என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.
- வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவின் மீது தொடுத்த வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதேபோல அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துவிட்டு, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்ப தொடங்கி உள்ளனர்.
பெரும்பாலானோர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு மதிப்புமிக்க மஞ்சள் உலோகமான தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை உலக அளவில் கணிசமாக அதிகரிக்க செய்துள்ளது.
தேவை அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்றது.
இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.96 ஆயிரம் வரை சென்றது. அதன்பிறகு விலை சற்று தணிய தொடங்கியது. அதாவது, 'முழம் ஏறி சாண்' சறுக்கியது.
கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளியில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தங்கம் விலை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் நிலையற்றத்தன்மை காணப்பட்டது.
தொடர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாத கனியாகவே மாறிவிட்டது. குறுகிய காலத்தில் தங்களது சேமிப்பை அதிகரிக்கும் எண்ணத்தில் சிலர் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த 9-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. அதன்பிறகும் படிப்படியாக தங்கம் விலை ஏறுமுகம் கண்டு வருகிறது.
அதன்பின்னர் கடந்த 13-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது.
இதற்கிடையே நேற்று காலை ரூ.90 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 460-க்கும், ரூ.720 அதிகரித்து சவரன் ரூ.99 ஆயிரத்து 680-க்கும் விற்கப்பட்டது.
நல்ல வேளையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டவில்லை என்று நினைத்தவர்களுக்கு சில மணி நேரங்களிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.
அதாவது மேலும் ரூ.55 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், 440 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.145-ம், சவரனுக்கு ரூ.1,160-ம் உயர்ந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில் இன்று ஏறிய வேகத்தில் குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,350-க்கும் சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 211 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.100,120
14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-12-2025- ஒரு கிராம் ரூ.215
14-12-2025- ஒரு கிராம் ரூ.210
13-12-2025- ஒரு கிராம் ரூ.210
12-12-2025- ஒரு கிராம் ரூ.216
11-12-2025- ஒரு கிராம் ரூ.209
- ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
- தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார்.
வேலூர்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளார்களா? சந்தேகப்படும் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப்படை போலீசாரும் வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் சுற்று வட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
ஸ்ரீபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. ஜனாதிபதி நாளை காலை 11.05 மணிக்கு திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் வர உள்ளதால் அவருடன் கூடுதலாக 2 ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு கருதி வர உள்ளது. அந்த 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணம் செய்ய உள்ளனர்.
தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
அவர் வருகை தரும் நேரத்தில் ஸ்ரீபுரம் -ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட உள்ளது.
அவரது வருகையை ஒட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு நாளை காலை வருகை தர உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் சோதனை ஓட்டமும், பாதுகாப்பு ஒத்திகையும் நடந்தது.
- ஆல்-ரவுண்டர் வில் ஜாக்சை சுழலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.
- காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.
கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் காணும் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சுக்கு பதிலாக ஜோஷ் டாங்கு சேர்க்கப்பட்டுள்ளார். ஆடுகளம் வேகம் குறைந்த பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தாலும் பிரதான சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆல்-ரவுண்டர் வில் ஜாக்சை சுழலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.
இங்கிலாந்தை பொறுத்தவரை பேட்டிங் சீரற்றதாக இருக்கிறது. நடப்பு தொடரில் அந்த அணியில் ஜோ ரூட் மட்டும் சதம் அடித்துள்ளார். வீரர்கள் இன்னும் அதிகமாக போராட வேண்டும் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார். ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் மிரட்டும் நிலையில், கம்மின்சின் வருகை பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதே போல் பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் கைகோர்க்கிறார். இதனால் மைக்கேல் நேசர், பிரன்டன் டாக்கெட், ஸ்காட் போலன்ட் ஆகியோரில் இருவரது இடம் காலியாகி விடும்.
மற்றபடி பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி வலு சேர்க்கிறார்கள். அதிலும் டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் கடைசியாக ஆடிய 3 டெஸ்டிலும் சதம் விளாசி இருப்பது கவனிக்கத்தக்கது.
