என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தேர்தலில் வென்ற தேசிய மாணவர் சங்க உறுப்பினரை ஏபிவிபி உறுப்பினர்கள் தாக்கியது குறித்து போலீசார் முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்தார்.
    • அரசு கல்லூரியில் ஏபிவிபி தலைவர்கள் மூவர் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் ஆர்எஸ்எஸ் உடைய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது.

    இந்நிலையில் மாணவர் யூனியனின் இணை செயலாளரான தீபிகா ஜா மற்றும் 2 ஏபிவிபி உறுப்பினர்கள் நேற்று ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    தீபிகா ஜா ஆசிரியரின் கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் வடக்கு வளாகத்தில் செயல்படும் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சுஜித் குமார் என்ற அந்த ஆசிரியர் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அண்மையில் கல்லூரி கவுன்சில் தேர்தலில் வென்ற தேசிய மாணவர் சங்க உறுப்பினரை ஏபிவிபி உறுப்பினர்கள்  தாக்கியது குறித்து அலுவலக அறையில் போலீசார் முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சக ஆசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து அம்மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏபிவிபி தலைவர்கள் மூவர் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.  

    • சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது.
    • பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சி இரு பிரிவாக உள்ளது.

    இதில் டாக்டர் ராமதாஸ் பக்கம் ஜி.கே.மணி, அருள் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அன்புமணி பக்கம் வெங்கடேசன், சதா சிவம், சிவகுமார் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இதில் சட்டசபையில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முதல் வரிசையில் இருக்கிறார். அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அந்த இருக்கையில் வெங்கடேசனை அமர வைக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அன்புமணி தரப்பில் கடிதம் கொடுத்து இருந்தனர்.

    இந்த விவகாரத்துக்கு இன்று சபாநாயகர் விளக்கம் கொடுத்து உள்ளார். சட்டசபையில் இன்று டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள் பேசி முடித்த நிலையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேச வாய்ப்பு கேட்டு எழுந்து நின்றனர்.

    சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் அளித்து பேசியதாவது:-

    சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது. இன்று பிரதான கட்சி ஜெயித்து வெற்றி பெற்றவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். பிரதான எதிர்க்கட்சி 24 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகமாக இருந்தால் கட்சி அங்கீகாரத்துடன் சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்.

    அதைவிட கம்மியாக 8 உறுப்பினர்கள் இருந்தால் அவர்கள் ஒரு குழுவாக, அணியாக இருப்பார்கள். இதுதான் சட்டமன்றத்தின் நடைமுறை. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டும்தான் இருக்கையை எந்த இடத்தில் கொடுக்க வேண்டும் என்று பேரவை விதி சொல்கிறது.

    மீதிமுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அது சபாநாயகரின் முழு விருப்பம். அதன்படி நான் வைத்திருக்கிறேனே தவிர நினைத்தவுடனே எழுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என யாரேனும் கேட்டால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை.

    பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர். இதில் இன்று நடைபெறும் விவாதத்திற்கு 2 பேர் எழுதி தந்தீர்கள். அதில் அருள், சிவகுமார் ஆகியோர் ஆகும். இதில் யாரை முதலில் கூப்பிடுவேன் என்றால் முதலில் எழுதி கொடுத்திருந்த அருளை கூப்பிடுவேன்.

    நேற்று நீங்கள் என்னிடம் எதுவும் எழுதி கொடுக்காததால் உங்களை பேச அழைக்க முடியவில்லை. ஏதோ ஒரு கட்சி தலைமையகத்தில் எழுதி கொடுத்த தீர்மானத்தை இங்கு கொடுத்து அதை செயல்படுத்த சொன்னால் அது தவறானது.

    இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

    இதை கேட்ட அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சபாநாயகர் எச்சரித்தார். உங்கள் பிரச்சனைகளை சட்டசபைக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கு பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

    இதைத் தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.எ.க்கள் 3 பேரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • சென்னை உள்பட பல இடங்களில் பெய்து வரும் மழை நாளை முதல் சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாளே சென்னை உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இரவிலும் விட்டு விட்டு பெய்த மழை காலையிலும் நீடித்தது.

    இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? எப்போது தீவிரமடையும்? என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்திரன் விளக்கி உள்ளார்.

    அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரளம், தெற்கு கர்நாடக பகுதியில் நாளை (18-ந்தேதி) உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைப்பொழிவு இருக்காது. சென்னை உள்பட பல இடங்களில் பெய்து வரும் மழை நாளை முதல் சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளன.

