என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
- மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 25 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பான சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
* குழந்தைகள் இறப்பு நடந்து 25 நாட்களுக்கு பின்னர் தான் தமிழகத்திற்கு தகவல் கிடைத்தது.
* 25 குழந்தைகள் மரணம் தொடர்பான செய்தி கிடைத்ததும் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
* தகவல் கிடைத்த 2 நாட்களில் சர்ச்சைக்குரிய மருத்து தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
* மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
* மருந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
* ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
* சர்ச்சைக்குரிய இருமல் மருந்து (Coldrif) அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை.
* இருமல் மருந்து விவகாரத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
* இருமல் மருந்து பறிமுதல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
* சர்ச்சைக்குரிய மருந்து நல்லது என மத்திய பிரதேச அரசு சான்றிதழ் அளித்துள்ளது.
* மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* 25 குழந்தைகள் பலியான காரணமாக ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் உரிமம் வழங்கப்பட்டது.
* கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை.
* 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
* எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- WHO பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது.
- இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் மறைந்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை பானங்களை, ORS எனப்படும் oral rehydration solutions என்று ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்று வந்தன.
இந்த பிரச்சனை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த 8 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார்.
இவரது தொடர் முயற்சிகளின் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாதவை 'ORS' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படக்கூடாது என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது.
இதை வரவேற்று நாம் ஜெயித்துவிட்டோம் என சிவரஞ்சனி நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ORS என்று சந்தைப்படுத்தப்பட்ட பல பானங்களில் WHO பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது. இந்த அதிகப்படியான சர்க்கரை, குறிப்பாகக் குழந்தைகளிடையே, வயிற்றுப்போக்கு மற்றும் அதன் சிக்கல்களை மோசமாக்கக்கூடும்.
இதனால் ORS என்று தவறாகக் கூறி விற்கப்பட்ட பாணங்களால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில் தற்போது FSSAI உத்தரவு இதை தடுத்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், பெற்றோரோ அல்லது நோயாளியோ 'ORS' என்று லேபிளிடப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போது, உலகளாவிய சுகாதாரத் தரங்களால் வரையறுக்கப்பட்ட சரியான, உயிர் காக்கும் ஃபார்முலாவை பெறுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* கொள்முதல் நிலையங்களிலிருந்து 4,000 லாரிகள், 10 ரெயில்வே வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன.
* ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
* நாள் ஒன்றிற்கு தலா 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை, உடனே அனுமதி வாங்கி தாருங்கள்.
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது.
* நெல் அதிகமாக விளையும் இடத்தில் 2,000 முதல் 3,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம்.
* நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்.
* நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெஸ்ட் போட்டிகளைப் போலவே, ஒவ்வொரு அணியும் இரண்டு முறை (தலா 20 ஓவர்கள்) பேட்டிங் செய்யும்.
- ஒரு போட்டி மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டது.
புதிய கிரிக்கெட் வடிவமான "டெஸ்ட் ட்வென்டி" (Test Twenty) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கிரிக்கெட்டின் 4-வது வடிவமாக பார்க்கப்படுகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அடுத்ததாக இந்த வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவம் 13-19 வயதுடைய இளைஞர்களை கவர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பாரம்பரியமாக பிரபலமில்லாத நாடுகளில் விளையாட்டை பரப்புவது இதன் முதன்மை நோக்கங்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் மரபுகளை பாதுகாக்கவும், இளம் தலைமுறையை ஈர்க்கவும் உதவும்.
இதன் விதிமுறைகளி படி, ஒரு போட்டி மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டது. டெஸ்ட் போட்டிகளைப் போலவே, ஒவ்வொரு அணியும் இரண்டு முறை (தலா 20 ஓவர்கள்) பேட்டிங் செய்யும். இதன் முடிவுகள் வெற்றி, தோல்வி, சமன் அல்லது டிரா என அமையலாம். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் உத்திகளையும், டி20யின் வேகத்தையும் இணைக்கிறது.
இந்த தொடரின் முதல் சீசன் ஜனவரி 2026-ல் தொடங்கவுள்ளது. முதல் இரண்டு பதிப்புகளும் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இது சர்வதேச சுற்றுப் போட்டியாக மாற உள்ளது.
முதலில் ஆறு உலகளாவிய அணிகள் இதில் பங்கேற்கும். அதன்படி இந்தியாவில் மூன்று, துபாய், லண்டன் மற்றும் அமெரிக்காவில் தலா ஒன்று. ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். அதில் 8 இந்தியர்கள், 8 சர்வதேச வீரர்கள் அடங்கும்.
இந்த புதுவடிவ கிரிக்கெட்டை உருவாக்கியவர் கவுரவ் பஹிர்வானி. இதன் ஆலோசனை குழுவில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான சர் கிளைவ் லாய்ட், மேத்யூ ஹெய்டன், ஹர்பஜன் சிங், ஏபி டிவில்லியர்ஸ் போன்றோர் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
- இப்படத்தை இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார்.
- ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இப்படத்தி 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கல்யாணத்தில் நடக்க உள்ள பிரச்சனையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதை டீசரில் சொல்லப்பட்டுள்ளது.