அடிலெய்டு மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. கடைசியாக இங்கு விளையாடிய 14 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு நடந்த இரண்டு டெஸ்டிலும் எதிரணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா வரிந்து கட்டும். அவர்களின் வீறுநடைக்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போடுமா? அல்லது மறுபடியும் சரண் அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
- திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் 18-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் இந்தச் சேவைகளுக்கான மின்னணு குலுக்கல் முறைக்கு (இ-டிப்) 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதே சமயம் திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
- திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
16-ந் தேதி (செவ்வாய்)
* கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
17-ந் தேதி (புதன்)
* பிரதோஷம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
18-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
19-ந் தேதி (வெள்ளி)
* அமாவாசை.
* அனுமன் ஜெயந்தி.
* திருவரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டவம்.
* நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றியருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
20-ந் தேதி (சனி)
* விஷ்ணு ஆலயங்களில் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (ஞாயிறு)
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் பகற்பத்து உற்சவம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந் தேதி (திங்கள்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன காட்சி.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
- சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
- மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் இருந்து ஈழத் தமிழ், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் நுழைந்தவர் சீமான். நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனிடையே அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. அதனை தொடர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்தது.
இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி சீமான் பணியாற்றி வருகிறார். மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். இந்த தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
சீமான் மீது பல்வேறு வழக்குகள், அவதூறு வழக்குகள் மற்றும் விமர்சனங்கள் உள்ள நிலையில், தனது அரசியலை நோக்கி பயணித்து வருகிறார். அவர் அறிவிக்கும் போராட்டங்கள் விமர்சனங்களை பெற்றாலும் பல்வேறு கருப்பொருள் சார்ந்த மாநாடுகளை நடத்தினார்.
அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் திருத்தணியில் மரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 'மரங்களின் மாநாடு' மற்றும் மீனவர் நலன் மற்றும் கடல் சார்ந்த பிரச்சனைகளுக்காக கடந்த மாதம் "கடலம்மா மாநாடு", ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது. மேலும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு:
ஜூலை மாதம் மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகளை திரட்டி மாநாட்டினை சீமான் நடத்தினார். இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆடு,மாடுகள் முன்பு சீமான் உரையாற்றியது இணையத்தில் பேசுபொருளானது. மேலும் ஆகஸ்ட் மாதம் மாடு மேய்ப்பதற்கான தடையை நீக்கக் கோரி மலை ஏறி மாடு மேய்க்கும் போராட்டமாக மலைகளின் மாநாடு நடத்தப்பட்டது.

மரங்களின் மாநாடு:
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும், ஆனால் மரங்கள் இல்லாது மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, மரங்களை வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசுவதாகும். இம்மாநாட்டில் சீமான் கலந்துகொண்டு, அப்துல்கலாம், நம்மாழ்வார், நடிகர் விவேக் போன்றோரின் பெயரில் மரக்கன்றுகள் நட்டு, மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.
கடலம்மா மாநாடு:
"ஆதி நீயே, ஆழித்தாயே" (கடலே நீயே, கடலன்னையே நீயே) என்ற முழக்கத்துடன் கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாத்தல், கடல்சார்ந்த வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தலை வலியுறுத்தி கடலுக்குள் சென்று மாநாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆறுகளுக்கும் மாநாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடுகள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரவும், மாற்றத்தை விரும்பும் மக்களை ஒன்றிணைக்கவும் உதவுகின்றன.
சீமான் அறிவித்த மாநாடுகள் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயமாகும். மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளை அழித்து சாலைகள் விரிவாக்கம் மற்றும் வீடு கட்டுவது என பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது என்னமோ நாம் தான் என்பதை உணர வேண்டும்.