    இதனால் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் பெரிய அளவில் மழை இருக்காது. தீபாவளிக்கு பிறகு, வருகிற 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக் கூடும். இதனால் 23-ந்தேதியில் இருந்தே வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கான சூழல் உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை 23-ந்தேதியே முழுமையாக கணிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இருப்பினும் வங்கக்கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகடலோர மாவட்டங்களில் 23-ந்தேதியில் இருந்து பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    • ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைப்பதும்தான் நோக்கம்.
    • வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.

    இத்தனை ஆண்டுகளாக தெருக்கள், சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனைகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவு படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பித்து இருக்கிறது.

    இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைப்பதும்தான் நோக்கம். இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சட்டவிரோதம்.

    எனவே குடியிருப்பு பகுதி சாலைகள் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா, சுமந்து குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கார்த்திகேயன், வக்கீல்கள் கார்த்திகேய வெங்கடாஜலபதி சுப்பையா ஆகியோர் ஆஜராகி, நாட்டுக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்தவர்களின் பெயர்களையும், ஆன்மிக தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் நோக்கத்தில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

    விசாரணை முடிவில் மேற்கண்ட அரசாணையின்படி செயல்படுத்துவது சம்பந்தமாக கள ஆய்வு நடத்தலாம். பெயர்களை நீக்கம் செய்வது உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • கடந்த ஆண்டை விட 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை இருமடங்காகி 4,439 வழக்குகள் பதிவாகி உள்ளன.
    • 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தது போல போலியாகத் தயாரிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த 73 வயது பெண்மணி ஒருவரை 'டிஜிட்டல் கைது செய்வதாக ஏமாற்றி சைபர் மோசடி கும்பல் ஒன்று ரூ.1 பணம் பறிக்க முயற்சித்துள்ளது.

    இதுதொடர்பாக அப்பெண்மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு புகார் கடிதம் ஒன்றை எழுதினார்.

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மோசடிக்காரர்கள் போலி செய்திருப்பது நீதிபதிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதைதொடர்ந்து டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

    "போலி ஆவணங்கள் மூலம் டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.

    இந்த மோசடிகளைச் சமாளிக்க மாநில காவல்துறையால் முடியுமா அல்லது நாடு தழுவிய விசாரணைக்கு மத்திய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த அமர்வு முடிவு செய்யும்.

    தேசிய சைபர் குற்றப் புகாரளிக்கும் இணையதளத்தில் (NCRP), 2024 இல் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 2,746 'டிஜிட்டல் கைது' வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட இருமடங்காகி 4,439 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

    அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.  

    • கிட்னி முறைகேடு விவகாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
    • விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை தமிழக அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை.

    சென்னை :

    சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 25 குழந்தைகளை கொன்ற இருமல் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.

    * காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்ட நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு.

    * காஞ்சிபுரத்தில் தயாரித்த இருமல் மருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    * தமிழக சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்தது என ம.பி. அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

    * தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியமே 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்க காரணம்.

    * இருமல் மருந்தால் பல குழந்தைகள் உயிரிழந்த பின்னரும் தாமதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    * ஸ்ரீசன் பார்மா நிறுவனம் பலமுறை தவறு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

    * ஸ்ரீசன் நிறுவனம் தொடர்ந்து தவறு செய்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்காது.

    * கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.

    * கிட்னி முறைகேடு விவகாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.

    * கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    * சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. யாரை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

    * தனிநபர் ஐகோர்ட் கிளையை அணுகியதால் தான் கிட்னி முறைகேடு விவகாரம் தற்போது விசாரிக்கப்படுகிறது.

    * கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை தமிழக அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை.

    * முறையாக நெல் கொள்முதல் செய்யாததால் 30 லட்சம் மூட்டைகள் தேங்கியுள்ளன.

    * பருவமழை தொடங்கி உள்ளதால் விவசாயிகளிடம் இருந்து போர்கால அடிப்படையில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார். 

    • பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என சமூக நீதி விடுதி என மாற்றம் செய்யப்பட்டது.
    • ஆணாதிக்கமும் குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது.

    ஆணவப்படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதி இல்லை என்பதே தமிழனின் அடிப்படையாக இருந்தது.

    * இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.

    * பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறிய வள்ளுவர் பிறந்த மண் இது.

    * வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.

    * சாதி, மதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை தமிழிற்கு கொடுக்க வைத்தது திராவிட இயக்கம்.

    * சமூக சீர்திருத்த ஆட்சியை நடத்தியவர் கலைஞர் கருணாநிதி.

    * அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.

    * அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம்.

    * சாதி இரண்டொழிய வேறில்லை என்ற அவ்வை மொழியே தமிழ்நாட்டின் கொள்கையாக இருந்தது.

