என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூரில் விசாரணையை தொடங்கும் சி.பி.ஐ. - சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை பார்வையிடும் அதிகாரிகள்
    X

    கரூரில் விசாரணையை தொடங்கும் சி.பி.ஐ. - சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை பார்வையிடும் அதிகாரிகள்

    • விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.
    • விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டினர்.

    கரூர்:

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக முதலில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையமும், சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை நடத்தி வந்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து விஜய் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, என்.பி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு கடந்த 13-ந் தேதி கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது.

    மேலும் தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்தது. வழக்கு தொடர்பான அத்தனை ஆவணங்களையும், விசாரணை விபரங்களையும் சிறப்பு புலனாய்வு குழு மற்றும் ஒரு நபர் ஆணையம் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் எப்போது வந்து விசாரணையை தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு குஜராத் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் ஏ.எஸ்.பி. முகேஷ் குமார், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று நள்ளிரவு 2 கார்களில் கரூர் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினர். சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த கார்கள் சுற்றுலா மாளிகை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தை இன்று பார்வையிட்டு விசாரணையை தொடங்க உள்ளனர். பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தங்கியுள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொடக்கத்தில் தங்கி இருந்தனர். பின்னர் கடந்த வாரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை திட்ட அலுவலகத்திற்கு தங்கள் அலுவலகத்தை இடமாற்றம் செய்தனர்.

    இன்று திட்ட அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை. இதனிடையே இன்று காலை சிறப்பு புலனாய்வுக் குழு ஏ.டி.எஸ்.பி. திருமலை சி.பி.ஐ. அதிகாரிகளை சுற்றுலா மாளிகையில் சந்தித்தார். சிறிதுநேரம் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    ஐ.ஜி.அஸ்ராகர்க் வழக்கு விவரங்கள், ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கிறார். கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் குழு இன்று விசாரணையை தொடங்க உள்ள தகவல் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.

    விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டினர். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அது தொடர்பாக எழுந்துள்ள சந்தேக கேள்விகளுக்கும் சி.பி.ஐ. விசாரணையில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×