கடல், மலைகள் என பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்ல வேண்டியது நம் கடமை. ஆனால் நாம் எல்லாவற்றையும் சுயநலத்திற்காக அழித்து வருகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையோடு சிந்தித்து செயல்பட்டால் நாடு நலம் பெறும்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
சென்னை:
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-1 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி நள்ளிரவு 1.38 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : சுவாதி மாலை 4.28 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
இன்று சர்வாலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-பண்பு
சிம்மம்-பணிவு
கன்னி-பாசம்
துலாம்- உதவி
விருச்சிகம்-செலவு
தனுசு- உண்மை
மகரம்-வரவு
கும்பம்-வெற்றி
மீனம்-பக்தி
- படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
- இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பராசக்தி' படம், அடுத்தாண்டு (2026) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில் 'பராசக்தி' படத்தின் கதை இதுதான் என்று கூறும் ஒரு கதை சமூக வலைதளத்தில் உலா வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராசில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டத்தில், கிளர்ச்சியாளர்களை ஒழிக்க ஒரு அதிகாரி வருகிறார். ஆனால் அவரது சகோதரர் தான் போராட்டத்துக்கு மூலகாரணமாக இருக்கிறார்.
இறுதியில் பாசமா? நீதியா? என்ற சூழலில் நாயகன் எடுக்கும் முடிவு தான் 'பராசக்தி' படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
- 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
- மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து தீவிபத்துக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரா போலீசார் கூறுகையில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் தீயில் எரிந்து சேதமாயின. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உள்ளம் மகிழும் செய்தி அதிகாலையிலேயே வந்து சேரும். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சி உண்டு.
ரிஷபம்
மனக்குழப்பம் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
திடீர்ப் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.
கடகம்
சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். விரயங்கள் அதிகரிக்கும் நாள்.
சிம்மம்
வரவு திருப்தி தரும் நாள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பூமிவாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும்.
துலாம்
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சிகம்
யோகமான நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துத்தகராறுகள் அகலும்.
தனுசு
இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபார விரோதம் அகலும். கடன்பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.
கும்பம்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இடம், பூமியால் லாபம் உண்டு.
மீனம்
வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்டைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தி.நகர்: தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு, மெலனி சாலை, நீலகண்ட மேத்தா தெரு, வைத்யராமன் தெரு, ராமசாமி தெரு, தியாகராய சாலை, தீனதயாளன் தெரு, பாசுதேவ் தெரு, வடக்கு போக் சாலை, பனகல் பார்க், பிஞ்சலா சுப்ரமணியம் தெரு, வெங்கடேசன் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, ஜி.என். செட்டி தெரு, சிங்காரவேலு தெரு, சிவப்பிரகாசம் தெரு, ராஜா தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ராஜாபத்தர் தெரு, ராமன் தெரு, சரோஜினி தெரு, கோபால கிருஷ்ணன் தெரு, விஜயராகவ சாலை, டாக்டர் நாயர் சாலை, நானா தெரு, டேனியல் தெரு, ராஜாச்சார் தெரு, பசுல்லா தெரு, கிரியப்பா சாலை, லோடிகன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, உஸ்மான் தெரு, கிரசென்ட் தெரு, சுந்தரம் தெரு, ராஜாம்பாள் தெரு, யோகம்பாள் தெரு, சிங்காரம் தெரு, ஹனுமந்த ராவ் தெரு, ராமராவ் தெரு, சீனிவாச சாலை, ராமச்சந்திரன் சாலை, சாம்பசிவம் தெரு, ராகவய்யா சாலை, பர்கிட் சாலை, தெற்குப் போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசென்ட் தெரு, இந்தி பிரச்சார சபா தெரு
செங்குன்றம்: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுணியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞானேறு, நெற்குன்றம் கும்மனூர், அங்காடு, அருமந்தை.
பூந்தமல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, சீனிவாச நகர், மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர், ஏஎஸ்ஆர் சிட்டி எஸ்எஸ்விகே, பக்தவச்சலம் நகர் மற்றும் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.