இதோ 'தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வேடிக்கையான மேக்ஸ் டீஸர்! குழப்பத்தை அனுபவியுங்கள்... என்று நடிகர் கார்த்தி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
- விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.
- விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டினர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக முதலில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையமும், சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை நடத்தி வந்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து விஜய் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, என்.பி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு கடந்த 13-ந் தேதி கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது.
மேலும் தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்தது. வழக்கு தொடர்பான அத்தனை ஆவணங்களையும், விசாரணை விபரங்களையும் சிறப்பு புலனாய்வு குழு மற்றும் ஒரு நபர் ஆணையம் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் எப்போது வந்து விசாரணையை தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு குஜராத் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் ஏ.எஸ்.பி. முகேஷ் குமார், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று நள்ளிரவு 2 கார்களில் கரூர் வந்தனர்.
பின்னர் அவர்கள் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினர். சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த கார்கள் சுற்றுலா மாளிகை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தை இன்று பார்வையிட்டு விசாரணையை தொடங்க உள்ளனர். பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தங்கியுள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொடக்கத்தில் தங்கி இருந்தனர். பின்னர் கடந்த வாரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை திட்ட அலுவலகத்திற்கு தங்கள் அலுவலகத்தை இடமாற்றம் செய்தனர்.
இன்று திட்ட அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை. இதனிடையே இன்று காலை சிறப்பு புலனாய்வுக் குழு ஏ.டி.எஸ்.பி. திருமலை சி.பி.ஐ. அதிகாரிகளை சுற்றுலா மாளிகையில் சந்தித்தார். சிறிதுநேரம் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஐ.ஜி.அஸ்ராகர்க் வழக்கு விவரங்கள், ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கிறார். கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் குழு இன்று விசாரணையை தொடங்க உள்ள தகவல் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.
விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டினர். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அது தொடர்பாக எழுந்துள்ள சந்தேக கேள்விகளுக்கும் சி.பி.ஐ. விசாரணையில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் இருக்கின்றன.
- டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் இருக்கின்றன.
* 15 லட்சம் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு சென்றபிறகே மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கலாம்.
* டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
* ஒவ்வொரு நிலையங்களிலும் 600 மூட்டைகள் மட்டுமே நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
* நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 600 மூட்டைகளுக்கு பதிலாக 1,000 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து இந்திராணி கடிதம் கொடுத்துள்ளார்.
- தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ராஜினாமா ஏற்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த இந்திராணி (வயது 45) இருந்து வந்தார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மேயர் இந்திராணி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் கூறியபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து இந்திராணி கடிதம் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக துணை மேயர் தலைமையில் நடைபெறும் மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் துணை மேயர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமாவுக்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ராஜினாமா ஏற்கப்பட்டது. புதிய மேயர் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
- இன்று காலை, என்னைச் சந்திக்கக் கூடாது என அந்தக் குடும்பத்தை என்று அரசாங்கம் மிரட்டியது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தலித் சமூகத்தை சேர்ந்த ஹரிஓம் வால்மீகி (38 வயது) என்ற நபர் தனது உறவினரின் கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டார்.
வால்மீகி, திருட்டு கேங் -ஐ சேர்ந்தவர் என குற்றம்சாட்டி அந்த கும்பல் சரமாரியாக அடித்துள்ளது. இதில் வால்மீகி உயிரிழந்தார். அடுத்தநாள் காலை கிராமத்தினரால அங்கு அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வீடியோ வைரலான நிலையில் திருட்டு வதந்தியின் பேரில் தலித் நபர் அடித்துக் கொல்லப்பட்டது அம்மாநில அரசியலிலும் எதிரொலித்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு ரேபரேலியில் உள்ள பதேபூர் கிராமத்திற்கு சென்று, வால்மீகியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சில நாட்களுக்கு முன் அரியானாவில் ஒரு தலித் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். நான் அங்கு சென்றேன், இன்று இங்கே வந்திருக்கிறேன். இந்த குடும்பம் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர்களுக்கு எதிராக ஒரு குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களே குற்றவாளிகளைப் போலத் நடத்தப்படுகிறார்கள்.

அவர்களை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் நீதி மட்டும்தான். 'எங்கள் மகன் கொல்லப்பட்டார். இந்த கொலை வீடியோவில் பதிவாகியுள்ளது. எங்களுக்கு நீதி வேண்டும்...' என்று கேட்கிறார்கள்.
இந்த குடும்பத்தில் பெண் இருக்கிறார், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும், ஆனால் அரசாங்கம் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருப்பதால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.
நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சரிடம் (யோகி ஆதித்யநாத்) நான் கேட்பதெல்லாம், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மாறாக குற்றவாளிகள் பாதுகாக்கப்படக் கூடாது.

இன்று காலை, என்னைச் சந்திக்கக் கூடாது என அந்தக் குடும்பத்தை என்று அரசாங்கம் மிரட்டியது. பாதிக்கப்பட்ட குடும்பம் என்னைச் சந்திக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆனால் இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதுதான் முக்கியம்.
அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் இறந்தவரின் குடும்பத்தை சந்தித்து, அவர்கள் சொல்வதைக் கேட்டேன். காங்கிரஸ் கட்சியும் நானும் அந்தக் குடும்பத்திற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்.
நாட்டில் எங்கெல்லாம் தலித்துகளுக்கு எதிராகக் கொடுமைகள் நடக்குமோ, அங்கெல்லாம் காங்கிரஸ் இருக்கும், நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்வோம், நீதிக்காகப் போராடுவோம்." என்று தெரிவித்தார்.
- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
- சென்னை பெருநகரில் பட்டாசு விற்பனைக்கு 1088 கடைகளுக்கு தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு வெடி விபத்துக்களை எதிர்கொள்ள 8 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்களும் நாளை (18-ந் தேதி) முதல் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை பெருநகரில் மட்டும் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு நாளை மாலை 5 மணி முதல் 22-ந் தேதி காலை 8 மணி முடிய, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தீபாவளி திருநாளின்போது, சென்னை நகரில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் தீயணைப்பு வாகனங்களுக்கு, தண்ணீர் வழங்க சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடமிருந்து 50 தண்ணீர் லாரிகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து தமிழகம் முழுவதிலும் 2705 இடங்களில் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்) விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டது.
சென்னை பெருநகரில் பட்டாசு விற்பனைக்கு 1088 கடைகளுக்கு தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 770 கடைகளுக்கும் சென்னையில் மட்டும் 89 கடைகளுக்கும் தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜாதி தலைவர்களாக வரும் அமீர் மற்றும் லால் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
- குறிப்பாக இவர்கள் பேசும் வசனங்கள் கவனிக்க வைத்து இருக்கிறது.
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும் என்று அப்பா பசுபதி மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் அக்கா ரெஜிசா விஜயன், துருவ் விக்ரமுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இதனால் பெரிய கபடி வீரனாக ஆக வேண்டும் என்று துருவ் விக்ரம் ஆசைப்பட்டு வருகிறார்.
அதே ஊரில் வசிக்கும் அமீரும், லால்-லும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து கொண்டு அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். இந்த சண்டை துருவ் விக்ரம் கபடி விளையாட்டிற்கு முட்டுக் கட்டியாக இருக்கிறது.
இறுதியில் தடைகளை கடந்து துருவ் விக்ரம் கபடி விளையாட்டில் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் துருவ் விக்ரம், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். விளையாட்டு வீரருக்கான உடல் அமைப்பு, உடல் மொழி என கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சாதிக்க முடியாத ஏக்கம், காதல், என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரமை விடாமல் காதலிப்பது, காதலுக்காக வீட்டை எதிர்த்து சண்டை போடுவது என கவனிக்க வைத்து இருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் பசுபதியின் நடிப்பு. மகனை நினைத்து வருந்துவது, அடிவாங்குவது, என கிடைக்கும் இடங்களில் எல்லாம் அசத்தி இருக்கிறார். பாசமான அக்காவாக மனதில் பதிந்து இருக்கிறார் ரெஜிசா விஜயன்.
ஜாதி தலைவர்களாக வரும் அமீர் மற்றும் லால் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் பேசும் வசனங்கள் கவனிக்க வைத்து இருக்கிறது.
குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த ஒருவன், எப்படி வாழ்க்கையில் முன்னேறி வருகிறான் என்பதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒரு பிளாஷ்பேக் சொல்லும் போது அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக் வருவதை தவிர்த்து இருக்கிறார். வழக்கமாக அவருக்கே உரிய குறிப்பிட்ட சமூகத்தை பற்றியே படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் நீளமும், மெதுவாக செல்லும் திரைக்கதையும் பலவீனமாக அமைத்து இருக்கிறது.
எழில் அரசுவின் ஒளிப்பதிவு சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
- காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
- 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.
பேரூர்:
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசீபுரம், கெம்பனூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. அந்த யானைக்கு மக்கள் ரோலக்ஸ் என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இந்த ரோலக்ஸ யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து, விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்றது.
இதையடுத்து ரோலக்ஸ் யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து வந்தனர்.
கடந்த மாதம் வன மருத்துவர்கள் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சித்தனர். அப்போது அந்த யானை டாக்டர் விஜயராகவனை தாக்கியது. இதனால் ரோலக்ஸ் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ரோலக்ஸ் யானையை பிடிக்க வந்த, கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய 2 யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்ததால் அந்த யானைகள் மீண்டும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
அவற்றுக்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்க முயற்சி நடந்து வந்தது. நேற்றிரவு நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.
இதையடுத்து, கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் ஆகிய 4 கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ரோலக்ஸ் காட்டு யானை தொண்டாமுத்தூர் அடுத்த இச்சிக்குழி பகுதியில் நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
மயக்க ஊசி செலுத்தியதும் ரோலக்ஸ் காட்டு யானை நின்று விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கபில்தேவ், வசிம், கொம்பன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.
கடந்த சில மாதங்களாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.






