என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரசார கூட்டத்தில் த.வெ.க. கொடி: விமர்சனம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதில்..!
- எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் திட்டமிட்டு வேண்டுமேன்றே விமர்சனம் செய்கிறார்கள்.
- நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து இன்று வரைக்கும் எங்களை பற்றிதான் விமர்சனம்.
எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் "தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப்பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அ.தி.மு.க. பலவீனமாகி விட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் பிரசாரம் செய்யும் இடத்தில் எல்லாம் த.வெ.க.வினர் வரவேற்பு கொடுப்பது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கிறார்கள். தலைமையின் ஆணையை பெற்று வர வேண்டும் என்று நாங்கள் கூட சொன்னோம். எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். அவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள்.
எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் திட்டமிட்டு வேண்டுமேன்றே விமர்சனம் செய்கிறார்கள். பொறுக்க முடியவில்லை. நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து இன்று வரைக்கும் எங்களை பற்றிதான் விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன? அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. திமுக கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அந்த கட்சித் தலைவர்கள் எங்களை பற்றி பேச என்ற தகுதி இருக்கிறது.
எங்களுடன் சேர விரும்புகின்ற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்கிறோம். அதில் விமர்சனம். பொறுக்க முடியவில்லை. நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என்றால் எளிதாக வரலாம் என நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
த.வெ.க. உடன் கூட்டணி வைத்தால் பாஜக-வை கழற்றி விட்டுவிடுவார்கள் என டிடிவி தினகரன் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, "அது எல்லாம் ஒரு கட்சியா?. அவர் கூறியதாக கேள்வி கேட்கலாமா?. யார் யாரோ பேசுவதற்கெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். திட்டமிட்டு தவறான விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்" என்றார்.
த.வெ.க. உடன் கூட்டணி வருமா என்ற கேள்விக்கு, "இந்த கூட்டணி வருமா? அந்த கூட்டணி வருமா? என்பது தேர்தலின்போதுதான் தெரியும்" என்றார்.