    * பலர் போராடிக்கிடைத்தது தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை.

    * திராவிட இயக்கங்களின் முயற்சியில் தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    * சீர்திருத்த சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைக்கப்பட்டது.

    * சாதிய பெயரில் இருந்த 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என சமூக நீதி விடுதி என மாற்றம் செய்யப்பட்டது.

    * உலகம் அறிவு மயமாகி வருகிறது. அது அன்புமயமாவதை தடுக்கிறது. இது நம்மை வாட்டுகிறது.

    * நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் மனதை வேதனைக்குள்ளாக்கி வருகின்றன.

    * ஆணவ படுகொலைகளுக்கு சாதியை தாண்டியும் பல காரணங்கள் உள்ளன.

    * எதன் காரணமாகவும் ஒருவர் மற்றொருவரை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    * ஆணாதிக்கமும் குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது.

    * ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • கிராமப்புறங்களில் மின்னல் தாக்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    சென்னை:

    கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர். பி.உதயகுமார், வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.

    அப்போது அவர்கள் பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் கிராமப் புறங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இடிதாங்கிகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுசியதாவது:-

    வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதன்படி வருகிற 22-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    கிராமப்புறங்களில் மின்னல் தாக்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதன்படி கிராம பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் இடி தாங்கிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

    • பாத்ரூமில் அழும் காட்சியில் பிரதீப் ரங்கநாதன் கண்கலங்க வைக்கிறார்.
    • சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

    நாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக தாய் மாமா மகள் நாயகி மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுக்கு பிரதீப் மீது காதல் வருகிறது. ஆனால், பிரதீப், மமிதா பைஜு மீது காதல் வரவில்லை தோழியாக தான் பார்க்கிறேன் என்று கூறி காதலை மறுக்கிறார்.

    ஆறு மாதங்கள் ஆன நிலையில் பிரதீப்க்கு மமிதா பைஜு மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், மமிதா பைஜு வேறொருவரை காதலிப்பதாக சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார். உடனே பிரதீப் மமிதா பைஜுவை காதலுடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். அதற்குள் சரத்குமார் பிரதீப் மமிதா பைஜு இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து விடுகிறார்.

    இறுதியில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவை திருமணம் செய்து கொண்டாரா? மமிதா பைஜுவை காதலருடன் சேர்த்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல், சோகம், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். பிரதீப் உடன் செல்ல சண்டை, கோபம், என ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடி, வில்லன், ஜாதி வெறியன் என அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

    தற்போது இருக்கும் சூழ்நிலையிலும் வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள், ஏன் அடுத்தவனை சாக்கடிக்கிறீர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். ஜாதி ஒரு ஒன்லைன் ஆக இருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, சுவாரசியம் என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார்.

    சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசை கூடுதல் பலம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

    • நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
    • உள்துறை அமைச்சர் ஹர்ஷா சங்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    முதல்வர் பூபேந்திரா படேல் தலைமையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அமைச்சவரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்-தை பூபேந்திரா படேல் சந்தித்தார். இந்நிலையில் 26 புதிய அமைச்சர்களை பூபேஷ் படேல் தேர்வு செய்துள்ளார்.

    இந்த பட்டியலில் கிரிக்கெட் பிரபலம் ரவீந்தர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 2019 இல் அவர் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    முந்தைய அமைச்சரவையில் மூன்று பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் உள்ள 19 பேரும் புதிய முகங்கள் ஆவர். உள்துறை அமைச்சர் ஹர்ஷா சங்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்றே ஆளுநர் தலைமையில் நடைபெற உள்ளது. 2027 இல் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான நகர்வாக இந்த அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
    • மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

    தமிழ்நாடு சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வழக்கமான நடைமுறையின்படி, ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது விளக்கத்திற்காக திருப்பி அனுப்பவோ வேண்டும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு பல்கலை. மசோதா வழக்கையும் சேர்த்து விசாரிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஹரிஷ்குமார் முறையீடு செய்தார். 2 வழக்குகளும் இன்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

    மசோதாவுக்கு காலக்கெடு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    தனக்கு பதவிக்காலம் இன்னும் 4 வாரங்களே இருப்பதால், அதற்கு முன்பாக இவ்வழக்கில் முடிவு தெரியும் எனவும் அவர் கூறினார்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
    • கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரர்களாக மார்னஸ் லெபுசென் இடம் பெற்றுள்ளார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜாம்பா, ஜோஷ் இங்லீஷ் இருவரும் விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலிப்ஸ், மேத்யூ குனேமான் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×