோகத்தையும் பயன்படுத்துவதற்கான ஆபத்தான முயற்சி.
நீதிமன்றத்தின் மீது திமிர்பிடித்த மோசடியாகத் தோன்றுவதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விசாரித்து, அதன் பின்னணியில் உள்ளவர்களை அவர்கள் தகுதியான கடுமையுடன் கையாளும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






